ஆசிய ஆயர் பேரவைக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் கிரேசியாஸ் நியமனம்! | Veritas Tamil

2026 ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவிறுதிப்பேரவைக்கு, இந்தியாவின் மும்பை உயர் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயரான கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்களை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தமது சிறப்புத் தூதராக நியமித்துள்ளார்.

கர்தினால் கிரேசியாஸ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆசியத் திருஅவை தொடர்ந்து வளர்ச்சி பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சாட்சியமளிப்பதிலும், மனித மாண்பை மேம்படுத்துவதிலும் ஆசியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் திருஅவையின் பணியைப் பற்றி சிந்தித்த திருத்தந்தை, இன்றைய உலகின் உண்மை நிலைகளோடு ஆயர்களும் இறைமக்களும் நெருங்கிய தொடர்புடன் இருக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நமது காலத்தின் பணிகளில் உங்கள் கைகளை அழுக்காக்க அஞ்ச வேண்டாம்” என்று கூறிய திருத்தந்தை, மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு செபம், ஞானம் மற்றும் விடாமுயற்சியுடன் பதிலளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

திருஅவையின் அனைத்து செயல்பாடுகளிலும் இறைவனே மையமாக இருக்க வேண்டும் என்றும், அதன் முடிவுகளின் மையத்தில் மனிதர் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, ஏழைகள், நோயாளிகள், இடம்பெயர்ந்தோர் மற்றும் குழந்தைகள் போன்ற சமூகத்தின் ஓரங்கட்டப்பட்டவர்கள், நீதியும் இரக்கமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதில் மைய இடம் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

திருப்பாடல் 85:11-ஐ மேற்கோள்காட்டிய திருத்தந்தை, “அன்பும் உண்மையும் சந்திக்கும், நீதியும் அமைதியும் ஒன்றிணையும் உலகை” உருவாக்குமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், பிரிவினையையும் சுயநலத்தையும் உருவாக்கும் அமைப்பாக அல்லாமல், ஒன்றிப்பை உருவாக்கும் திருஅவையாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் காலத்தின் பாபேல் கோபுரத்தை உருவாக்குபவர்களாக அல்ல, ஒன்றிப்பை உருவாக்குபவர்களாகவும்; அழிவுக்குரிய கோபுரங்களை எழுப்புபவர்களாக அல்ல, வரவிருக்கும் இறையாட்சிக்குப் பணிபுரியும் ஊழியர்களாகவும் நாம் இருக்க வேண்டும்” என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

2006 முதல் 2025 வரை மும்பை பேராயராகப் பணியாற்றிய கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ், ஆசியத் திருஅவைக்கும் உலகளாவிய திருஅவைக்கும் ஆற்றிய சேவைகளுக்காக பரவலாக மதிக்கப்படுபவர். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும், வத்திக்கானின் முக்கிய ஆலோசனை அமைப்புகளின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

திருத்தந்தையின் பிரதிநிதியாக, FABC நிறைவிறுதிப் பேரவையில் நடைபெறும் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்குவதோடு, பங்கேற்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்கு திருத்தந்தையின் வாழ்த்துகளையும் நெருக்கத்தையும் எடுத்துரைப்பார்.

ஒன்றிணைந்த திருஅவையாக மாற்றம் பெற்று, ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான அழைப்பு” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிறைவிறுதிப் பேரவையில், ஆசியா முழுவதிலுமிருந்து ஆயர்கள் ஒன்று கூடவுள்ளனர். திருஅவையில் ஒன்றிப்பு, உரையாடல் மற்றும் மறைப்பணியை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் சிந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Tamil Survey Popup Image