டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் காத்திருக்கின்றன | ஆயர் மார்செலினோ அன்டோனியோ | Veritas Tamil

“டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் காத்திருக்கின்றன” — ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்களிடம் FABC சமூகத் தொடர்பு பணிக்குழுத் தலைவர்

“டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் காத்திருக்கின்றன” என்று, ஆசியாவின் முதல் கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்களிடம், FABC சமூகத் தொடர்பு பணிக்குழுவின் தலைவர் ஆயர் மார்செலினோ அன்டோனியோ “ஜூனி” மராலித் ஜூனியர் அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 11 அன்று, குயிசான் நகரிலுள்ள ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (RVA) வளாகத்தில் நடைபெற்ற பேரவையின் இரண்டாம் நாள் நிகழ்வில் அவர் முக்கிய உரையாற்றினார். செப்டம்பர் 10 முதல் 13 வரை நடைபெறும் இந்த நான்கு நாள் பேரவையின் கருப்பொருள்: “செல்வாக்கு செலுத்துபவர்களிலிருந்து சாட்சிகளாக: ஆசியாவில் டிஜிட்டல் மறைப்பணிக்கான இணைநடப்பு வழி.”

“திருஅவை ஏற்கனவே டிஜிட்டல் உலகில் உள்ளது”

ஆசியாவில் மக்கள் ஏற்கனவே டிஜிட்டல் தளங்களில் வாழ்கிறார்கள், தேடுகிறார்கள், உறவுகளை உருவாக்குகிறார்கள், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுகிறார்கள் என்பதை ஆயர் ஜூனி சுட்டிக்காட்டினார்.

“விவாதம் முடிந்துவிட்டது. திருஅவை ஏற்கனவே அங்கே இருக்கிறது” என்று அவர் கூறினார்.

எனவே, திருஅவை டிஜிட்டல் உலகிற்குள் செல்ல வேண்டுமா என்பது கேள்வியல்ல; மாறாக, டிஜிட்டல் உலகில் மக்களைச் சந்திக்கும்போது அவர்கள் எப்படிப்பட்ட திருஅவையை எதிர்கொள்வார்கள்? என்பதே முக்கியமான கேள்வி என்றார்.

டிஜிட்டல் மறைப்பணி என்பது வெறுமனே உள்ளடக்கங்களை உருவாக்குவது, பார்வைகள், விருப்பங்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, டிஜிட்டல் மறைப்பணி என்பது கேட்டறிதல், சந்தித்தல், பகுத்தறிதல் மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இணைநடப்புப் பயணமாக மாற வேண்டும் என்றார்.

உள்ளடக்கத்தைத் தாண்டி கிறிஸ்துவை நோக்கி

டிஜிட்டல் உள்ளடக்கம் மறைப்பணியாளரின் தனிப்பட்ட புகழையோ, தனிப்பட்ட பிராண்டையோ உருவாக்குவதற்காக இருக்கக் கூடாது. அது கிறிஸ்துவை நோக்கிச் செல்லும் கதவாகவும், நற்செய்தியை உண்மையான கிறிஸ்தவச் சாட்சியின் வழியாக மக்கள் சந்திப்பதற்கான வாய்ப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஆயர் ஜூனி கூறினார்.

“கதவைத் திறந்து, நூலை வழங்குங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்தார். டிஜிட்டல் தளங்களில் நமது இருப்பு விசுவாசத்தின் விதைகளை விதைத்து, மக்களை கிறிஸ்துவுடனான ஆழமான சந்திப்பிற்கு வழிநடத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஆசியாவின் பன்முகத்தன்மை

ஆசியாவின் டிஜிட்டல் சமூகங்கள் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சமூகச் சூழல்களை உள்ளடக்கியவை. இதனை “வாழும் இசைக்கோர்வை” என்று வர்ணித்த ஆயர் ஜூனி, ஆசியாவின் டிஜிட்டல் மறைப்பணி கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் ஏழைகளுடனான உரையாடலில் வேரூன்றியதாக இருக்க வேண்டும் என்றார்.

டிஜிட்டல் உலகின் கவனப் பொருளாதாரமும் நற்செய்தியின் அணுகுமுறையும் வேறுபட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அல்காரிதங்கள் வேகம், புதுமை, சர்ச்சை மற்றும் மக்களை நீண்ட நேரம் இணையத்தில் வைத்திருக்கும் உள்ளடக்கங்களை முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால் நற்செய்தி பொறுமை, நெருக்கம், இரக்கம் மற்றும் மனிதர்களை மாற்றத்திற்கு வழிநடத்தும் உறவுகளை அழைக்கிறது.

எனவே, டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் இணையத்தின் சத்தத்தின் ஒரு பகுதியாக மாறாமல், மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, இறைவனின் பிரசன்னத்தை உணரக்கூடிய இடங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

டிஜிட்டல் மறைப்பணிக்கான நான்கு வழிகள்

ஆயர் ஜூனி, டிஜிட்டல் மறைப்பணிக்கான நான்கு முக்கிய அணுகுமுறைகளை முன்வைத்தார்:

  1. முதலில் கேட்டறிதல்

  2. சந்திப்பைத் தேடுதல்

  3. பகுத்தறிதலை நடைமுறைப்படுத்துதல்

  4. பொதுநிலையினரை வலுப்படுத்துதல்

மேலும், டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய ஐந்து மாற்றங்களையும் அவர் முன்மொழிந்தார்:

  • உள்ளடக்கத்திலிருந்து சந்திப்பிற்கு

  • பார்வையாளர்களிலிருந்து சமூகத்திற்கு

  • வைரலிலிருந்து விசுவாசத்திற்கு

  • போட்டியிலிருந்து ஒத்துழைப்பிற்கு

  • செல்வாக்கிலிருந்து சாட்சிக்கு

செல்வாக்கிலிருந்து சாட்சிக்கு மாறுவது என்பது, நமது நம்பகத்தன்மை தயாரிப்பு தரம் அல்லது பார்வையாளர்களின் எண்ணிக்கையால் மட்டுமல்லாமல், கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பதாலும், நமது கிறிஸ்தவ வாழ்வின் உண்மைத்தன்மையாலும் உருவாக வேண்டும் என்பதாகும்.

“சமூக ஊடகம் ஒரு முன்னுணவு; நற்கருணையே இலக்கு”

“சமூக ஊடகம் ஒரு முன்னுணவு; நற்கருணையே இலக்கு” என்று ஆயர் ஜூனி கூறினார்.

டிஜிட்டல் நற்செய்திப்பணி இறுதியில் மக்களை இணையத்தில் கிடைக்கும் ஈடுபாட்டைத் தாண்டி, உண்மையான கிறிஸ்தவ சமூகத்திற்கும் திருவருட்சாதன வாழ்விற்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

உரையின் நிறைவில் டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு தெளிவான பணியை வழங்கிய அவர்,

“டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் காத்திருக்கின்றன.”

என்று கூறினார்.

“இதயத்தின் ஞானத்துடன் செல்லுங்கள்; மனித மாண்புக்காகக் குரல் கொடுங்கள்; ஆசியாவின் விசுவாசத்தின் அழகான கதைகளை எடுத்துச் சொல்லுங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

ஆசியாவின் டிஜிட்டல் உலகில் மக்கள் மற்றொரு செல்வாக்கு செலுத்துபவரை மட்டுமல்லாமல், “ஒரு உண்மையான சமூகத்தையும், இறுதியில் வாழும் இயேசு கிறிஸ்துவின் முகத்தையும்” சந்திக்க வேண்டும் என்பதே இந்தப் பணியின் நோக்கம் என்று அவர் கூறினார்.

Tamil Survey Popup Image