சந்திப்பு, உறவுக்கான சந்தர்ப்பம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் 3-ம் வாரம்–சனி
இனிமைமிகு பாடல் 2: 8-14 அல்லது செப்பானியா 3: 14-18
லூக்கா 1: 39-45
சந்திப்பு, உறவுக்கான சந்தர்ப்பம்!
முதல் வாசகம்
இனிமைமிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் ஒரு காதலியின் மகிழ்ச்சியையும், செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் ஒரு மகளின் மகிழ்ச்சியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது. நாம் இனிமைமிகு பாடலை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். ஒரு காதலன் மான் போல் மலைகள் மீது குதித்து காதலியை நோக்கி ஆவலுடன் முன்னோக்கி வருவதை விவரிக்கிறது.
குளிர்காலம் முடிந்து புதிய வாழ்வு துளிர்விட்டதைப் போன்ற காட்சிகள் இதில் உள்ளன. இன்று குளிர்காலத்தின் முதல் நாள் என்றாலும், வசந்த காலத்தின் மகிழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். இன்றைய வாசகம் உற்சாகமான, மகிழ்ச்சி நிறைந்த வாசகமாக உள்ளது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகம் லூக்கா நற்செய்தியில் மட்டும் காணப்படும் மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் பகுதியை வசிக்கிறோம்.
மரியா எலிசபெத்தைக் குறித்து கபிரியேல் தூதர் வெளிப்படுத்தியச் செய்தியை ஏற்று, அவரைச் சந்திக்கபு புறப்பட்டுச் செல்கின்றார்.
ஆம், கலிலியேப் பகுதியிலிருந்து, சமாரியப் பகுதியின் ஊடே, யூதேயா வருகின்றார் மரியா. இது ஒருநாள், இரு நாள் பயணமாக இருந்திருக்க இயலாது. எலிசபெத்துவின் வீட்டை அடைந்தவுடன் மரியா அவரை வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை (திருமுழுக்கு யோவான்) மகிழ்ச்சியால் துள்ளிற்று என்றும், எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார் என்றும் லூக்கா பதிவு செய்துள்ளார்.
தூய ஆவியால் நிறைவுபெற்ற எலிசபெத்து மரியாவை நோக்கி, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?வேறு உரையாடல்கள் நிகழ்ந்ததாகக் குறுப்புகள் இல்லை. ஆனால், உடனே 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என்று எலிசபெத்து ஆச்சரிந்த்துடன் கேட்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் ஒரு காதலன் தன் காதலியைத் தேடி காடு மேடெல்லாம் தாண்டி, துள்ளிக் குதித்து வருவதை அறிந்தோம். அதே போன்ற மற்றொரு நிகழ்வை லூக்கா குறிப்பிடுகிறார மரியா தன் உறவினரில் ஒருவரான எலிசபெத்துவைச் சந்தித்து அவரது மகிழ்ச்சியில் பங்கு பெற சில நாள்கள் கரடு முரடான பாதையில் பயணித்து வருகிறார். இருவரின் சந்திப்பு ஆசீர்வதிக்கப்பட்ட சந்திப்பாக மிளிர்கிறது.
மரியாவின் பயணம் மூன்று விடயங்களைத் தாங்கியுள்ளதை அறிகிறோம். (அ) அவர் உடனே புறப்படுகின்றார், (ஆ) அவர் எந்தவொரு முன்னறிவிப்பும் தராமல் புறப்படுகின்றார், (இ) நீண்ட பயணமாக இருந்தாலும் புறப்படுகின்றார்.
ஒருவரைப் பாராடாடவும் புகழவும், ஆதாரவு வழங்கவும் முடிவு செய்தபின் முன்வைத்த காலை பின்வைப்பது உண்மை நட்புக்கு, உறவுக்கு அழகல்ல. ஒருவரை நம்மை விட மேலானவராக வாழ்துவதற்கு நல்ல மனதும் துணிவும் வேண்டும். எலிசபெத்து, தன்னை விட வயதில் இளையவரான மரியாவை ‘, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ என்று தூய உள்ளத்தோடு வாழ்த்துகிறார்.
மரியாவோ, ‘நான் உலக மீட்பரின் தாய்’ ஆகப் போகிறேன் என்ற கர்வத்தில் உழலாமல், நான் உண்டு, என் கடவுள் உண்டு என்றில்லாமல், தாழ்ச்சியோடு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்.
மரியாவின் பயணத்துக்கான காரணத்தை லூக்கா பதிவு செய்யவில்லை என்றாலும், இருவரின் சந்திப்பு பெருமகழ்ச்சியில் நிறைவு பெறுகிறது. மரியா ‘ஆண்டவரின் தாய்’ என்ற வெளிப்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்தது.
மேலும், நமது அன்றாட வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என்பதை இந்த இருவரின் சந்திப்பு நமக்குக் கற்றுத் தருகிறது. ஆம், மற்றவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவது முக்கியம். நம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு நமது உதவி தேவைப்படும்போது, நாமாகச் சென்று, அவர்களுக்கு உதவ முற்படுவது முக்கியம்.
இத்தகைய பண்பை திருவள்ளுவரும், ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’ (குறள் 788) என்றுணர்த்தினார். ஆம், பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு’ என்று இக்குறள் அறிவுறுத்துகிறது.
மற்றவர்களின் நன்மைக்காக நமது நேரத்தையும், ஆற்றலையும் தியாகம் செய்யும்போது, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு பொருளுண்டு. ஏனென்றால் இந்த பணிவான சேவையின் மூலம்தான் நாம் நிச்சயமாக கடவுளின் அன்பைப் பகிர்ந்து கொள்ள முடியும். தியாகமும் அர்ப்பணிப்பும் இல்லாத இல்லத்தில் ‘கிறிஸ்மஸ்’ கொண்டாட்டம் வெறுமை கொண்டாட்டம் என்றால் மிகையாகாது.
இறைவேண்டல்.
அன்பு ஆண்டவரே, என்னை ஒரு தூய கருவியாக ஆக்குவீராக. ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் அனைவரோடும் உமது அன்பைப் பகிரும் சீடராக என்னை ஊக்குவிப்பீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 012 228 5452