கிறிஸ்துவில் நிலையான நம்பிக்கையால் அவரது பங்காளியாகிறோம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன்
எபிரேயர் 3: 7-14
மாற்கு 1: 1: 40-45
கிறிஸ்துவில் நிலையான நம்பிக்கையால் அவரது பங்காளியாகிறோம்!
முதல் வாசகம்
இன்றைய வாசகங்களை ஆழ்ந்து கவனித்தால் பாலைநில வாழ்வு மையமாக உள்ளது. பாலைநிலம் என்பது
மக்கள் நடமாட்டம் அற்ற வெறிச்சோடிய இடம். எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம் பழைய இஸ்ரவேலர்கள் பாலைநிலத்தில் பயணித்தப்போது, கடவுளுக்கு எதிராகச் செய்தது போல் நம் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம் என்று நினைவூட்டுகிறது.
அவ்வாறு இல்லாமல், மனமாறிய யூதக் கிறிஸ்தவர்கள் இயேசுவில் தொடங்கிய வாழ்க்கைக்கு உண்மையாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவால் வாக்களிக்கப்பட்ட விண்ணக நிலைவாழ்வுக்கு இரக்கத்தைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்று ஆசிரியர் சவால் விடுக்கிறார். ‘உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாயுங்கள்’ என்று இன்றைய திருப்பாடல் பதிலுரை வலியுறுத்துவதைப்போல், கடின உள்ளம் கடவுளின் கண்டனத்திற்கு உட்பட்ட்து.
நம்பிக்கை கொள்ளாத எந்த தீய உள்ளமும், வாழும் கடவுளை விட்டு விலகும் என்கிறார் ஆசிரியர். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் அவர். நாமும் கிறிஸ்துவின் பங்காளிகள் என்றும், கிறிஸதுவில் நமது நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறோம்.
நற்செய்தி.
நற்செய்தியில், ஒரு தொழுநோயாளி நம்பிக்கையோடு இயேசுவை அணுகுகிறார். அவர், “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று இயேசுவிடம் கூறவே, இயேசு மிகுந்த இரக்கத்துடன் அவரைக் குணமாக்குகிறார், பின்னர், ‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும் என்றும், நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்’ என்று அவரை வாழ்த்தினார்.
இயேசுவால் தொழுநோயாளி குணமடைந்த செய்தி உடனே விரைவாகப் பரவியது. எனவே, அந்த ஊரில் தன்னால் தங்க முடியாது என்பதை உணர்ந்த இயேசு, தனிமையை நாடினார். ஆனாலும், செய்தி நான்கு திக்கும் பரவவே, மக்கள் அவரது இருப்பிடத்தைத் தேடிச் சென்றனர் என்று மாற்கு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
பாலைநில அனுபவம் ஒரு தனிப்பட்ட அனுபவம். விவியத்தில் பாலைநிலம் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளது. பாலைநிலத்தில் இஸ்ரயேலர் 40 ஆண்டுகள் பயணித்தனர். அது கடவுளின் திட்டமாக இருந்தது. பாலைநிலத்தில் மோசே எரியும் புதரில் கடவுளை சந்தித்தார். பாலைநிலத்தில் உள்ள சீனாய் மலையில்தான் கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார். திருமுழுக்கு யோவான் போன்ற சில இறைவாக்கனர்கள் பாலைநிலத்தில் தனியாக வாழ்ந்து தங்கள் பணிக்குத் தங்களைத் தயார்படுத்தவும் செய்தனர். இயேசுவும் 40 நாட்கள் பாலைநிலத்தில் கழித்தார்.
நற்செய்தியில் வரும் தொழுநோயாளியும் ஒரு பாலைநில பயணிதான். சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். மனைவி பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வெகு காலமாகியிருக்கலாம். அவரது ஏக்கம், அவரது கவலை, அவரது தவிப்பு அவருக்கு பாலைநிலமாக மாறியிருக்கககூடும். இயேசுவின் இரக்கத்தால் அவரது பாலைநில வாழ்வு சோலைநிலமாக மாறியது. இழந்த குடும்ப உறவை அவர் மீண்டும் பெற்றிருப்பார்.
நற்செய்தியில் இயேசுவின் கூற்றான ‘“நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்பதை நினைவகூர்ந்தால்,
இயேசு, நமது உடல், ஆன்ம சார்ந்த நோய்களை மட்டுமல்ல, நமது உறவுகளை அதிகம் பாதிக்கும் பாவத்தைப் பற்றி சிந்திக்க அழைக்கிறார். நமது ஆன்மாவில் உள்ள பாவத்தை சுத்தப்படுத்துவதன் மூலம்தான் நமது உறவை வலுப்படுத்த முடியும். முதல் வாசகத்தில், கடவுளில் நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும் என்பதால், தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டோம்.
தீய உள்ளம் பகைக்கு வழிவகுக்கும். பகைக்கு வழி வகுக்கும் எதுவும் கிறிஸ்துவுக்கு எதிரானது. வற்றிய குளத்தை பறவைகள் தேடிவருவதில்லை. அதுபோல. இரக்கமும் அன்பான வார்த்தையும்தான் மக்களிடையே நமக்கு மதிப்பும் மரியாதையும் பெற்றுத் தரும். இயேசு இவை இரண்டையும் வெளிப்படுத்தியதால் மக்கள் அவரை தேடிச் சென்றனர் என்று மாற்கு இன்றைய நற்செய்தியில் விவரிக்கிறார்.
நற்செய்திகளில் நாம் அறிவதுபோல, கிறிஸ்துவின் அன்பு மிகவும் தகுதியற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவரை அடித்து துன்புறுத்தியவர்கள், அவரை வெறுத்தவர்கள், அவருக்கு எதிராக கலகம் செய்தவர்கள், அவருடைய அன்பிற்கு தகுதியற்றவர்கள் போன்றவர்களை அவர் அன்பு செய்தார். எனவே, நாமும் இனம், சமயம், மொழி என எத்தகைய வேறுபாடும் காட்டாதவாறு அனைவரிடமும் அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்தும் சீடத்துவத்தை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். இல்லையேல் நமது உள்ளமும் ஒரு பாலைநிலம்தான். அன்புக்கான ஏக்கமும் தவிப்பும் தொடர் கதையாகும்.
இறைவேண்டல்.
விடுவிக்கும் ஆண்டவரே, நீர் மட்டுமே என் பாவத்திலிருந்து என்னை விடுவிக்க முடியும், எனவே நான் உம்மிடம் நம்பிக்கையுடன் சரணடைகிறேன். எனது உறவுகளோடு நான் நல்லிணக்கத்தில் வாழும் வரமருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452