கிழக்கு இந்தியாவில் புனித வின்சென்ட் தெ பவுலின் சேவை மரபை நினைவுகூர்ந்த குழந்தைகள் மற்றும் பிறரன்பின் மகளிர் | Veritas Tamil
இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்வதில் புனித வின்சென்ட் தெ பவுல் கொண்டிருந்த அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பிறரன்பின் 14 மகளிரும் செப்டம்பர் 27 அன்று ரைக்கியாவில் உள்ள புனித கேத்தரின் கன்னியர் மடத்தில் ஒன்றுகூடி விழாவைக் கொண்டாடினர்.
புனித வின்சென்ட் தெ பவுலின் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்புனிதரின் நீடித்த நற்செய்திப் பணியும், நோயுற்றோருக்கான பராமரிப்பும், சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கு அவர் வழங்கிய நடைமுறை உதவிகளும் நினைவுகூரப்பட்டன.
கட்டாக்-புவனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த ரைக்கியாவில் உள்ள விஜயா மேல்நிலை இளநிலை கல்லூரியின் முதல்வர் அருள்தந்தை புருஷோத்தம் நாயக், திருப்பலியின் முதன்மைக் கொண்டாட்டுநராக இருந்தார்.
“நற்செய்தி என்பது வெறும் வார்த்தைகளிலும் செபங்களிலும் மட்டும் இருக்க முடியாது என்பதை புனித வின்சென்ட் தெ பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். அது ஏழைகள், நோயாளிகள், மறக்கப்பட்டவர்கள் மற்றும் துன்பப்படுவோர் மீது நாம் காட்டும் அக்கறையின் வழியாக வெளிப்பட வேண்டும்” என்று அருள்தந்தை நாயக் தனது மறையுரையில் கூறினார்.
கிறிஸ்தவ சீடத்துவத்தின் முக்கியமான ஓர் அங்கமாக சேவையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் இளைஞர்களை ஊக்குவித்தார்.
“சேவை செய்வதற்குப் பெரிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். நம் முன்னால் இருக்கும் நபரிடமிருந்து தொடங்குவோம் – ஏழைகள், தனிமையில் இருப்பவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் ஆகியோரிடமிருந்து தொடங்குவோம். நமது நம்பிக்கை சேவை செய்யும் கரங்களாகவும், செவிகொடுக்கும் இதயங்களாகவும், தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்வாகவும் மாறட்டும்” என்று அவர் கூறினார்.
புனித கேத்தரின் கன்னியர் மடத்தில் 10ஆம் வகுப்பு பயிலும் ராணி சிங், புனித வின்சென்ட் தெ பவுலின் முன்மாதிரி, எளிய அன்புச் செயல்களிலிருந்து சேவையைத் தொடங்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
“துன்பப்படுகின்ற ஒருவருக்கு ஓர் சிறிய அன்புச் செயலும் நம்பிக்கையைத் தரக்கூடும். நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வோம்; ஒதுக்கப்பட்டவர்களைக் கவனிப்போம்; ஒவ்வொருவரையும் மதிப்புடனும் கண்ணியத்துடனும் நடத்துவோம்” என்று அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.
புனித வின்சென்ட் தெ பவுல் 1581ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்தார். 1600ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ஏழ்மையின் நிலைமைகளை நேரடியாகக் கண்ட அவரது அனுபவங்கள், நற்செய்திப் பணிகளையும் தொண்டு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க அவரைத் தூண்டின.
1625ஆம் ஆண்டு அவர் “திருப்பணியாளர்களின் சபையை” நிறுவினார். மேலும், புனித லூயிஸ் தெ மரியாக் உடன் இணைந்து “பிறரன்பின் மகளிர் சபை” உருவாகவும் உதவினார்.
ரைக்கியாவில், பிறரன்பின் மகளிர் பல தசாப்தங்களாக இந்தச் சேவைப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். கட்டாக்-புவனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தில் அவர்களின் முதல் இல்லம், இந்தியா சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிறகு, 1947ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தற்போது இந்தச் சபை உயர் மறைமாவட்டத்தில் ஆறு சமூகங்களைக் கொண்டுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிராமப்புறப் பணிகள், அனாதை இல்லங்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், குடும்பங்களைச் சந்தித்தல், நற்செய்திப் பணி, மக்கள் மறைப்பணி, மருத்துவ முகாம்கள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ரைக்கியா அன்னை மரியாவின் பிறரன்பு பங்கின் குழந்தைகள் கழகத் தலைவர் அஜித் பிரதான், “அன்புச் செயல்களின் வழியாக வெளிப்படும் நம்பிக்கை” என்ற புனித வின்சென்ட் தெ பவுலின் பார்வை, கிழக்கு இந்தியாவில் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்குச் சேவை செய்யும் குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினருக்கு இன்றும் வாழும் உத்வேகமாக உள்ளது என்று கூறினார்.
புனித வின்சென்ட் தெ பவுல் 1660ஆம் ஆண்டு பாரிசில் இறையடி சேர்ந்தார். 1737ஆம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டார். அவரது சேவை மரபு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க சமூகங்கள் மற்றும் தொண்டு இயக்கங்கள் வழியாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
ரைக்கியாவில் நடைபெற்ற இக்கொண்டாட்டம், கிறிஸ்தவர்களுக்கு பிறரன்பு என்பது வெறுமனே தாராள மனப்பான்மையுடன் செய்யப்படும் ஒரு செயல் மட்டுமல்ல; மிகவும் தேவையில் இருப்பவர்களுக்கு சேவை செய்வதன் வழியாக நற்செய்தியை வாழ்வாக்கும் ஒரு நடைமுறை வழி என்பதையும் நினைவூட்டியது.
