இறையரசை நாடுவோரை கடவுள் ஒரு பொருட்டாக எண்ணுகிறார்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய்
எபிரேயர் 2: 5-12                                                                                  
மாற்கு 1: 1: 21-28
 
 
இறையரசை நாடுவோரை கடவுள் ஒரு பொருட்டாக எண்ணுகிறார்!

முதல் வாசகம்


இன்று மீண்டும் ஒருமுறை, இயேசுவின் மறை பணியில் நமது கவனத்தைச் செலுத்துகிறோம். முதல் வாசகத்தில் தந்தையான கடவுள், தமது ஒரே மகனான இயேசுவை மனுவுரு எடுக்கச் செய்து, உலக மனிதர் நிலைக்கு அவரைத் தாழ்த்தி,   அவரது பாடுகள் மற்றும் மரணத்தின் மூலம்,  மனுக்குலதை மீட்டு,  நிலைவாழ்வுக்குரிய மக்களாக  அவர்களை உயர்த்தினார் என்று கடிதத்தின் ஆசிரியர் விவரிக்கிறார்.

ஆம்,  இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்பொழுது, “கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இயேசு சாவுக்கு உட்பட வேண்டியதாயிற்று” என்று குறிப்பிடுகின்றார்.

மனிதர்களும் ஒரு படைப்புதான். எனவே,  “மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?  என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது. ஆம், மாட்சியையும் மேன்மையையும் மனுக்குலத்திற்குச்  முடியாகச் சூட்டிய கடவுள் போற்றப்படுகிறார். 

கடவுளின் மகனாக மனுவுருவானதால், இயேசு தம் மக்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை என்றும் கடிதத்தின் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். 


நற்செய்தி.


இயேசு கலிலேயா கடலைச் சுற்றி தனது ஆரம்பகால ஊழியத்தைத் தொடர்கிறார். அவர் கப்பர்நாகூமில்,  தொழுகைக்கூடத்தில் போதிக்கும் போது,  தீய ஆவி பிடித்திருந்த ஒருவர்  “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது என மாற்கு குறிப்பிடுகிறார். தொடர்ந்து, 
 இயேசு தீய ஆவி பிடித்திருந்த அவரிடமிருந்து தீய ஆவியை விரட்டி அவருக்கு நலமளிக்கின்றார். 

இவ்வாறு தீய பிடித்திருந்தவருடைய நலனுக்காக மட்டுமல்லாது, அனைவருடைய நலனுக்காகவும் இயேசு சாவுக்கு உட்படவேண்டியதாயிற்று. ஆம், நாம் அனைவரும் வாழ்வுபெறவே இயேசு சாவுக்கு உட்பட வேண்டியதாயிற்று (யோவா 10: 11) என்ற உண்மை இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இயேசு போதிப்பது மட்டுமல்லாமல், தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு தனிநபரையும் குணப்படுத்தினார்.  இதனால்,  மீண்டும், மக்கள் இயேசுவையும், அவருடைய வார்த்தைகளையும், அவருடைய செயல்களையும் கண்டு வியப்படைகிறார்கள்.  அவர்கள் மத்தியில் கடவுள் இருப்பதை உணர்கிறார்கள். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது என மாற்கு தொடர்ந்து பதிவுச் செய்துள்ளார். 


சிந்தனைக்கு.


தொடக்க நூல் முதல் அதிகாரத்தில் அனைத்தையும் ‘தோன்றுக’ என்று சொல்லியே கடவுள்  படைத்தார். ஆனால்,  “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம் என்று தான் படைத்தார். மனிதனின் படைப்பில் கடவுள் சிறப்பு அக்கறை காட்டினார் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனாலும், மனித வாழ்க்கை புல்லைப் போன்றது (திபா 103:5) அத்தகைய நிலையற்ற வாழ்க்கையைக் கொண்ட மனித பிறவிகளைக் கடவுள் ஏன்  ஒரு பொருட்டாக எண்ண வேண்டும்?  இந்த மனுக்குலத்தை மீட்க ஏன் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்ப வேண்டும்? 

மனிதன் கடவுளின் ஆவியைப் பெற்றவன். கடவுளோடு என்றும் வாழும் வரத்தைப் பெற்றவன். தொடக்கத்தில் மனிதனுக்குச் சாவு என்று ஒன்றில்லை. மனிதனின் சுயநலத்தால் சாவு உண்டானது. ஆனாலும், கடவுள் அவனை மீட்டு விண்ணுலகில் தன்னோடு இணைத்துக்கொள்ள விரும்பினார். இயேசுவை மண்ணுலகிற்கு மீட்பராக அனுப்பி வைத்தார். பாவம் பெருகும் வேளையில் கடவுளின் அருளும் பெருக்கெடுத்தது.

இவ்வேளையில் புனித அன்னை திரேசாவின் பொன்மொழியொன்று நினைவுக்கு வருகிறது. அது  ‘இவ்வுலகம் ஒரு வாடகை வீடு. நாம் செய்யும் நற்செயல்களே, இவ்வுலகிற்கு நாம் செலுத்தும் வாடகை’ என்பதாகும். இவ்வுலகம் நமது நிரந்தர இல்லம் அல்ல. ‘வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது’ என்று கவிஞர் கண்ண்தாசன் எழுதினார். 

நற்செய்தியில், இயேசு தீய ஆவியை ஓட்டி ஒருவரை குணப்படுத்துகிறார். அதைக் கண்ட மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவ்வாறுதான் இன்று நாமும் உள்ளோம். இயேசுவே எவ்வளவு உயர்த்திப் பேச முடியுமோ அவ்வளவுக்கு அவரைப் போற்றிப் பாடுகிறோம். ஏன், எதற்கு என்று அறியாமலேயே, கூட்டத்தில் ‘ஆமென், அல்லேலூயா’ என  முழங்குகிறோம்.

இதற்காக இயேசு மனுவுருவாகவில்லை. கடவுள் நம்மை ஒரு பொருட்டாக ஏற்கிறார் என்றால், நாம் வாழ்வு பெறவேண்டும் என்று  அவர் விரும்புகிறார். அவருக்கு அடிபணித்து, நமது நற்செயல்களால் இவ்வுலகிற்கு வாடகை செலுத்தி, விண்ணக வாழ்வைப் பெற்றிட முயல வேண்டும். நம்மை ஒரு பொருட்டாக எண்ணும் கடவுளுக்கு நாம் உண்மை உள்ளவர்களாக சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். வீண் பிதற்றல் அவருக்குத் தேவையிலை.  ‘“மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை’ (யோவான் 5:41) என்கிறார் நம் ஆண்டவர். 

 

இறைவேண்டல்.


ஆண்டவரே, உமது தூய ஆவியின் வல்லமையால், உமது ஆட்சியைத் தேடும் விருப்பம்  என்னில் நிலைத்திருக்கச் செய்வீராக. ஆமென்.

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452