செவிமடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ

அகுஸ்தீனார் சபையின் தலைவராக இருந்தபோது 2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், இந்தியாவை நன்கு அறிந்தவராகவே உள்ளார் என்கிறது இந்திய அகுஸ்தீனார் சபை.
அகுஸ்தீனார் சபையின் தலைவராக இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பயணம் செய்துள்ள திருத்தந்தை, ஏழ்மை நிலையில் வாழும் மக்களுடன் மிகுந்த அக்கறைக் கொண்டு செயல்படுபவர் மட்டுமல்ல, பேசுவதை விட செவிமடுப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் எனவும் தெரிவித்தார் இந்திய அகுஸ்தீனார் துறவு சபை அருள்பணியாளர் ஜான் போஸ்கோ. 

புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் அகுஸ்தீனார் துறவு சபையின் தலைவராக இந்தியாவிற்கு இருமுறை பயணம் மேற்கொண்டபோது, 2006ஆம் ஆண்டு கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகரில் இத்துறவு சபை நடத்தும் பள்ளியைச் சென்று சந்தித்துள்ளார்.இந்தியா வந்திருந்தபோது அவர் சாதாரண அறைகளிலேயே தங்கியதாகவும், எளிமையான பயண ஏற்பாடுகளை வரவேற்றதாகவும், எவ்வகையிலும் தனிச் சலுகைகளை எதிர்பார்க்கவதராகவும் இருந்ததாக அவரோடு இந்தியாவில் பயணம் செய்த அகுஸ்தீனார் துறவிகள் எடுத்துரைத்தனர்.

எந்த ஒரு கூட்டத்திற்கு முன்பும், மறைப்பணி நிகழ்வுக்கு முன்னரும், திருநற்கருணையின் முன்பு தனிமையில் அமர்ந்து அதிக நேரம் ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்ட ஓர் ஆழமான ஆன்மீக மனிதர் நம் புதிய திருத்தந்தை என்றார் இந்திய அகுஸ்தீனார் துறவி Metro Xavier.