முயன்றால், ஆண்டவர் அரியணை முன் நிற்கும் பாக்கியம் நமக்கும் கிட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 33ஆம் வாரம் –வியாழன்
 
திருவெளி. 5: 1-10
லூக்கா 19: 41-44
  
முயன்றால், ஆண்டவர் அரியணை முன் நிற்கும் பாக்கியம் நமக்கும் கிட்டும்!
 
முதல் வாசகம்.

முதல் வாசகத்தல், யோவான் கண்ட மற்றொரு காட்சி விவரிக்கப்படுகிறது. இதில் அரியணையில் வீற்றிருந்த தந்தைக் கடவுளைக் குறிக்கும் காட்சியை யோவான் எடுத்துரைக்கிறார். கடவுளின் வலக்  கரத்தில்  ஒரு சுரளேடு இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.  ‘வலது கரத்தில்’ என்பது சுருளேட்டின் வல்லமையைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளலாம். அந்த ஏட்டில் ஏழு முத்திரை பொறிக்கப்பெற்று மூடப்பட்டிருந்தது என்கிறார் யோவான். 
அந்த முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்க தகுதி உள்ளவர் யார் என்று யோவனுக்கு உணர்த்தப்படுகிறது. மண்ணிலும், விண்ணிலும், கீழுலகிலும் வேறு எவரும் அத்தகுதியைப் பெற்றிருக்கவில்லை. எனவே, மனிதரின்  இயலாமை நினைத்தும் தனது சொந்த இயலாமையைக் குறித்தும் யோவான் அழுகிறார். அப்பொழுது மூப்பருள் ஒருவர் யோவானிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்றுவிட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்துவிடுவார்” என்று அந்த மூப்பர் கூறினார் என்று யோவான் விவரிக்கிறார்.  
அந்த யூத குலத்தின் சிங்கம். தாவீதின் குலக்கொழுந்து என்று குறிப்பிடப்படுபவர் இயேசு கிறிஸ்து என்று அறிகிறோம். இயேசு கிறிஸ்து  தனது பாடுகள், இறப்பு, உயிர்பினால் வெற்றிபெற்று, தீமையின் மொத்த  உருவான சத்தானையும் தீமைகளையும்  அழித்துவிட்டார் என்ற உண்மை இங்கே பகிரப்படுகிறது. 
அடுத்து, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன என்று யோவான் கூறுவது, இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இங்கே துன்புறும் ஊழயராக இயேசு வெளிப்படுத்தப்படுகிறார்.  அங்கே இருந்த மூப்பர்கள் கையில் யாழ், சாம்பிராணி மற்றும் பொற் கிண்ணம் இருந்தாக வாசிக்கிறோம். பொற்கிண்ணம் இறைமக்களாகிய நமது விண்ணப்பங்கள் கொண்டது என பொருள் கொள்ளலாம். 

நற்செய்தி.

புனித நகரமான எருசலேமுக்குள் நுழைவதற்கு இயேசு தயாராகி வருவதை இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகிறது.    அவர் உலகில் வாழ்ந்த காலத்தில் இந்த புனித இடத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். குறிப்பாக பாஸ்கா பெருவிழாவுக்கு அவர் இங்கை வருவதுண்டு.   யூத சட்டத்தை நிறைவேற்றும் வகையில், அவர் ஒரு குழந்தையாக இங்கு கடவுளுக்கு முன்வைக்கப்பட்டார்.
அவர் ஒரு சிறுவனாக இருந்தபோது (அவருக்கு சுமார் 12 வயதாக இருந்தபோது) யூத தலைவர்களுடன் பேசி இங்கு நேரத்தை செலவிட்டார்.  இங்குதான் தங்களின் முன்னோர்களின்  கடவுள்  வாழ்கிறார் என்று யூத மக்கள் நம்பினர்.  இயேசு இம்முறை  எருசலைமைப் பார்க்கும்போது அவர் அழத் தொடங்குகிறார்.  கடவுளின் வழிபாட்டை மையமாகக் கொண்ட இந்த இடம் இன்னும் ஏறக்குறைய   40 முதல் 45 ஆண்டுகளில் (கி.பி. 70) அழிக்கப்படும் என்பதை இயேசு உணர்ந்திருந்தார். 

சிந்தனைக்கு.

எனது சிந்தனை திருவெளிப்பாடு நூல் இன்று வெளிப்படுத்திய படிப்பினையை வட்டமிடுகிறது.  கடவுளின் உண்மையான வழிபாடு நடைபெறும் “புதிய எருசலேமான” விண்ணகத்தை அது விவரிக்கிறது.  மண்ணக்கத்தில் எழுப்பப்பட்ட இறைவனுக்கான ஆலயத்தை எதிரிகள் அழிக்கக்கூடும். ஆனால், இந்த விண்ணக  ஆலயத்தை ஒருபோதும், எந்த சக்தியாலும்  அழிக்க முடியாது.  
விண்ணக ஆலயத்தை அசுத்தப்படுத்தவும் யாராலும் இயலாது. அங்கே வணிகம் செய்து பணம் சம்பாதிக்கவும் முடியாது.   அங்கே எழுப்பப்படும் கடவுளுக்கான ஆராதனை முழங்கிக்கொண்டே இருக்கும்.  
இவ்வுலகில் நாம் வெறும் தற்காலிகப் பயணிகளே.  இந்த வாழ்க்கையில் நாம் பயணிக்கும்போது சில சூழ்நிலைகளிலும் நிகழ்வுகளிலும் இடங்களிலும் கடவுளின் உடனிருப்பை அனுபவிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்போது, அதை வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு நாள், நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்ட ஆட்டுக்குட்டியாம் கிறிஸ்துவை நாம் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் நாம் தூய வாழ்வு வாழ ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். இயேசு எருசலேமுக்கு வரவிருக்கும் அழிவைக் குறித்து கண் கல்ஙினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். அது யூதர்கள் அவர்களது கீழ்ப்படியாமையால் தங்கள்  மேல் வரவழைத்துக் கொண்ட அழிவு. ஏற்கனவே, பாபிலோனியர்களால் எருசலேம் ஆலயம் கி.மு. 587-ல் அழிக்கப்பட்டது.  திருப்பாடல் 137-ல். 'பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை (எருசலேமை)  நினைத்து அழுதோம்' என்று தொடங்கும் இப்பாடலில் இஸ்ராயேல் மக்கள் அனுபவித்த சோகம், விரக்தி, தோல்வி, ஏமாற்றம் அனைத்தும் எதிரொலிக்கின்றது. இந்நிலை மீண்டும் வரும் என்று இயேசு முன்னுரைக்கிறார். 
மனம் மாறாதவர்களுக்கான  விளைவு அழிவு என்பதை இன்று அறிய வருகிறோம். இன்று நம்மோடு இருக்கும் கடவுளின் ஆலயம் நம் உள்ளம். இந்த ஆலயத்தைப் பேணிக்காத்தால் யோவான் கண்ட விண்ணக ஆலயம் நம் வசமாகும் என்பதை நினைவில் கொள்வோம். 

இறைவேண்டல்.

என்னில் அளவற்ற அன்பு கொண்ட ஆண்டவரே, ஒரு நாள் நானும் உமது அரியணையருகில் நின்று உம்மைப் புகழ்ந்தேத்தும் வரத்தை அருள்வீராக. ஆமென்.  

  

ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                                                    ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                               +6 0122285452