மன்னிக்கும் இதயம் நமதாகட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 19 ஆம் வாரம் – வியாழன்

எசேக்கியேல் 12:1-12
மத்தேயு 18: 21-19:1

மன்னிக்கும் இதயம் நமதாகட்டும்!

முதல் வாசகம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக, இஸ்ரயேல் மக்களின் ஆன்மீகக்
குருட்டுத்தனத்தையும் கீழ்ப்படியாமையையும் ஆண்டவர்
சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் கண்களால் பார்த்தும் உண்மையை
உணராதவர்களாகவும், காதுகளால் கேட்டும் இறைவார்த்தைக்குச்
செவிசாய்க்காதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை
தெளிவுப்படுத்துகிறார்.

எனவே, எசேக்கியேல் மக்களுக்கு அறிவுப்புகட்ட ஓர் அடையாளச்
செயலை செய்யும்படி ஆண்டவர் கட்டளையிடுகிறார். அவர் நாடு
கடத்தப்படுபவர் போல தனது உடைமைகளைத் தயாரித்து, பகலில்
அவற்றை வெளியே கொண்டு செல்கிறார். பின்னர் மாலையில் சுவரில்
ஒரு துளை செய்து, அதன் வழியாக அவற்றை எடுத்துக்கொண்டு
செல்கிறார். முகத்தை மூடிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறுபவர்
போல நடக்கிறார்.
இந்த அடையாளச் செயல், எருசலேம் மக்களும் அவர்களின்
தலைவர்களும் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்பதை
முன்னறிவிக்கிறது என்பதாகும்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், மன்னிப்பின் தன்மையை இயேசு பேதுருவுக்கு
எடுத்துரைத்ததை மத்தேயு குறிப்பிடுகிறார்.
பேதுரு இயேசுவிடம், “என் சகோதரர் எனக்கு எதிராகத் தவறு செய்தால்
எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?” என்று கேட்கிறார்.
அதற்கு இயேசு “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறை ஏழு” என்று
கூறுகிறார். இதனை விளக்குவதற்காக இயேசு மன்னிக்காத
பணியாளனின் உவமையை கூறுகிறார். ஓர் அரசனிடம் மிகப்பெரிய
கடன் பட்டிருந்த பணியாளனின் கடனை அரசன் இரக்கத்துடன்
மன்னிக்கிறார். ஆனால், மன்னிக்கப்பட்டவனோ, தன்னிடம் சிறிய கடன்
பட்டிருந்த சக பணியாளனை அவன் மன்னிக்க மறுக்கிறான். இதைக்
கேட்ட அரசன், அவனிடம் காட்டிய இரக்கத்தைத் திரும்பப் பெற்று,
அவனைத் தண்டிக்கிறான்.

சிந்தனைக்கு.

இறைவனின் மன்னிப்பைப் பெற்ற நாம், பிறரையும் மன்னிக்கும்
இதயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினை இன்றைய
நற்செய்தியில் மேலோங்கி உள்ளது. மேலும், ஆம், இறைவார்த்தையை
கேட்டும் அதன்படி நடக்காமல் இருப்பது ஆன்மீகக் குருட்டுத்தனம்
என்பதும் மிக முக்கிய படிப்பினையாக உள்ளது. இறைவார்த்தையைக்
கேட்பது மட்டும் போதாது; அதை ஏற்று, அதன்படி வாழ்வதே
உண்மையான கீழ்ப்படிதல்.

இன்றைய முதல் வாசகத்தில், எசேக்கியேல் இறைவனின் கட்டளையை
ஏற்று, ஒரு அடையாளச் செயலை மக்களுக்கு முன்பாகச் செய்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் இறைவார்த்தையைக் கேட்டும் அதைப்

புரிந்துகொள்ளாமல், கண்கள் இருந்தும் காணாதவர்களாகவும், காதுகள்
இருந்தும் கேளாதவர்களாகவும் இருந்தார்கள். எசேக்கியேலின் செயல்,
அவர்கள் தங்கள் தவறான பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற
இறைவனின் எச்சரிக்கையாக இருந்தது.
நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், “என் சகோதரர் எனக்கு எதிராகத்
தவறு செய்தால் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்?” என்று
கேட்கிறார். இயேசு, “ஏழுமுறை அல்ல; எழுபது முறை ஏழு” என்று
பதிலளிக்கிறார். அதாவது, மன்னிப்பிற்கு எல்லை வைக்கக்கூடாது
என்பதே இயேசுவின் போதனை.
இரண்டு வாசகங்களையும் இணைத்துப் பார்க்கும்போது நம்மில் மாற்றம்
என்பது வெளிப்புறச் செயல்களில் மட்டும் அல்ல; நமது இதயத்திலும்
ஏற்பட வேண்டும் என்பதுஅறிவுறுத்தலாக உள்ளது.

சில நேரங்களில் நாம் பிறருடைய சிறிய தவறுகளைக் கூட மனதில்
வைத்துக்கொண்டு, பல ஆண்டுகள் அவர்களை மன்னிக்காமல்
இருக்கிறோம். ஆனால் நம்முடைய பெரிய குற்றங்களையும் இறைவன்
இரக்கத்துடன் மன்னிக்கிறார். எனவே, இறைவனிடமிருந்து நாம் பெற்ற
மன்னிப்பை மற்றவர்களுக்கும் வழங்வேண்டும். இல்லையேல் அதுவே,
பெரும் பாவமாக மாறும்.

இறைவேண்டல்.
என் ஆண்டவரே, உமது வார்த்தையைக் கேட்டு வாழவும், நீர் என்னை
மன்னித்ததுபோல் பிறரை நான் மன்னிக்கவும் எனக்கு தயைப் புரிவீராக.
ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image