கிறித்துமஸ் நற்செய்தி பகிர்வு | அருட்பணி.பீட்டர் சூசைமாணிக்கம் | Veritas Tamil
மாசில்லாக் குழந்தைகள் தினம் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் அவதரித்தபோது அவருக்காக உயிர் நீத்த குழந்தைகளின் தியாகத்தை நினைவூட்டும்விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இயேசு பிறந்தபோது அவரைப் பார்ப்பதற்காக கிழக்குப் பகுதி நாடுகளிலிருந்து ஞானிகளும் ஜோதிடர்களும் பெத்லகேம் வந்தனர். அப்போது அவர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அலட்சியம் செய்துவிட்டு, அங்கு அரசனாக இருந்த ஏரோதுவை அணுகி, 'இஸ்ரவேல் வம்சத்தை ஆளப்போகும் யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்' என்று கேட்டனர். அதன் பொருள் அறியாத ஏரோது அவர்களை விளக்கம் கேட்க, சாஸ்திரங்களின்படி இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜா பெத்லகேமில் பிறந்திருப்பதாக அவர்கள் கணித்ததாகவும் வரும் வழியில் நட்சத்திரம் வழிகாட்டியதாகவும் கூறினர். இதனால் கலக்கமுற்ற ஏரோது, `அக்குழந்தையை நீங்கள் கண்டுபிடித்தால் என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்லி அனுப்பினான்.
மீண்டும் நட்சத்திரம் வழிகாட்ட கீழ்திசை ஞானிகள் இயேசுவைக் கண்டு வழிபட்டனர். அவர்களைத் தேவன் கனவில் எச்சரிக்க, ஏரோதுவை மீண்டும் காணாது தங்கள் தேசம் திரும்பினர். தேவன் யோசேப்பையும் கனவில் எச்சரித்து குழந்தையோடு எகிப்து தேசத்துக்கு அனுப்பினார்.
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த ஏரோது, திகைத்தான். தனது பதவிக்கு ஆபத்து விளைவிக்கப் பிறந்த அந்தக் குழந்தை எதுவென அறியாமல், பெத்லகேமில் பிறந்துள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்தையும் கொலை செய்யுமாறு ஆணையிட்டான். ஏரோதுவின் படைவீரர்கள் பெத்லகேம் நகரில் பிறந்த இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொன்று குவித்தனர்.
இயேசுவுக்காக உயிர் துறந்த அக்குழந்தைகளை வேதம், மறைசாட்சிகள் அல்லது ரத்த சாட்சிகள் என்று குறிப்பிடுகிறது. மறைசாட்சிகளான மாசில்லாத அந்தக் குழந்தைகளின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 28-ம் தேதி அன்று மாசில்லாக் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இயேசுவும் தனது வாழ்நாளில் குழந்தைகள் மீதான தன் அன்பை வெளிப்படுத்தியவாரே இருந்தார்.
`குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம்' என்று கூறினார். (மத்தேயு 19:14)
உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் குழந்தைகளின் நலனுக்காக இன்றைய நாளில் சிறப்புப் பிரார்த்தனைகளை ஏறெடுக்கிறார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆலயத்துக்கு கொண்டுவந்து ஆசிர்வதிக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.