மன்னிப்பின் வழி! | Veritas Tamil

ஜூன் 09, செவ்வாயன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக  பார்சிலோனாவின் புகழ்பெற்ற 'லூயிஸ் கொம்பானிஸ்' ஒலிம்பிக் மைதானத்தில் (Olympic Stadium “Lluís Companys”) பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்ற திருவிழிப்பு வழிபாட்டை தலைமை தாங்கி வழிநடத்தினார். அத்திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை ஆற்றிய அருளுரை: 

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இன்று நாம் நம்பிக்கை, துன்பம், எதிர்நோக்கு மற்றும் மன்னிப்பு குறித்த வலிமையான சான்றுகளைக் கேட்டோம். வெற்றி, சாதனை அல்லது புகழை விட மேலான ஒன்றை மனித இதயம் எப்போதும் தேடுகிறது என்பதை இவை நமக்கு நினைவூட்டுகின்றன. நாம் முடிவில்லாத ஒன்றிற்காகவே படைக்கப்பட்டுள்ளோம், இந்த உலகத்தின் எந்தவொரு சாதனையும் நமது ஆழ்ந்த வேட்கையை முழுமையாகத் தணிக்க முடியாது. எனவே, கடவுளைத் தேடுவதற்கும், நமக்குள் உற்று நோக்குவதற்கும், உலகின் இரைச்சலுக்கு மத்தியில் அமைதி, செபம் மற்றும் நற்செய்திக்கான இடத்தை உருவாக்குவதற்கும் நாம் ஆரோக்கியமான ஒரு தேடலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

துன்பத்தின் யதார்த்தத்தைப் பற்றியும், குறிப்பாக பல மனிதர்கள் சுமந்து கொண்டிருக்கும் மறைவான காயங்களைப் பற்றியும் நாம் சிந்தித்துள்ளோம். மனச்சோர்வு, தனிமை மற்றும் விரக்தி ஆகியவை நமது சமூகங்கள் பெரும்பாலும் மனிதர்கள் மீது தாங்க முடியாத சுமைகளைச் சுமத்துகின்றன என்பதற்கான அறிகுறிகளாகும். இருள் சூழ்ந்த தருணங்களில், நாம் கைவிடப்பட்டதாக உணரலாம், ஆனால் கிறிஸ்துவின் சிலுவை ஒரு மாறுபட்ட உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. இயேசு மனித துன்பத்திற்குள் முழுமையாக நுழைந்து நமது வலியைத் தம்மீது சுமந்துகொண்டார். இறைவன் நமது காயங்களிலிருந்து வெகு தொலைவில் நிற்பதில்லை; அவர் நம் அருகிலேயே இருந்து, நமது கண்ணீரைப் பகிர்ந்து கொள்கிறார் மற்றும் அவரது அன்பால் நம்மைத் தாங்குகிறார். இருள் சூழும்போது, நாம் மற்றவர்களிடமிருந்து ஆதரவைத் தேட வேண்டும், மேலும் கடவுள் மௌனமாக இருப்பதாகத் தோன்றும்போதும் அவர் உடனிருக்கிறார் என்பதை நம்ப வேண்டும்.

இறுதியாக, மன்னிப்பு என்ற கடினமான பாதையை நாம் கருத்தில் கொண்டுள்ளோம். வன்முறை, அநீதி மற்றும் வேதனையான நினைவுகளை எதிர்கொள்ளும்போது, கடவுள் எங்கே இருந்தார் என்று நாம் அடிக்கடி கேட்கிறோம். இருப்பினும், கடவுள் மனிதகுலத்திற்கு சுதந்திரத்தையும் பொறுப்பையும் வழங்கியுள்ளார். கடவுள் நம்மை எத்தகைய அன்பின் வழியில் வாழ அழைத்தாரோ அந்த அன்பின்வழி வாழத் தவறும்போதே வன்முறையும் வெறுப்பும் எழுகின்றன. எனவே, மன்னிப்பு என்பது உடனடி பதில் அல்ல, மாறாக அது ஒரு பயணம். காயமடைந்த நம் இதயங்களைக் குணப்படுத்த இறைவனிடம் வேண்டுவதிலும்,  வெறுப்பை படிப்படியாக இரக்கமாய் மாற்றுவதிலுமே இந்தப் பயணம் தொடங்குகிறது. மன்னிப்பு என்பது கடந்த காலத்தை அழித்துவிடுவதில்லை அல்லது நமது பிழைகளைப் புறக்கணிக்கச் சொல்வதில்லை, ஆனால் அது நம்மை வெறுப்பிலிருந்து விடுவித்து, கடவுளோடும் நம்முடனும் ஒப்புரவாக வழிவகுக்கிறது.

நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடர்வோம். செபத்தில் ஆண்டவரைத் தேடுவோம், துன்பப்படுபவர்களுக்கு நெருக்கமாக இருப்போம், பொறுமையுடன் மன்னிப்பின் பாதையில் நடப்போம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், கடவுள் தனது இரக்கத்தின் வல்லமையையும், தனது பிரசன்னத்தின் எதிர்நோக்கையும், தனது அன்பின் மகிழ்ச்சியையும் புதிதாகக் கண்டறிய நம்மை அழைக்கிறார்.

Tamil Survey Popup Image