மண்ணக செல்வம் விண்ணக இழப்பு| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 8 ஆம் வாரம் –திங்கள்
சீராக். 17: 20-29
மாற்கு 10: 17-27
மண்ணக செல்வம் விண்ணக இழப்பு
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், கடவுள், எல்லாம் வல்லவர் என்றும் தம் மக்கள் அனைவரின் இதயங்களிலும் மனதிலும் உள்ள அனைத்தையும் அறிந்திருப்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது.
சீராக்கின் ஆசிரியர், கடவுள் தம் மக்க்ளை எப்போதும் அன்பு செய்கிறார் என்றும் அவரே ஆண்டவர், தலைவர் அவருக்கு உண்மையாக இருக்கும் யாவருக்கும் மிகுந்த இரக்கமும் அருளும், ஆசீர்வாதத்துடன் வெகுமதியும் அளிப்பார் என்றும் உறுதியளிக்கிறார்.
மேலும் மனந்திரும்புதல் மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அனைவரையும் மீண்டும் ஏற்றுக்கொள்ள அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து . இறைவனின் சட்டம் மற்றும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவரிடம் கூறின போது, அவர், இளமையிலிருந்தே கடைப்பிடித்து வாழ்வதாக ஒப்புகொள்கிறார்.
அடுத்து, இயேசு அவரை நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினபோது, பணக்காரர் மிகுந்த வருத்தத்துடன் அவ்விடத்தைவிட்டு உடனே வெளியேறினார்.
நிறைவாக, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” முடிவாக கூறினார்.
சிந்தனைக்கு.
‘ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்’ என்பது இந்த நாளுக்கான இறைவார்த்தைச் செய்தியாக உள்ளது., இயேசுவுடனும் அவருடைய தந்தையுடனும் நம்முடைய நம்பிக்கை உறவை ஆழப்படுத்த அழைக்கப்படுகிறோம். குறிப்பாக, இன்னும் இரு நாள்களில் தவக்காலத்தைத் தொடங்கவுள்ள நமக்கு இன்றைய வாசகச் செய்தி மிகவும் பொறுத்தமாக உள்ளது எனலாம்.
இயேசுவைப் பின்பற்றுவதில் இருந்து நமக்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் விட்டுவிட நாம் தயாராக இருந்தால் மட்டுமே, கடவுளின் ஆட்சியின் மகிழ்ச்சியை முழுமையை நாம் அனுபவிக்க முடியும். தம்மிடம் வாழ்வு தேடி அந்த பணக்காரனுக்கு ஆண்டவர் இரு கட்ட்ளைகள் கொடுத்தார்.
1. உன்னிடமுள்ள செல்வங்கள் விற்று விடு.
2. கிடைத்த ஆதாயத்தை ஏழைகளுக்குக் கொடு
புனிதம் மிகு தவக்காலத்திற்குள் காலடி வைக்கவுள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகப் பற்றிலிருந்தும் இன்பங்களிலிருந்தும் நம்மைப் பிரிக்கக் கற்றுக்கொள்வோம். அத்தோடு, நம் பாதையில் நம்மை வழிதவறச் செய்யக்கூடிய பல்வேறு ஆசைகளை, சோதனைகளை எதிர்த்து, நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும், நம் வாழ்விலும், நற்பண்புகளிலும் மனந்திரும்புதலுக்கு வழி தேட வேண்டும் என்று வாசகங்கள் நினைவூட்டுகின்றன.
‘ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!’ என்று, முதல் வாசகத்தில் வாசித்தோம். நம் பாவங்களை ஒப்புக்கொள்வதும் நாம் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் "செல்வங்களை" புறந்தள்ளுவதும் மனமாற்றத்திற்கான வழிவகைகளில் அடங்கும்.
கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத் தையோ சாவுக்குத் தப்புவிக்கும் என்கிறது நீதிமொழி (11:4). நம்முடைய செல்வங்கள் ஆண்டவருக்கு ஏற்றவை அல்ல என்று உணர்ந்து, நம்மை வெறுமையாக்குவரை நிலைவாழ்வும் நமக்குப் பகல் கனவுதான்.
உண்மையில். ஆலயக் காரியங்களுக்கு அள்ளி கொடுக்கும் பலர் அருகாமையில் இருக்கும் ஏழைக்குக் கிள்ளியும் கொடுப்பதில்லை. ஆலயத்திற்கு அள்ளி கொடுத்தால் புண்ணியம் என்று நினைக்கிறார்கள். அப்படியென்றால், இயேசு உன் செல்வத்தை எல்லாம் விற்று என்னிடம் கொடு என்றுதான் கூறியிருக்க வேண்டும். இயேசுவுக்கும் தந்தையாம் கடவுளுக்கும் நமது மண்ணக செல்வங்கள் தேவையற்றவை.
இறைவேண்டல்.
செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் என்றுரைத்த ஆண்டவரே, இவ்வுலகம் காட்டும் தற்காலிக இன்பத்தையும் செல்வத்தையும் துறந்து, உமது அரசில் நுழையும் அருளைப் பெறும் வரத்தை எனக்குத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
