பாவம் நம்மை இறைவனிடமிருந்து தூர வைக்கிறது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

31 ஜூலை 2025
பொதுக்காலம் 17ஆம் வாரம் –வியாழன்
விடுதலை பயணம 40: 16-21, 34-38
யோவான் 13: 47-53
பாவம் நம்மை இறைவனிடமிருந்து தூர வைக்கிறது!
முதல் வாசகம்.
முதல் வாசகம் விடுதலைப்பயணம் தொடங்கி ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின்னர் சீனாய் மலையடிவாரத்தில் நிகழ்வதைக் குறிக்கிறது. கடவுள் கொடுத்த கட்டளைப்படி, அவரது வழிகாட்டலைப் பின்பற்றி பத்து கட்டளைகளின் கல் பலகைகளை வைக்க மோசே ஒரு பேழையை செய்து முடிக்கிறார். ஓர் உடன்படிக்கை கூடாரமாக உருவாக்கப்பட்ட அது "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" மத்தியில் கடவுளின் வசிப்பிடமாக இருந்தது.
இன்றைய வாசகப் பகுதியில், தூய உறைவிடமான கூடாரத்தின் மீது வட்டமிடும் மேகத்தில் ஆண்டவரின் உடனிருப்பு வெளிப்படுகிறது. மேகம் மேலே எழும்பும்போது, மக்கள் கடவுளின் வசிப்பிடத்தையும் தங்கள் சொந்த கூடாரங்களையும் கட்டிக்கொண்டு, மேகத்தைப் பின்தொடர்ந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாடு நோக்கிப் பயணிப்பர்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு கடவுளின் ஆட்சியை “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும் என்று விவரிக்கிறார். இந்த உவமை உலகில் நல்லொழுக்கமுள்ளவர்களும், நல்லொழுக்கமற்றவர்களும் (தீயவர்கள்) இருக்கிறார்கள் என்ற உண்மையை மையமாகக் கொண்டுள்ளது. நியாயத்தீர்ப்பு நேரத்தில், கடவுள் வலையில் அகப்பட்ட மீன்களைப் பரிப்பதுபோல் நல்ல மக்களை கெட்டவர்களிடமிருந்து பிரிப்பார் எனும் பொருளை உணர்த்துகிறது.
சிந்தனைக்கு.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, விண்ணரசை கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பிடுகின்றார். நிறைவாக மக்களிடம், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்” என்கின்றார்கள். வழக்கமாக வகுப்புறையில் ஆசிரியர் ஒரு பாடத்தைக் கற்பித்தவிட்டு, மாணவர்களிடம் ‘எத்தனைபேருக்கு இன்றைய பாடம் விளங்கிற்று?’ என்று கேட்பார். சிலருக்கு விளங்கவில்லை என்றால் மீண்டும் விளக்க முயல்வார். இது இயல்பான ஒன்று. அவ்வாறே, இயேசுவும், மறைபொருளாக இருக்கும் விண்ணரசை சில உவமைகள் வாயிலாக எடுத்துரைத்தப்பின், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேடகிறார். சீடர்களும் “ஆம்” என்கின்றார்கள்.
முதல் வாசகத்தில் கண்ட இஸ்ரயேலர்களைப் போலவே, நாம் அனைவரும் இயேசுவால் வாக்களிக்கப்பட்ட விண்ணக நாட்டை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். கடவுள் இஸ்ராயேல் மக்களுடன் மட்டுமல்ல நம்முடனும் பயணம் செய்கிறார் என்பதையும் நான் மறந்திடலாகாது. இவ்வுலக வாழக்கைப் பயணம் நமக்கு இறுதி அல்ல. மறுவாழ்வுப்பெற்று விண்ணகத்தில் வாழவிருப்பதை இலக்காகக் கொண்டு பயணிக்கிறோம்.
"உலகத்தின் முடிவில் இப்படியே நடக்கும்; நீதிமான்களினின்று தீயோர் பிரிக்கப்பட்டு, அவர்கள் சூளையிலே போடப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்" (வச. 49-50) என்று அறிவுறுத்தப்படுகிறோம். நேர்மையாளராக வாழ முதலாவதாக, நமகக்கு நல்ல மனசாட்சி தேவை. ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று கடவுளின் சாட்சி’ என்று ஒரு பாடல் ஒலிக்கிறது. ஆகவே, மனசாட்சிக்கு நாம் அஞ்சாதபோது, கடவுளின் சாட்சி மதிப்பிழந்துவிடும்.
நாம் தினமும் நம் செயல்களைப் பற்றிச் சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் நம்மை கிறிஸ்துவிடம் நெருங்கச் செய்யும் அனைத்தையும் ஏற்று, அவரிடமிருந்து நம்மை விலக்கச் செய்யும் அனைத்தையும் நிராகரிக்க ஒரு நீடித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். இல்லையேல் நாம் நட்டாற்றில் விடப்படுவோம். நரகம் இருப்பது உண்மை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நிறைவாக, இறைமக்களாயினும், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் முடிவில் கடவுளுக்கு முன்பாக ஒரு கணக்கைக் கொடுக்க வேண்டும். இதில் தப்பிக்க இயலாது. தப்பிக்க குறுக்கு வழியும் கிடையாது.
‘ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!’ என்று பதிலுரைப்பாடலில் பாடியதுபோல், ஆண்டவரின உறைவிடமான விண்ணரசில் குடிகொள்ள நமது வாழ்க்கைமுறையைச் சீர் செய்வது சாலச் சிறந்தது.
இறைவேண்டல்.
வாழ்வளிக்கும் ஆண்டவரே, உலகப் பற்றை விட்டுவிட என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
