இயேசுவே நம்மை குணப்படுத்தும் ஆன்மீக மருத்துவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
8 மார்ச் 2025
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி
எசாயா 58: 9b-14
லூக்கா 5: 27-32
இயேசுவே நம்மை குணப்படுத்தும் ஆன்மீக மருத்துவர்!
முதல் வாசகம்.
எனது சிந்தனையில், இன்றைய வாசகங்களின் மையமாக நமது ஆன்மீக நலம் உள்ளது. ஏசாயாவின் முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாகும். நாம் நமது தீய வழிகளை விட்டு விலகினால், கடவுள் நம்மைப் புதுப்பித்து, நம்மை மீட்டெடுப்பார் என்பதைத் தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகிறது.
குறிப்பாக, ‘பிறரைச் சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்’ என அறிவுறுத்தப்படுகிறோம்.
மேலும், ஆண்டவருக்கென உண்மையாக உழைப்போரை அவர் மாட்சியுறச் செய்வார் என்று இன்றைய வாசகம் குறிப்பிடுகிறது.
நற்செய்தி.
இயேசு வரி வசூலிப்பவரான லேவியை (மத்தேயு) அழைத்ததையும், இயேசுவுக்காக அவர் விருந்து வைத்ததையும் பற்றிய விபரத்தை நற்செய்தியின் வாசிக்கிறோம். இயேசு லேவயின் வீட்டில் வரிதண்டுபவர்களோடும் மற்றவர்களும் விருந்துன்பதைக் கண்டு, குறைக்கூறினர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, நான் இந்த தவக்காலத்தை எனது வருடாந்திர ஆன்மீக நலத்திற்கான பரிசோதனையாகப் பார்க்கிறேன். நாம் அனைவரும் நமது ஆன்மீக மருத்துவரிடம் சென்று ஆன்மீக பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
நம்மில் பலர், கடவுளுடனான உறவில் இருந்து பிரிந்து வாழ்வதை உணராமலும், ஆன்மீக ரீதியாக நாம் நோயுற்றிருப்பதை உணராமலும் இருக்கலாம்.
ஆதலால், நம்மை நாமே சோதித்தறிய தவக்காலமே மிகச் சிறந்த காலம். காலம் இதை தவறவிட்டால் ஆன்மீக நோயிற்கு மருத்துவம் என்பது கடினம். நற்செய்தியில், லேவியிடம் இயேசு சொன்ன முதல் வார்த்தைகள் "மனந்திரும்புங்கள்" அல்ல, மாறாக "என்னைப் பின்பற்றுங்கள்" என்பதாகும். இது ஒரு முக்கியமான விவரம். ஆண்டவர்தான் முதலில் அழைக்கிறர். அவரது அழைப்பு இன்றும் தொடர்கிறது.
அன்று, சுங்கச் சாவடியில் லேவியை (மத்தேயுவை) இயேசு பார்த்தபோது, அவருடைய ஆன்மாவின் ஆழத்தை அவர் அறிந்திருந்தார். அவருடைய பலம் மற்றும் பலவீனங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகள், சோதனைகள் மற்றும் ஆழ்ந்த ஆசைகள் ஆகியவற்றை அவர் அறிந்திருந்தார். முக்கியமானது என்னவென்றால், லேவி பூமிக்குரிய செல்வத்தைத் தேடுவதைக் கைவிட்டு, விண்ணகச் செல்வத்தை தேடி குவிக்கத் தொடங்கினார். அந்த நிமிடம் துவக்கம் அவர் இயேசுவின் உற்ற சீடரானார்.
மனந்திரும்புதல் என்பது மனநிலையில் ஏற்படும் ஒரு தீவிரமான மாற்றத்தைக் குறிக்கிறது. இது பழைய, பாவ வாழ்க்கையிலிருந்து கடவுளிடம் திரும்புவது மட்டுமல்லாமல், இயேசுவைப் போலவே அதே உணர்வுகள், மனநிலை மற்றும் அதே எதிர்நோக்கு கொண்டிருப்பதையும் குறிக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தைக் கவனித்தால், ஏசாயா கூறும் சமய வெளிவேடம், அநீதி, சுரண்டல், ஏழைகளைப் புற்றகணித்தல் போன்ற செயல்களை விட்டொழிக்க கடவுள் நம்மை அழைக்கிறார் என்பதை உணரலாம். நாமும் ஆன்மீக ரீதியில் நோயுற்றிருக்கிறோம். நமக்கும் ஆண்டவரின் மருத்துவம் தேவை என்பதை மனதார ஏற்று அவரில் அடைக்கலம் புகுந்தால், அவரோடு விருந்துண்டு வாழ்வுபெறலாம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் பின்பற்ற என்னை அழைத்திருக்கிறீர். உம்முடைய வழி என்னை கல்வாரிக்கு இட்டுச் செல்லும் வழி என்பதை உணர்ந்து உம்மை பின் செல்ல எனக்கு உதவியருளும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink