சீடத்துவம் இறையாட்சிப் பணிக்கான அழைப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் முதல் வாரம் - திங்கள்
எபிரேயர் 1: 1-6                                                                                  
மாற்கு 1: 14-20

 
சீடத்துவம் இறையாட்சிப் பணிக்கான அழைப்பு!


முதல் வாசகம்


நாம் ஆண்டின் பொதுக்காலத்தை  இயேசுவின் பொதுப் பணியோடு தொடங்குகிறோம்.    அவர் கடவுளின் ஒரே  மகன் என்றும், மனுவுருவானவர் என்றும் அறிமுகப்படுத்தப்படுகிறார். மேலும், கடவுளின் உயிருள்ள செய்தியாக வந்தவர் என்றும் எபிரேய கடித்தத்தின் ஆசிரியர்  கூறிப்பிடுகிறார்.

முற்கால இறைவாக்கினர்கள் கடவுளின் செய்தியை அறிவித்தனர்.  ஆயினும் அவர்கள் வெறும் மனித இயல்பைக் கொண்டிருந்தனர். பின்னர், கடவுள் வாக்களித்த மீட்பருக்காகக் காத்திருந்த காலம் நெருங்கியபோது, அவர் தம் ஒரே  மகனை  மண்ணுலகத்திற்கு அனுப்பினார். மானிடமகனான இயேசு கடவுளாகவும் இருப்பதால், கடவுளின் மாட்சியை மண்ணுலகில் பிரதிபலிக்கலானார்.

மனுவுருவான இயேசு, தமது பணிவாழ்வை முடித்துக்கொண்டு, மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்திற்கு எழுந்தருளி, தந்தையாம் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்ற பேருண்மையை இன்றைய வாசகம் நமக்கு எடுததுரைக்கிறது. தொடர்ந்து, விண்ணகத்தில் உள்ள வானதூதர்களைவிட இறைமகன் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றுள்ளார் என்றும  இத்திருமுகம் நமக்கு விவரிக்கிறது.  


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான்  இயேசுவுக்கு திருமுழுக்கு அளித்ததையும்  பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் மாற்கு விவரிக்கிறார். அதே வேளையில், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தவர்,  யூதர்கள் மெசியாவுக்காகக் காத்திருந்த “காலம் நிறைவேறிவிட்டது என்றும், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்றும்,  மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்றும் போதிக்கலானார்.

இயேசு கலிலேயாக் கடலோரமாகச் செல்லும்போது,  சீமோனையும், அவரது சகோதரர்  அந்திரேயாவையும் கண்டு,  “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் என்று மாற்கு குறிப்பிடுகிறார். 

அடுத்து, சிறிது தூரம் சென்று, படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்த செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு அழைக்கவே,  அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள் என்றும் மாற்கு மேலும் விவரிக்கிறார்.


சிந்தனைக்கு.
     

முதல் வாசகத்தில் இயேசுவைப் பற்றிய தலைசிறந்த இறையியலை நாம் அறிகிறோம்.   வாசகத்தின் இறுதிப்பகுதியில் ‘ இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்’ என்ற முத்தான வரிகளைப் பதிவுச் செய்துள்ளார் எபிரேய திருமுகத்தை எழுதிய ஆசிரியர்,  

இயேசுவின் வருகைக்கு, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொடக்க நூலின்  முதல் அதிகாரத்தில்  “தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார்” என்று வாசிக்கின்றோம். அப்போது,  இயேசுவம் கடவுளோடு உடனிருந்தார் என்று கூறப்படவில்லை.  ஆனால், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியரோ,  கடவுள் இயேசுவின் வழியாக உலகங்களைப் படைத்தார்” என்று உறுதிபட கூறுகிறார்.

ஆம், யோவான் தமது நற்செய்தியில் (முதல் அதிகாரத்தில்) வெளிப்படுத்திய,  “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது” என்ற இறைவார்த்தையோடு சிந்தித்துப் பார்த்தால் இயேசு யார் என்பது தெளிவுப்பெறும். இதுவரை மூவொரு கடவுள் குடும்பத்தில்,  இயேசு எனும் இரண்டாம் ஆள் பற்றிய உண்மை மறைவாக இருந்ததை இன்று அறிய வருகிறோம். 

ஆம், இயேசு படைக்கப்பட்டவர் அல்ல. நமது நம்பிக்கை அறிக்கையில் (விசுவாசப் பிரமாணத்தில்)  ‘கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாகப்பட்டவர் அல்லர்’ என்றுதான் இன்றும் நாம் அறிக்கையிடுகிறோம். இந்த உணமைக்கு அடிப்படையாக அமந்துள்ளது எபிரேய திருமுகத்தின் கடவுள் ‘இயேசுவின் வழியாக உலகங்களைப் படைத்தார்”  என்பது. 

யோவான் நற்செய்தியில், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை’ (14:6) என்று இயேசுவே கூறுகிறார். எவ்வாறு உலகம் அவர் வழியாகப் படைக்கப்பட்டதோ, அவ்வாறே இயேசு வழியாவே நாம் விண்ணகம் செல்ல முடியும். இதற்கு வழிவகுக்கவே ஆண்டவர் திருஅவையை எற்படுத்தினார். அந்த திருஅவையை ஏற்படுத்த அவருக்குத் தொடக்கத்தில் சில சீடர்கள் தேவைப்பட்டனர். அவர்களில் நால்வரை இன்று அவர் அழைத்ததை நற்செய்தியில் கண்டோம். இரு குடும்பங்கில் இருந்து நால்வரை அவர் அழைத்தார். 

இந்த மண்ணுலகில் இறையரசை நிறுவ அனுப்பப்பட்ட இயேசுவும் தம்முடைய மரணத்திற்குப்பின் இறையரசை இங்கு விதைக்கச் செய்யும் பணியைத் தொடர தன் சீடர்களைத் தேர்வு செய்தார்.  

கடவுளின் அழைப்பு என்பது உன்னதமான கொடையாகும். கடவுள் அந்தக் கொடையை நம்முடைய திறமையை பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ, அந்தஸ்தைப் பார்த்தோ கொடுப்பதில்லை. அவர் நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். இங்கே, ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம், கடவுள் தகுதியுள்ளவரை அழைப்பவர் அல்ல; மாறாக, தகுதியற்றவரையும் அழைத்து தகுதிப்படுத்துபவர். 

இறையாட்சிப் பணியைச் செய்யத் தான் இயேசு சீடர்களை அழைத்தார். மாறாக, கிறிஸ்தவப் பெயரை வைத்துக்கொண்டு, பேருக்கும் புகழுக்கும் வாழ அல்ல. கிறிஸ்தவப் பெயரால் நாம் கிறிஸ்துவின் சீடராகிவிட முடியாது. இயேசு சீடர்களை அழைத்தவுடன் "உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்" (மாற்: 1:18) என்று வாசிக்கின்றோம். சீடர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை இது சுட்டிக்காட்டுகின்றது. இன்று நமக்கு அந்த ஆழந்த நம்பிக்கை உண்டா? பெயர், புகழ். செல்வாக்கு என்று சீடத்துவ வாழ்வை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டிருந்தால், நாம்  நாமாகத்தான் இருப்போம், சீடராக அல்ல.

நாம் கொண்ட கிறிஸ்தவப் பெயரால் கிறிஸ்துவம் மாட்சியுற வேண்டும். இல்லையேல், நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம். 

 

இறைவேண்டல்.

மீனவர்களையும் அழைத்து உமது சீடத்துவத்திற்கு தகுதிப்படுத்திய ஆண்டவரே,  தகுதியற்ற என்னையும்  அழைத்து இறையாட்சியின் மதிப்பீடு இம்மண்ணில் விதைக்கப்பட திருவுளம் கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452