மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் மியான்மார் குழந்தைகள்..

மார்ச் 31, திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மியான்மாரில் வசிக்கும் குழந்தைகள் துயரங்களுக்கு மேல் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உயிர்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் அதிகப்படியான உதவிகள் மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன என்று தெரிவித்துள்ள UNICEF நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் அவர்கள், அண்மையில் மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும்  1,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 3,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று புள்ளி விவரங்களை குறிப்பிட்டுள்ள ரஸ்ஸல் அவர்கள்,  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றும், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் சூழல் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஸ்ஸல்.

சுத்தமான நீர், நலவாழ்வு, தங்குமிடம் ஆகியவை இன்றி மக்கள் மிகவும் துன்புறுகின்றார்கள் என்று தெரிவித்துள்ள ரஸ்ஸல் அவர்கள்,  மிக அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள் குழந்தைகள் என்றும், உடலளவில் காயங்களையும் மனதளவில் அதிர்ச்சியும் அடைந்துள்ள அவர்கள்,   தேவைகளை மதிப்பிடுவதற்கும் அவசர உதவிகளை வழங்குவதற்கும் யுனிசெஃப் பிற அமைப்புக்களுடன் இணைந்து செயல்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார் கேத்தரின் ரஸ்ஸல்.