உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூறும் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை, வழக்கமாக வத்திக்கானில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தனது கருத்துக்களை திருப்பீடச் செய்தியகத்திற்கு வழங்கியுள்ளார், அதன்பின் உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும், அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வரவும், கலை மற்றும் கலாச்சார விழா சிறப்பிக்கப்படுகின்றது என்று தனது மூவேளை செப உரைக் கருத்தில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 15, சனிக்கிழமை முதல் வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கலை மற்றும் கலாச்சார விழாவை முன்னிட்டு இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கலை மற்றும் கலாச்சாரங்கள், போரின் அழுகையை அமைதிப்படுத்த உதவுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.இவ்விழாவின் போது கலைஞர்கள் அனைவருடனும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும், மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போரினால் துன்புறும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து செபிப்பதை தனது வழக்கமாகக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மத்திய கிழக்கு, மியான்மர், கிவ், சூடான் பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் அமைதி கிடைக்க, அமைதிக்காக தொடர்ந்து செபிப்போம் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் மேல் அன்பு கொண்டு, உடல்நலனுக்காக செபிக்கும் அனைவருடனும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்தி நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், ஜெமெல்லி மருத்துவமனையில் தன்னை கவனமுடன் பாதுகாக்கும் மருத்துவர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்து, அவர்களது மதிப்புமிக்க மற்றும் மிகவும் கடினமான பணிக்காக செபத்தின் வழியாக அவர்களுக்கு உடனிருப்பை அளிப்போம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Daily Program
