கடவுளின் திட்டத்திற்கு அர்ப்பணிப்பதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் 3-ம் வாரம் – புதன்
எரேமியா 23: 5-8
மத்தேயு 1: 18-24
கடவுளின் திட்டத்திற்கு அர்ப்பணிப்பதே சீடத்துவம்!
முதல் வாசகம்
முதல் வாசகம் மேசியாவை ( அருள்பொழிவு செய்யப்பட்டவரை) நீதியைக் கொண்டுவரும் ஒருவராக சித்தரிக்கிறது. அவர் தாவீதின் அரச வழிமரபைச் சேர்ந்த யூதாவின் துளிர் ஆவார். அவர் தம் மக்களுக்கு மீட்பைக் கொண்டுவருவார் என்ற முழக்கத்தை எரேமியா இறைவாக்கினர் வழி கேட்கிறோம்.
எரேமியா பாபிலோனிய நாடுகடத்தலின் போது யூதர்களிடம், அவர்களுடைய காலத்தின் தலைவர்களைப் போலல்லாமல், தாவீதின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் கடவுள் அனுப்புவார் என்று அவர்களிடம் இறைவாக்குரைக்கிறார். இந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவார். இவர் வலிமைமிக்க மோசேயை விட பெரியவராக இருப்பார் என்றும், அவர் ஞானமுடன் செயல்படுவார்; அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்; அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும் என்ற வாக்குறுதியை பாபிலோனில் துன்புறும் மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை வழங்குகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி, இயேசு பிறப்பதற்கு முன் நடந்த செயல்களைப் பற்றிய மத்தேயுவின் செய்தியை தருகிறது, இச்செய்தி, தாவீதின் வழித்தோன்றலான யோசேப்பை மையமாகக் கொண்டது. தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியா, அவர்கள் கூடி வாழும் முன் கருவுற்றிருந்ததை அறிந்ததும், அவர் மிகவும் கலக்கமடைந்தார். ஆனால், அவர் மரியாவை மிகவும் மதித்தார். அவரால், மரியா எப்படி கருவுற்றார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மோசேயின் சட்டத்தின்படி, யோசேப்பு மரியாவைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆனாலும், அவர் ஒரு நீதிமானாக இருந்ததால், மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அப்போது, கடவுளின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர் என்று கூறவே, யோசேப்பின் கலக்கம் தீர்ந்தது. அவரது கண்கள் திறக்கப்பட்டன.
அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து காப்பாற்றுவார். எனவே, அவர் (Yeshua) இயேசு என்று அழைக்கப்படுவார், இது "கடவுள் மீட்கிறார்" என்று பொருள்படும் என்று யோசேப்புக்கு உணர்த்தப்பட்டது. “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
யோசேப்பு மரியா இவர்களின் திருமண ஒப்பந்தம் கடவுளின் திட்டத்திற்கு உட்டபட்டது. இருப்பினும், அவர்கள் ஒரே வீட்டில் வாழத் தொடங்குவதற்கு முன்பு, மரியா கருவுற்றிருந்தது மரியாவைத் தவிரவேறு யாருக்கும் தெரியாது. மரியா தனது கர்ப்பத்தையும் அதற்கான காரணத்தையும் யோசேப்புக்குத் தெரிவித்ததாக தகவல் ஏதும் இல்லை.
கடவுள் திட்டம் ஒருபுறம், ஒன்றும் அறியா யோசேப்பு மறுபுறம். இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் ஒரு கன்னி பெண். சட்டத்தின் படி, மரியா அவர்களின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண உறுதிமொழிகளை மீறினவராக உள்ளார். இந்நிலை நீடித்தால், மரியா ஊர் பழிச்சொல்லுக்கு ஆளாவார். உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா? பலரின் தீர்ப்புக்கு மரியா ஆளாகியிருக்கக்கூடும். பொத்தி பொத்தி வளர்த்த மகள் இப்படி மோசம் போனாளே என்று யோவாக்கினும் அன்னாவும் வெளியில் தலைக்காட்ட இயலா அவமானத்திற்கு ஆளாகியிருக்கக்கூடும்.
ஆனால், உடனே கடவுள் யோசேப்புக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தினதால், யோசேப்பு அவரது முடிவை மாற்றிக்கொண்டு, கடவுளோடு ஒத்துழைத்தார். மரியாவிற்குப் பாதுகாப்பளித்தார்.
இன்று, வாழ்க்கையில் கடவுளின் செயல்களின் மறைபொருளைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். நமது வாழ்கையில் வந்து, கடந்து போக்கும் பல விடயங்களுக்கு நம்மால் விடை காண இயலாது. யோபு ஒரு நீதிமானாக இருந்தும் துன்புற்றார். எனக்கேன் துன்பம் என்று புலம்பினார். ‘“ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்
சொல்லிய அந்த இரவே!’ (3:3) என்று கூட தன்னைத் தானே சபித்துக்கொண்டார். ஆனாலும் இறுதிவரை கடவுளை அவர் தூற்றவில்லை. நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனைச் சரியாக அறிந்துணர்ந்து, அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.
மரியாவுக்குள் கடவுள் தங்க விரும்பினார். மரியா அதற்கு ‘உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார். கடவுளின் திட்டம் அன்னை மரியாவில் நிறைவேறியது. யோசேப்பும் கடவுளின் செய்திக்கு உடன்பட்டார். மீட்பருக்குத் தந்தையானார். இன்று நம்மில் பலர் எங்கோ போய் வழிபட வேண்டிய ஒருவராகக் கடவுளைப் பார்க்கின்றோம். நம்மோடு தங்க விரும்பும் ஒருவராக அவரைப் பார்ப்பதில்லை. எனவேதான். நம்மில் நிகழும் பல விடயங்கள் மறைபொருளாகவே இருந்துவிடுகின்றன.
“ஊர் ஊராய் போய் இறைவனை நாம் தேடினாலும் நமக்குள் அவரை நாம் தேடாதவரை நமது தேடல்கள் யாவும் வீண். இதனால், நம்மில் எது நடந்தாலும் அனைத்தும் மறைபொருளாகவே தோன்றும். கடவுளின் திட்டங்கள் நம் வழியாக நிறைவேற உள்ளத்தைத் திறந்து அவரது செய்தியை ஏற்று வாழ்ந்தால், கிறிஸ்மஸ் ஒரு விடியலாகும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, அன்னை மரியும் யோசேப்பும் உமது உடல் வளர்ச்சிக்கு உதவியதுபோல, நானும் உமது மறைவுடலாகிய திருஅவை வளர்ச்சிப்பு அயராது உதவிட அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452