கடவுளின் ஆசியைப் பெற வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 15 வாரம் செவ்வாய்
I: விப: 2: 1-15
II: திபா: 69: 2. 13. 29-30. 32-33
III: மத்: 11: 20-24
கடவுளுடைய ஆசியைப் பெறவேண்டுமென்று நாம் ஒவ்வொரு நாளும் நினைக்கின்றோம். ஆனால் அந்த ஆசீரை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடிவதில்லை. காரணம் நம்முடைய தகுதியற்ற உள்ளமும் பாவம் நிறைந்த வாழ்வும் தான் .
விவிலியத்தில் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் மனமாற்றம் அடைந்தவர்கள் ஆவர். குறிப்பாக இஸ்ரேல் மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருந்த போதிலும் கடவுளின் ஆசீரைப் பல நேரங்களில் இழந்தனர். காரணம் அவர்களின் சுயநலமும் பாவ வாழ்வும் தான். எனவேதான் மிகுந்த சிரமப்பட்டு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் அந்த வாக்களிக்கப்பட்ட நாட்டில் முழுமையாக தங்கள் வாழ்வை வாழ முடியவில்லை. மீண்டுமாக பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் மனமாற்றம் அடைந்த காலங்களில் கடவுளின் ஆசியை முழுமையாக சுவைத்தார்கள். மனம் மாற்றம் அடையாத காலங்களில் கடவுளின் ஆசியை முழுமையாக சுவைக்க முடியவில்லை.
புதிய ஏற்பாட்டிலும் மனமாற்றம் பெற்றவர்கள் புது வாழ்வைப் பெற்றனர். குறிப்பாக சக்கேயு வரி வசூலிக்கும் பணியின் வழியாக பாவங்கள் பல செய்தவர். ஆனால் இயேசுவைக் கண்டதும் அனைத்தையும் துறந்து மனம் மாறினார். அவர் உள்ளத்திலும் இல்லத்திலும் இயேசுவை வரவேற்றார். எனவே இயேசுவின் ஆசீரை முழுமையாக பெற்றார். மத்தேயு வரி வசூலிக்கும் பணி செய்தார். இயேசு அவரை பணிக்காக அழைத்த பொழுது அனைத்தையும் விட்டுவிட்டு மனம் மாறியவராய் சீடராக நற்செய்திப் பணி செய்தார்.
இயேசுவினுடைய நற்செய்திப் போதனைகளை கேட்டு மனம் மாறியவர்கள் நிறைவாழ்வைப் பெற்றனர். இயேசுவின் வழியாக குணம் பெற்று புது வாழ்வைப் பெற்றனர். மனம் மாறாதவர்கள் இயேசுவால் கண்டிக்கப்பட்டனர்.
இன்றைய நற்செய்தியில் கூட பல வல்ல செயல்களையும் நற்செய்தி போதனைகளையும் செய்தும் மனம் மாறாதவர்களை இயேசு கண்டித்துள்ளார். "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.
எனவே நமது அன்றாட வாழ்வில் நாம் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு நம்பி மனமாற்ற வாழ்வு வாழும் பொழுது கடவுளின் ஆசியை நிறைவாகப் பெற முடியும். இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளை நம்பாமல் பாவ வாழ்வில் வாழும் பொழுது கடவுளின் ஆசியை இழக்கிறோம். எனவே கடவுளின் ஆசியைப் பெறுவதும் பெறாமல் போவதும் நமது கையில் தான் இருக்கின்றது. கடவுளின் ஆசியைப் பெறத் தயாரா?
இறைவேண்டல்
ஆசீர்வாதத்தின் தெய்வமே இறைவா! உமது ஆசீர்வாதத்தை பெற எங்கள் பாவ வாழ்விலிருந்து மனமாற்றம் பெற்று தூய வாழ்வு வாழ தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்