அன்புச் சுவரை எழுப்புவோம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

கைகளின் அழகு அதில் அணியும் ஆபரணங்களில் இல்லை; மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில்தான் இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் திரு. சந்தீப் நந்தூரி. மக்களின் நலனில் அக்கறை காட்டுகின்ற இவர் எப்போதும் ஏதேனும் புதுமையாகச் செய்ய வேண்டும் என ஆவல் கொள்கின்றவர்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக அன்புச் சுவர் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஏற்கனவே இந்தச் சுவர் பிற மாநிலங்களில் குறிப்பாக, ஹைதராபாத், ஜெய்ப்பூர், சட்டிஸ்கர், டெல்லி, போபால் போன்ற நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

மிக அழகாக வண்ணம் பூசப்பட்டு, ஆங்காங்கே துணிகளைத் தொங்க விடுவதற்காக சிறிய கொக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். வீட்டில் பழைய பொருள்களைப் போடுவதற்கு இடமில்லை என்று கவலைப்பட வேண்டாம். அதற்கு அன்புச் சுவர் உள்ளது. அதில் நமக்குத் தேவையில்லாதத் துணிகள் மட்டுமில்லாமல், செருப்புகள், நூல்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், பைகள் என எதெல்லாம் தேவை இல்லை என்று நினைக்கின்றோமோ, அவற்றை அன்புச் சுவரில் தொங்க விட்டால் போதும். நமக்குத் தேவைப்படாத, பயன்படக்கூடிய ஒன்று நிச்சயம் இன்னொருவருக்கு, குறிப்பாக ஏழைகளுக்குத் தேவைப்படும். இதைக் கருத்தில்கொண்டுதான் அன்புச் சுவரைக் கட்டியுள்ளார் சந்திப் நந்தூரி அவர்கள்.

எங்கெல்லாம் மக்கள் அதிகமாகக் கூடுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த அன்புச் சுவரை உருவாக்கத் தீர்மானித்திருக்கிறார் இவர். நிச்சயமாக இதனால் பலப்பல ஏழைகள் பயன்பெறுவார்கள். மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற இந்த அன்புச் சுவரில் ஏராளமான பொருள்கள் தொங்கவிடப்பட்டன. அன்புச் சுவரில் வெகு நாள்கள் எதுவும் குவிந்திருப்பதில்லை. அவ்வப்போது அனைத்தையும் எடுத்துப் பிற ஏழை நிறுவனங்களுக்குக் கொடுப்பதால் எதுவும் வீணாவதுமில்லை.

"தானம் செய்யுங்கள் தேவையில்லாததை. எடுத்துச் செல்லுங்கள் தேவையானதை”. இதுதான் அன்புச் சுவர் நமக்குச் சொல்கின்ற படிப்பினையாக அமைந்திருக்கிறது. மனதிற்குள் நாமும் ஓர் அன்புச் சுவரைக் கட்டி எழுப்புவோம். நமக்குத் தேவை இல்லை என்று நினைப்பது இன்னொருவருக்குத் தேவைப்படட்டும்.

 நான் வசதியில்லாமல் வறுமையில் வாழ்கிறேன். ஆனால், வறுமையோ என்னிடம் கேட்பாரற்று வாழ்கிறது.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image