வரும் யூபிலி ஆண்டு, அனைத்து மக்களுக்குமான உண்மையான மனமாற்றத்தின் காலத்தைக் கொண்டுவரவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கை

இத்தாலிய எழுத்தாளர் பிரான்செஸ்கோ அந்தோனியோ க்ரானா அவர்கள் எழுதிய ‘எதிர்நோக்கின் யூபிலி’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியால் அடையாளப்படுத்தப்படும், ஆயுதங்கள் கைவிடப்படும், மரணங்களால் இலாபத்தைக் கொடுக்கும் ஆயுத தயாரிப்புகள் நிறுத்தப்படும், தூக்குதண்டனைகள் இல்லாததாகும், சிறைக்கைதிகளுக்கு கருணை மன்னிப்பு வழங்கப்படும் என அனைத்தும் நிறைந்த ஓர் உலகை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறோம் என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்ற ஆவலுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாக இந்த யூபிலி ஆண்டு இருக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட திருத்தந்தை, எந்த ஒரு போரிலும் மோதலிலும் வெற்றிகண்டவர்கள், இழப்பவர்கள் என்று எவரும் இல்லை, அனைவருமே இங்கு தோல்வியடைந்தவர்களே என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும் என மேலும் அந்த அணிந்துரையில் எழுதியுள்ளார்.

எதிர்நோக்கு என்பது, வருங்காலம் குறித்த நேர்மறைக் கருத்து மட்டுமல்ல, அது நன்மைத்தனத்திற்கான ஒரு மனிதனின் அர்ப்பணத்தால் ஊட்டம்பெறும் வாழ்க்கை முறை என உரைக்கும் திருத்தந்தை, பொதுநலனுக்கென தன் அனைத்து வளங்களையும் வழங்கி நம்பிக்கைக்கு ஊட்டமூட்டுவதாகும் இது என மேலும் தெரிவித்துள்ளார்.நம்பிக்கையுடன் பயணங்களை மேற்கொள்ளும் குடிபெயர்வோர், மாண்புடன் கூடிய வாழ்வுக்காக காத்திருக்கும் சிறைக்கைதிகள், மரணதண்டனை ஒழிக்கப்பட காத்திருப்போர் என அனைவரும் இந்த பொதுநலன் என்பதற்குள் அடங்கவேண்டும் என மேலும் உரைத்துள்ளார்.

2025ஆம் யூபிலி ஆண்டில் பல இலட்சக்கணக்கான திருப்பயணிகள் பேராலயங்களின் புனிதக் கதவுகள் வழியாக கடந்துசெல்லும்போது, அவர்களுக்கு இது ஒரு மனமாற்றத்தின் காலமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் திருத்தந்தையால் இந்த நூலின் அணிந்துரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.