இயேசுவின் அழைப்பை ஏற்போர் வாழ்வு பெறுவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

21 செப்டம்பர் 2023,                                                                                           பொதுக்காலம் 24 ஆம் வாரம் –சனி
புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் (விழா)

எபேசியர்  4: 1-7, 11-13
மத்தேயு  9: 9-13


இயேசுவின் அழைப்பை ஏற்போர் வாழ்வு பெறுவர்!
 

இன்று நாம் நற்செய்தியாளர்களில் ஒருவரான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம்.  இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் இவரது வாழ்வும், இவரது விழாவும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.  


முதல் வாசகம்.

 
முதல் வாசகத்தில்  புனித பவுல் திருஅவையையொட்டி பேசுகிறார்.  திருஅவையில் நம்பிக்கையாளர்களின் ஒன்றிப்பை நிலைநாட்டுவதும்  கிறிஸ்துவின் திருவுடலாகிய திருஅவையைக்   கட்டியெழுப்புவதும் நமது   இன்றிமையாதக் கடமை என்கிறார்.

திருஅவை தூய ஆவியாரில்,  ஒரே உடலையும் ஒரே ஆவியையும் கொண்டுள்ளது. ஒரே இறைவன், ஒரு நம்பிக்கை மற்றும் ஒரே திருமுழுக்கு என்பதும் எல்லாவற்றிலும் செயல்படுபவர்  ஒரே கடவுள் என்பதும் அவரது போதனையாக உள்ளது. நிறைவாக, கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிறார்.


நற்செய்தி


இன்றைய நற்செய்தி மத்தேயு என்ற திருத்தூதரைப் பற்றிய சிறந்த பார்வையை நமக்குத் தருகிறது. உரோமையரின்  அடக்குமுறை அரசாங்கத்தின் பணியாளராக சுங்கத்துறையில்    ஒரு சுங்க முகவராக அல்லது வரி வசூலிப்பவராக வேலை செய்து வந்தார். உரோமையரின் கையாள் என்று கூறலாம். இதனால் யூதர்களால் இவர் அதிகம் வெறுக்கப்பட்டார். யூதர்கள் சுங்கத்துறையில் வரி வசூலிப்பவர்களைத்  துரோகிகள், திருடர்கள் மற்றும் பாவிகள் என்று முத்திரைக்குத்தினார்கள்.  இதற்கு காரணமும் உண்டு.

மத்தேயு உரோமை அரசுக்கு வரி வசூலித்தாலும் அவர் நேரடியாக ஆளுநர் ஏரோதுவின் பார்வையில் இருந்தார்.  மத்தேயு வரி வசூலித்த இடம்  கப்பா்நாகும்.  பல இடங்களிலிருந்து வரும்  சாலைகள் சேரும் இடம்.   எனவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கட்டாயம் கப்பார்நாகும் வந்துதான் செல்ல வேண்டும். எனவே, பல ஊர் வணிகர்கள் இங்கே கூடுவதுண்டு. அவர்கள் இங்கே வரி செலுத்தியாக வேண்டும். இதில் வரி வசூலிப்பவருக்கு கையூட்டும், வருமானமும் கிடைக்கும். மேலும், உரோமை அரசர்கள் தங்களின் தேவைக்காக அடிக்கடி  வரியை உயர்த்துவதுண்டு. இதனால் யூதர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இத்தொழிலில்தான் மத்தேயு ஈட்டுபட்டிருந்தார். 


மத்தேயுவை  “என்னைப் பின்செல்!” என்று இயேசு வெறுமனே அழைத்தார்.  அவரும் உடனே, பண மேசையை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்.   இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் மத்தேயு விருந்து வைக்கவும் துணிந்தார்.    அவர்களுடன்  உணவருந்தும் போது, யூத சமயத்  தலைவர்கள்,  இயேசுவை கேலி செய்யத் தொடங்கினார்கள்  
 

சிந்தனைக்கு 


நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று இயேசு கூறினது நமக்கு நினைவிருக்கும். அக்கூற்றுக்கு மத்தேயுவின் அழைப்பு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. இயேசுவால் அழைக்கப்படும்போது ஒரு பாவியாகப் பலராலும் கருதப்பட்ட லேவி எனும் மத்தேயுதான் பின்னர் நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். 

மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.   

இவரது நற்செய்திதான் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் நற்செய்தியாக அமைந்தது.   எனவேதான் புதிய ஏற்பாட்டின் முதல் நூலாக இது விளங்குகிறது. இயேசுவை யூதர்களுக்கு மெசியாவாகக் காட்டுவதற்கு மத்தேயு அதிக முயற்சி எடுத்துக்கொண்டார் என்றால் மிகையாகாது.

ஒரு வரிதண்டுபவரை இயேசு தம் சீடராக அழைத்தது மட்டுமல்ல, அவருடனும் மற்ற வரி தண்டுபவர்களுடனும் உட்கார்ந்து  விருந்து உண்டார்.  இவ்வாறாக தாழ்ந்தோரின், ஒதுக்கப்பட்டோரின் சமூக அந்தஸ்தை உயர்த்தினார். இயேசுவின் இத்தகையச் செயலைப் பரிசேயர்களால் ஏற்க முடியவில்லை.   இயேசுவிடம் குற்றம் காண முற்பட்டனர்.   ஆனால் இயேசுவோ அவர்களை பொருட்படுத்தவில்லை. ‘உலகம் ஆயிரம் சொல்லட்டும், உனக்கு நீதான் நீதிபதி’ என்பதுபோல் இருந்தது இயேசுவின் நடவடிக்கை. 

மத்தேயு நல்லதொரு யூதராக இருந்திருக்கலாம். பிற வரிதண்டுபர்களின் கெடுபிடியால் அவரும் மறுக்க இயலாமல் பாவச்  சூழலில் சிக்கியிருக்கலாம். இயேசுவின் அழைப்பு அவருக்கு மனநிம்மதியை அளித்தது. விடுதலை வாழ்வைப் பற்றிக்கொண்டார்.   நாமும் அவருக்கு விழா எடுக்கிறோம். மனமாற்றமும் மனமாற்றத்திற்கான மன்றாட்டும் நமது வாழ்வுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்பதற்கு புனித மத்தேயுவின் வாழ்வும் ஈடுபாடும் நமக்கு முன்மாதிரியாக உள்ளன. 


 இறைவேண்டல்

 பாவிகளைத் தேடி வந்த அன்பு இயேசுவே, உமது அழைப்பை ஏற்று உமக்கு இறுதி வரை நல்ல சீடராகத் திகழ்ந்த மத்தேயுவைப் போல், எனது வாழ்வும் செயலும் விளங்கிட எனக்கு வழிதுணையாக வருவீராக. ஆமென்.


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452