ஆண்டவர், நம்மில் உறைய பொறுமையோடு காத்திருப்பவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 33ஆம் வாரம் – செவ்வாய்
திருவெளி. 3: 1-6, 14-22
லூக்கா 19: 1-10
ஆண்டவர், நம்மில் உறைய பொறுமையோடு காத்திருப்பவர்!
முதல் வாசகம்.
கடவுள் அருளிய ‘நம்பிக்கை’ எனும் கொடை உயிருடன் இருக்க வேண்டுமானால், அக்கொடை பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாசகத்தில், தொடக்கத் திருஅவைகளான சர்த்தை மற்றும் இலவோதிக்கேயா இறைமக்கள் பெரும்பாலோர் அவர்களது உற்சாகத்தை இழந்து ஆண்டவராகிய இயேசுவின் வழிகளை விட்டு வழி தவறுகிறார்கள். கடவுள் வழி தவறும் தம் பிள்ளைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார் எனும் கருபொருள் அங்கே வெளிப்படுகிறது.
சர்த்தை மற்றும் இலவோதிக்கேயா ஆகிய இந்த இரு கிறிஸ்தவ சபைகளும் முந்தைய உற்சாகத்தில் இருந்து நழுவிவிட்டனர் என்பதை யோவான் தன் காட்சியில் காண்கிறார்.
சர்த்தை மற்றும் இலவோதிக்கேயாவில் (இன்றைய மேற்கு துருக்கியில் உள்ள இடங்கள்) உள்ள கிறிஸ்தவச் சமூகங்களும் அவர்களது நம்பிக்கை வாழ்வில் உற்சாகமாக இருப்பதாக ஒரு பாசாங்கு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் நம்பிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தி அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக எழுதப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசுவிடம் திரும்புவதற்கு விழிப்புடனும் தயாராகவும் இருக்குமாறு மேற்கண்ட இரு திருஅவையினரும் கேட்டுக்களொளப்படுகிறார்கள்.
அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் வழிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும், ‘இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்’ எனும் இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் நினைவூட்டப்படுகிறார்கள்.
நற்செய்தி.
இயேசு எரிகோவுக்கு வந்து அந்த நகரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். வரி வசூலிக்கும் செல்வந்தரான சக்கேயு என்பவர், இயேசு யார் என்று பார்க்க விரும்பினார், ஆனால் அவர் உயரம் குறைவாக இருந்ததாலும், மக்கள் கூட்டமாக இருந்ததாலும் அவரால் முடியவில்லை. எனவே, அவர் இயேசுவை நன்றாகப் பார்ப்பதற்காக, முன்னால் ஓடி ஒரு மரத்தில் ஏறினார். இயேசு அந்த இடத்தை அடைந்ததும், நிமிர்ந்து பார்த்து, அவரை மேலிருந்து கீழே இறங்கி வரச் சொல்கின்றார். அது மட்டுமல்லாமல், “இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்று சொல்கின்றார்.. சக்கேயு விரைந்து வந்து மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார்.
மக்கள் இதைக் கண்டு, “இயேசு ஒரு பாவியுடன் ” என்று முணுமுணுத்தர். ஆனால் சக்கேயு எழுந்து நின்று, "நான் என் செல்வத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன், யாரையாவது ஏமாற்றினால், நான் வாங்கியதை விட நான்கு மடங்கு திருப்பித் தருவேன்" என்றார். அதற்கு இயேசு, இயேசு அவரிடம் ‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று’. இவரும் ஆபிரகாமின் மகன்தான். இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்'' என்று சொன்னார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்கள் நமது கிறிஸ்தவ வாழ்வுக்குச் சவாலாகவே இருக்கின்றன. சக்கேயுவைப் போலவும், சர்த்தை மற்றும் இலவோதிக்கேயாவில் உள்ள சிலரைப் போலவும், நாம் நம்மை அறிந்தவர்களாக உள்ளோமா’ எனும் கேள்வி எழுகிறது. நம் நிலை எத்தகையதாக இருந்தாலும் உள்ளக் கதவைத் திறந்து, ஆண்டவராகிய இயேசுவை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பது இன்று நமக்கான படிப்பினையாகவும் உள்ளது.
ஆண்டவர் இன்று நமக்கு ஓர் அழைப்பைக் கொடுக்கிறார். நாம் அழைப்பை ஏற்று, ஆண்டவராகிய இயேசுவுடன் மேசையில் அமரும்போது, நம்மிடமிருந்து இன்னும் அதிகமாக அவர் எதிர்பார்க்கிறார். பாவ பரிகாரம் இங்கே முக்கிய இடத்தைப் பெறுகிறது. தவறான வழியில் பெற்ற செல்வங்களைத் திருப்புக் கொடுத்தவிட்டால், மீண்டும் ஏழ்மை நிலையில் வாழ இயலாது என்று எண்ணி இயேசுவுக்குக் உள்ளக் கதவைத் திறக்க தயங்குகிறோம்.
சக்கேயு விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை தன் இல்லத்திற்கு வரவேற்றார் என்று வாசித்தோம். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணுமுணுத்தனர். சக்கேயு அவர்களின் குறைக்கூறலை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்றார்.
மீட்பு என்பது மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. மனமாற்றம் இல்லையேல் மீட்பு வெறும் பகல் கனவுதான். மனமாற்றத்திற்கு முயற்சி வேண்டும். சக்கேயுவின் முயற்சி அவருக்கு மீட்பதை தேடி தந்தது. இல்லையேல், ‘அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்து கொண்டு அதரிஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்’ என்றாகிவிடும்.
இயேசு மண்ணுலகில் எவரையும் தம்மிடம் வரவோ, இணையவோ வற்புறுத்தவில்லை. அவர் தேர்ந்துகொண்டோரை அழைக்கிறார். உள்ளக் கதவைத் திறந்து இயேசுவை ஏற்போருக்கு அவர் ஆசி வழங்குகிறார். முதல் வாசகத்தில். சர்த்தை மற்றும் இலவோதிக்கேயாவில் உள்ள கிறிஸ்தவச் சமூகத்தினர் அவர்களது நம்பிக்கை வாழ்வில் உற்சாகமாக இருப்பதாக பாசாங்கு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ‘பொய்’ தாண்டவம் ஆடியது. எனவேதான் அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
ஆகவே, உண்மையம். நேர்மையும் கொண்ட சீடர்களாக ஆண்டவருக்கு உள்ளத்தைத் திறந்து வைப்போம். அவர் நிச்சயம் நம்மில் தங்கி நம்மோடு விருந்துண்பார்.
இறைவேண்டல்.
இழந்து போனதைத் தேடி மீட்கவே மண்ணுலகம் வந்த ஆண்டவரே, எந்நாளும் உமது உறைவிடமாக எனது உள்ளம் இருந்திட அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452