ஏன் மே மாதம் அன்னை மரியாவின் வணக்க மாதம் ? |Veritastamil

ஏன் மே மாதம் அன்னை மரியாவின் வணக்க மாதம் அதன் வரலாறு
ஒவ்வொரு வருடமும் மே மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் சிறப்பு மாதமாகவும் நினைவு கூரப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் பாதுகாக்கின்றார் என அன்னைக்கு புகழ் பாடும் மாதமிது. அந்த வகையில் மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்.
“அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள்.
பெண்ணினத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமையாகும்.
சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் மே மாதத்தை கத்தோலிக்க திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது.
மே மாதம் முழுவதும் தினமும் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை தியானிப்பது வழக்கமாகும்.
ஏன் மே மாதம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, மே மாதம் மிகவும் புகழ்பெற்ற “வணக்க மாதம்”, அதாவது, தூய கன்னி மரியாளின் நினைவாக சிறப்பு பக்தி முயற்சிகள் செய்யப்படும் ஆண்டின் சிறப்புமிக்கதொரு மாதம் ஆகும். அது ஏன்? எப்படி மே மாதம் கன்னி மரியாளுக்கான சிறப்பு மிக்கதொரு மாதமாக மாறியது? எவ்வாறு, மே மாதமானது கன்னி மரியாளுடன் தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
பண்டைய கிரேக்க மற்றும், உரோமை கலாச்சாரத்தில் மே மாதமானது கருவுறுதல் மற்றும் வசந்த காலத்துடன் இணைக்கப்பட்ட ரோமானிய மற்றுகம் கிரேக்க தெய்வங்களான ஆர்ட்டெமிஸ் (Artemis) மற்றும் ஃப்ளோரா (Flora) போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. இதுவே, பிற்காலத்தில் வசந்த காலத்தின் புதிய பருவத்தை நினைவுகூரும் பிற ஐரோப்பிய சடங்குகளுடன் இணைந்து, பல மேற்கத்திய கலாச்சாரங்களில், மே மாதத்தை புது வாழ்வு (new life) மற்றும் தாய்மையோடு (fertility) இணைத்துப் பார்க்கும் வழக்கம் தோன்றியது. எனவேதான், இன்றும் "அன்னையர் தினத்தை” மே மாதத்தில் நாம் கொண்டாடுகின்றோம். மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலம் அதாவது மலர்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த வசந்த காலத்தில் மகப்பேறுக்கு மதிப்பளிக்கும்வண்ணம் நாம் "அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அதேவேளையில் பெண்களுக்குள் பேறு பெற்றவளும் இறைவனின் தாயுமான அன்னை மரியாளுக்கு இந்த மே மாதத்தை அர்ப்பணித்துச் சிறப்பிக்கவும் கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள்.
திருச்சபையின் ஆரம்பகாலத்தில், ஒவ்வோர் ஆண்டும் மே 15-ஆம் தேதி அன்று கன்னி மரியாவுக்கு பெரியதொரு விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் 18-ஆம் நூற்றாண்டு வரை மே மாதமானது கன்னி மரியாளுடன் எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பையும் பெற்றிருக்கவில்லை.
கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, மே மாத மரியன்னை பக்தி அதன் தற்போதைய வடிவத்தில் உரோமை நகரில் தோன்றியது. அதாவது, உரோமில் இருந்த இயேசு சபையைச் சேர்ந்த தந்தை லடோமியா (Fr.Latomia), மாணவர்களிடையே துரோகத்தையும் ஒழுக்கக்கேட்டையும் கண்டு அதற்குப் பரிகாரமாக, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மே மாதத்தை மரியாளுக்கு அர்ப்பணித்துச் செபித்திட ஒரு சபதம் செய்தார். உரோமை நகரில் இருந்துவந்த இந்த நடைமுறை, மற்ற நாடுகளில் இருந்த இயேசு சபையைக் கல்லூரிகளுக்கும் பரவியது, பின்னர் இந்நடைமுறையானது கத்தோலிக்கத் திருச்சபை எங்கும் பரவியது எனலாம்.
மேலும், மரியாளுக்கென்று ஒரு மாதத்தை அர்ப்பணிப்பது அவரைச் சிறப்பிப்பதென்பது ஒரு புதிய பாரம்பரியம் அல்ல, ஏனெனில் Tricesimum என்று அழைக்கப்படும் மரியாளுக்கு 30 நாட்களை அர்ப்பணித்து செபிக்கும் பாரம்பரியமும் ஒரு காலத்தில் திருச்சபையின் வழக்கதில் இருந்தது என்றும், இது "Lady Month" என்று அழைக்கப்பட்டதாகவும் மரியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இத்தகைய பாரம்பரியத்தைப் பின்பற்றியே, திருஅவையின் அனைத்து ஆலயங்களிலும் அன்னை மரியாவுக்கு மே மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்த 1815-ல் திருத்தந்தை 7-வது பத்திநாதர் அனுமதி அளித்தார். அவரைத் தொடர்ந்து, 1945 ஆம் ஆண்டில், திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மே 31-ஆம் தேதி அன்னை மரியாள் என்றும் அரசி என்னும் விழாவை நிறுவி மே மாதத்தை மரியாளின் மாதமாக உறுதிப்படுத்தினார். இரண்டாவது வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பிறகு, இந்த விழாவானது ஆகஸ்ட் 22-க்கு மாற்றப்பட்டது, அதே நேரத்தில் மே 31-ஆம் தேதியானது மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும் விழாவாக மாறியது. இத்தகைய மாண்பும் மகத்துவமும் மிக்க மரியாளுக்கான மே மாதக் கொண்டாட்டமானது பாரம்பரியம் நிறைந்த ஒன்றாகும் மற்றும், நமது தாயைக் கௌரவிப்பதற்கான ஆண்டின் அழகான நேரமும் ஆகும்.
Daily Program
