சுமைகள் சுகமாகட்டும்…வாழ்வு இனிதாகட்டும்… | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தாலும் பல சுமைகளை வாழ்வில் சுமக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுமைகள் எல்லோர் வாழ்விலும் வந்துபோகக்கூடியதுதான் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ முடியும். நம்மில் பலர் திருமணம் ஆகிவிட்டால் நமது சுமைகள் அதிகரித்துவிடுவதாக நினைத்து திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடுகிறோம். எப்படியானாலும் சுமைகளை தாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். குடும்பம் என்பது நாம் அனைவரும் இணைந்து வாழ வேண்டிய ஒரு இடம். நாம் இணைந்து வாழந்தால்தான் அந்த இடத்திற்குரிய மதிப்பு கிடைக்கும். அதனை விடுத்து தேவையில்லாத சண்டை, சச்சரவுகளை உருவாக்கினோம் என்றால் நாம் தான் மதிப்பை இழந்துவிடுவோம்.
கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலையில்தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே முடிந்த அளவு இருவரும் போதுமான ஒத்துழைப்பை கொடுத்து நமது குடும்பத்தை முன்னேற்றுவோம். அடித்தாலும், பிடித்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வோம். நமது குழந்தைகளின் மத்தியில் அக்கறை கொண்டு அவர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்போம். அவ்வப்போது வரும் பிரச்சனைகளை பெரிதுபடுத்தாது அமைதியான மனநிலையோடு வாழ நம்மை பயிற்றுவிப்போம். தகுந்த நேரத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கவனியாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதன் விளைவுகள் விபரீதமாகிவிடும். எனவே நமது குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முயல்வோம். ஒருவர் மற்றவரின் சுமைகளை தாங்கிக் கொள்ளுங்கள் என்ற இறைவார்த்தையை வாழ்வாக்க முயல்வோம். சுமைகள் என்பவை வந்துபோகக்கூடியதுதான். ஆனால் குடும்பம் என்பது நிலையாக இருக்கக்கூடியது என்ற கருத்தை நம் மனதில் இருத்தி செயல்படுவோம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
