அன்பிலார் எல்லாம் தமக்குரியர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
28 மார்ச் 2025
தவக்காலம் மூன்றாம் வாரம் – வெள்ளி
ஓசேயா 14: 1-9
மாற்கு 12: 28b-34
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஒசேயா பாவங்களை விட்டு விலகி ஆண்டரிடம் திரும்புவது பற்றிப் பேசுகிறார். நாம் கடவுளிடம் திரும்பி வந்தால், கடவுள் நமக்குப் புதிய வாழ்வையும் ஏராளமான நன்மைகளையும் தருவார் என்றும், நாம் கடவுளிடம் திரும்பினால், நாம் திடம் பெறுவதோடு, வளமான கனி தரும் மக்ககளாக மாற்றப்படுவோம் என்கிறார்.
மனமாறி அவரிடம் திரும்புவோர் " கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்” என்று உறுதிமொழி அளிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் மறைநூல் அறிஞருள் ஒருவர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? எனக் கேட்கின்றபொழுது, இயேசு அவரிடம், ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர் என்றும், உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை என்றம், ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை என்றும் எடுத்துரைகிறார். இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை என்று அறுதியுறுதியாகக் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைக் கூர்ந்து வாசித்தால் எனக்கு இரு சொற்களைப் பற்றி ஆழச் சிந்திக்கத் தோன்றுகிறது. அவை : அன்பு மற்றும் உறவு. கடவுள் அன்பாக உள்ளார் என்று மறைநூலில் அறிகிறோம். 1 யோவான் 4:8 மற்றும் 1 யோவான் 4:16. ஆகிய பகுதிகள் கடவுள் அன்பாயிருக்கிறார் என்பதை வலியுறுத்துகின்றன. ஆம், மூவொரு கடவுளாக இருக்கும் தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாரை ஒன்றிணைப்பது அன்பு. இது மூவொரு கடவுளாக உள்ள மூன்று நபர்களுக்கு இடையிலான ஆழ்ந்த உறவை எண்பிக்கின்றது..
எனவே அன்பு உறவுக்கு ஒத்ததாகும். கடவுள் இந்த அன்பை, இந்த உறவை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு, அதே அன்பையும் உறவையும் தமக்கென முழுமையாக மக்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். எனவேதான், “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” (இச 6:4) என்றும், இரண்டாவதாக, “உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” ( லேவி19:18) என்றும் முற்காலத்திலேயே தம் மக்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
இங்கே, கடவுள் மீதான நமது அன்புக்கும், அண்டை வீட்டாரின் மீதான நமது அன்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இந்த இரு நிலை அன்பையும் இறைவேண்டல், கீழ்ப்படிதல் மற்றும் தர்ம செயல்கள் வழி நம்மால் பகிர முடியும்.
பிறர்மீது அன்பு என்பது, துன்புறுபவரைப் பார்த்து ‘ஐயோ பாவம்’ என்று கூறி செல்வதல்ல. அது இரக்கமாகாது. அங்கே பரிவிரக்கம் தேவை. பரிவிக்கம் என்பது செயலில் வெளிப்படும் அன்பு. ஆண்டவர் இயேசு ‘நல்ல சமாரித்தன்’ (லூக்கா 10:25-37) உவமையில் இந்த பரிவிரக்க அன்பு என்றால் என்ன என்பதை விவரிப்பார்.
நிறைவாக, "கடவுளை அன்பு செய்வதும்... நமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் நாம் கடவுளுக்குச் செலுத்தும் பலிகளூவிட மேலானது" என்று நினைவுறுத்தப்படுகிறோம். ஆம், நமது நம்பிக்கை வெறும் சமயச் சடங்கில் அடங்கியது அல்ல. மாறாக, நமது நம்பிக்கை என்பது கடவுளுடனும், அடுத்திருப்பவருடனும் கொண்டிருக்கும் அன்பு உறவை மையமாகக் கொண்டது. இந்த இரு அன்புகளை நிறைவேற்றவே இயேசு சிலுவையல் பலியானார்.
இந்த உண்மையை எடுத்துரைக்கும் வகையில், இயேசு, நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” (“த் 5:23-24) என்று அறிவுறுத்தியதை நினவில் கொள்வோம்.
அன்பு என்பது நம் விருப்பங்களுக்கு முன்னால் மற்றவர்களுடனான உறவையும் கடவுளுடனான உறவையும் பெரிதாக நினைப்பதாகும். தியாகமின்றி இந்த இரு அன்பையும் உறவையும் நம்மால் நிறைவேற்ற முடியாது.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, உமது தூய ஆவியாரிடமிருந்து நான் பெறும் கொடைகளினால் நீர் வெளிப்படுத்திய தன்னலமற்ற அன்பைப் பிறருடன் பகிர்ந்து வாழ வரமருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452