குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 19 ஆம் வாரம் – புதன்
எசேக்கியேல் 9: 1-7; 10: 18-22
மத்தேயு 18: 15-20
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில், எருசலம் மக்களின் பாவத்திற்கான கடவுளன்
தீர்ப்புப்பற்றிய காட்சியை வெளிப்படுத்தப்புகிறது. நகரத்தில் நடக்கும்
அருவருப்பான செயல்களைக் கண்டு மனம் வருந்தி, அவற்றை வெறுக்கும்
மக்களின் நெற்றியில் அடையாளமிடுமாறு இறைவன்
கட்டளையிடுகிறார். அந்த அடையாளம் பெற்றவர்கள் மட்டும்
தண்டனையிலிருந்து காக்கப்படுவார்கள் என்று கடவுள்
முன்னுரைக்கிறார்.
மற்றவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தீர்ப்பை எதிர்கொள்வர். பின்னர்,
கடவுளின் மாட்சியானது ஆலயத்தைவிட்டு விலகி நகரத்திலிருந்து
வெளியேறுகிறது. இது, மக்கள் தொடர்ந்து இறைவனுக்குக்
கீழ்ப்படியாமல் வாழும்போது, இறைவனின் உடனிருப்பை இழக்கும்
நிலையை எடுத்துக்காட்டுகிறது.
நற்செய்தி.
இந்த நற்செய்திப் பகுதியில், நம்மில் ஒரு சகோதரர் தவறு செய்தால்
அவரை எவ்வாறு திருத்த வேண்டும் என்பதை இயேசு
கற்றுக்கொடுக்கிறார்.
முதலில், தவறு செய்தவரிடம் தனியாகச் சென்று அவரது குற்றத்தை
எடுத்துக்காட்ட வேண்டும். அவர் செவிகொடுத்தால், அவரை மீண்டும்
நல்ல உறவுக்குள் கொண்டுவர முடியும். அவர் அறிவுரையை
ஏற்காவிட்டால், இன்னும் சிலரை அழைத்துச் சென்று அறிவுறுத்த
வேண்டும். அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால், சமூகத்தின் முன்
(திருஅவையில்) அந்த விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும்
என்கிறார் அறிவுறுத்துகிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
நற்செய்தியை சற்று ஆழ்ந்து சிந்தித்தால், குற்றம் செய்தவரை அல்லது
வழி தவறிய ஒருவரை தண்டிப்பதைவிட திருத்துவதையும், பிரிவைவிட
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையும் இன்றியமையாத பண்பாக
எடுத்துரைக்கிறார் ஆண்டவர். தவறு செய்பவரை வெறுத்து ஒதுக்காமல்,
அன்புடன் திருத்தி மீண்டும் சமூகத்துடன் இணைப்பதே கிறிஸ்தவப்
பொறுப்பும் கடமையும் ஆகும். உலகில் எவரும் எவரும்
குறைபாடற்றவர்கள் அல்ல. குறைபாடுகள், பலவீனங்கள்
கொண்டவர்களைத்தான் ஆண்டவர் சீடர்களாகத் தேர்வுச் செய்தார்.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் நம்முடைய பாவம், திருத்தம்,
மனமாற்றம் மற்றும் இறைவனின் உடனிருப்பு பற்றி சிந்திக்க
அழைக்கின்றன.
எசேக்கியேல் இறைவாக்கினர் காலத்தில் எருசலேம் மக்கள் இறைவனை
விட்டு விலகி, பல தீய செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய
பாவங்களைக் கண்டு இறைவன் துயரப்படுகிறார். ஆனால் தீமையை
வெறுத்து, மனத்தில் இறைவனுக்கு உண்மையாக இருந்தவர்களை அவர்
அடையாளமிட்டு காத்தார் என்று எசேக்கியேல் இறைவாக்குரைத்ததை
அறிந்தோம்.
பின்னர், மிகவும் வேதனையான ஒரு காட்சி வருகிறது: ஆண்டவரின்
மகிமை ஆலயத்தைவிட்டு விலகுகிறது. இதன் மூலம் ஒரு முக்கியமான
உண்மையை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்: நாம் தொடர்ந்து
பாவத்தில் வாழ்ந்து, இறைவனைப் புறக்கணித்தால், நம்முடைய
வாழ்க்கையிலிருந்து இறைவனின் உடனிருப்பை நாம் இழக்கக்கூடும்.
இதில் நாம் ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, நம்மிடையே ஒருவர் தவறு செய்தால்
என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். முதலில், அவரை
எல்லோருக்கும் முன்பாக அவமானப்படுத்தாமல், தனியாகச் சென்று
அன்புடன் அறிவுறுத்த வேண்டும். அவர் கேட்கவில்லை என்றால்,
இன்னும் சிலரை அழைத்துச் செல்ல வேண்டும்.
இதில் இயேசு நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்:
திருத்துதல் என்பது பழிவாங்குவதற்காக அல்ல; ஒருவரை மீண்டும் நல்ல
வழிக்குக் கொண்டுவருவதற்காக என்பதை நாம் மனதில் கொண்டு
செயல்பட வேண்டும்.
நாம் பல நேரங்களில் மற்றவர்களின் குறைகளை உடனடியாகக்
காண்கிறோம். ஆனால் நம்முடைய குறைகளைப் பார்க்கத் தவறுகிறோம்.
உண்மையில், “யாரும் முழுமையானவர்கள் அல்ல.” எனவே, மற்றவரைத்
திருத்தும்போது தாழ்மையுடனும் அன்புடனும் அணுக வேண்டும்.
இயேசு மேலும், “இருவர் அல்லது மூவர் என் பெயரில் கூடியிருக்கும்
இடத்தில், நானும் அவர்கள் நடுவில் இருக்கிறேன்.” இதன் மூலம்
குடும்பத்திலும், திருஅவையிலும், சமூகத்திலும் ஒற்றுமையின்
முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்துகிறார். ஒருவர் தவறு செய்தால்
அவரை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவது கிறிஸ்தவ வழி அல்ல. மாறாக,
அவரை அன்புடன் அணுகி, மனமாற்றத்திற்கும் நல்லிணக்கத்திற்கும்
வழிகாட்ட வேண்டும்.
இன்று நாம் நம்மையே மூன்று கேள்விகள் கேட்போம்:
1. மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பதற்கு முன், என்னுடைய
குறைகளை நான் பார்க்கிறேனா?
2. ஒருவர் தவறு செய்யும்போது, அவரை விமர்சிக்கிறேனா அல்லது
அன்புடன் திருத்த முயற்சி செய்கிறேனா?
தமிழில் நல்லதொரு பழமொழி உண்டு. ஆம், “குற்றம் பார்க்கின் சுற்றம்
இல்லை.” மற்றவர்களின் குறைகளை மட்டுமே
பார்த்துக்கொண்டிருந்தால், நல்ல உறவும் ஒற்றுமையும் நிலைக்காது.
மாறாக, அன்புடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, நல்லிணக்கத்தை
உருவாக்குவோர் கடவுளின் பார்வையில் பேறுபெற்றோர் ஆவர்.
இறைவேண்டல்.
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே, என் உள்ளத்தையும் என்
செயல்களையும் ஆராய்ந்து பார்க்கும் அருளைத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
