‘நம்மில் உள்ள விண்ணரசு’ வெளிப்பட வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
6 சனவரி 2025 திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்
1 யோவான் 3: 22- 4: 6
மத்தேயு 4: 12-17, 23-25
‘நம்மில் உள்ள விண்ணரசு’ வெளிப்பட வாழ்வோம்!
முதல் வாசகம்
யோவான் திருமுகத்தின் முதல் வாசகத்தில், அடிப்படையில் இரண்டு கட்டளைகள் மட்டுமே உள்ளன: முதலாவது நம்பிக்கை பற்றியது, இரண்டாவது நம்பிக்கையின் அடிப்படையிலான அன்றாட வாழ்க்கையைப் பற்றியது. நம்பிக்கையைப் பற்றி கூறும்போது, அவர் இயேசுவின் மனுவுருவை வலியுறுத்துகிறார். கடவுள் இயேசுவில் மனிதனாக பிறந்தார். இயேசுவின் சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு இதுவே இன்றியமையாத நம்பிக்கைக்குரிய அம்சமாகும்.
மேலும், யோவான் தமது வாசகர்களுடன் தொடர்புபடுத்தும் இரண்டாவது முக்கிய கட்டளை கிறிஸ்தவ வாழ்வு. இயேசுவின் சீடர்களின் அனைத்து செயல்களும், இயேசு தம் சீடர்களை ஒருவரையொருவர் அன்பு செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், இயேசுவின் மனுவுருவை உண்மையாக நம்புபவர்களுக்குள் தூய ஆவியார் செயல்படுவார் என்றும் குறிப்பிடுகிறார் யோவான்.
தொடர்ந்து, கிறஸ்தவர் அனைவரும் இயேசுவின் சகோதர சகோதரிகள் என்பதை வலியுறுத்துகிறார். அத்தோடு, மற்றொரு எச்சரிக்கையையும் முன்வைக்கிறார். ‘அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்’ என்கிறார். ஆம், ஏமாற்று பேர்வழிகள் மட்டில் தம் மக்களை எச்சரிக்கிறார்.
நிறைவாக, நாம் கடவுளைச் சார்ந்தவர்கள் என்றும், உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்துணரவேண்டியவர்கள் என்றும் அறிவூட்டுகிறார்.
நற்செய்தி.
அது திருமுழுக்கு யோவான் சிறைப்படுத்தப்பட்ட காலம். இயேசு, தனது பொதுப் பணியைத் தொடங்குகிறார். அவர் தனது சொந்த ஊரான நாசரேத்தை விட்டு வெளியேறி கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று தங்கலானார். இந்நிகழ்வானது எசாயா அக்காலத்தில் உரைத்த இறைவாக்கான, ‘“செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது” என்று செய்திக்கு ஒப்ப உள்ளதாக மத்தேயு குறிப்பிடுகிறார்.
இந்த கலிலேயா கடலோரம் இயேசு கடவுளின் ஆட்சியின் வருகையை வார்த்தைகளில் மட்டுமல்ல, அவருடைய செயல்களிலும் அறிவிக்கிறார். நோயுற்றவர்களிடமும், துன்பத்தில் இருப்பவர்களிடமும் அவர் இரக்கத்துடனும் அன்புடனும் அணுகும்போது, கடவுளின் ஆட்சி தற்போது இருப்பதாக அவர் காட்டுகிறார். ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர் என்று மேலும் குறிப்பிடுகிறார் மத்தேயு.
சிந்தனைக்கு.
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ (மத் 22:37-39) என்பன இயேசு அருளிய இரு பெரும் கட்டளைகள். இவற்றோடு இணைத்து, யோவான் முதல் வாசகத்தில், முதலில் கடவுளுடனான உறவைப் பற்றியும் அடுத்து மற்றவர்களுடனான உறவைப் பற்றியும் விவரித்தார்.
2025 இந்த புதிய ஆண்டில் முதல் முழு வாரத்தை நாம் தொடங்கும் போது, நமது நம்பிக்கை மற்றும் அந்த நம்பிக்கையை நான் எவ்வாறு வாழ்கிறோம் என்று இரண்டையும் அலசிப் பார்க்க வேண்டும். இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்’ என்று மத்தேயு குறிப்பட்டதை நாம் அறிவோம். (4:17).
இப்போது கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டதால், கிறிஸ்துவின் பொது பணி பக்கம் நம் கண்களைத் திருப்ப ஆரம்பிக்கிறோம். இன்றைய நற்செய்தியிலிருந்து இயேசுவின் அனைத்து போதனைகளின் மிக மைய கருத்தான ‘மனம் மனந்திரும்புங்கள் என்பதை அறிய வருகிறோம். எனினும், அவர் மனந்திரும்ப வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை, " விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது " என்றும் கூறுகிறார்.
நமது சொந்த வாழ்க்கையில், மனந்திரும்புதலுக்கான அழைப்பை பற்றி சிந்திப்பதும் அதற்கேற்ப செயல்படுவதும் இன்றியமையாதது. ஒவ்வொரு நாளும் “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று இயேசு நம்மிடம் சொல்வதை நாம் தினமும் உணர்வது அவசியம். இது ஆண்டுக்கொரு முறை அல்லது எப்போதாதவது கேட்கும் இயேசுவின் அழைப்பு அல்ல. ஆகவே, மனம் திரும்புதலுக்கு இறையூராக இருப்பது இறுமாப்பு. ‘இறுமாப்பு வரும் முன்பே; இகழ்ச்சி வரும் பின்னே’ (நீமொ 11:2) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகவே, இகழ்ச்சிக்கு வழிவகுக்கும் இறுமாப்பைக் களைவோம், மனமாற்றத்தால் கடவுளுக்கு முன் நம்மையே தாழ்த்தி நாம் ஏற்றச் சீடத்துவத்தை சிறப்பிப்போம்.
நிறைவாக, முதல் வாசகத்தில் யோவான் வலியுறுத்திய ஏமாற்று பேர்வழிகள் மட்டில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையை மனதில் நிறுத்துவோம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்வார்கள்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, இருளில் ஒளிரும் ஒளியை நான் ஒருபோதும் இழக்காமல், நான் சந்திக்கும் ஒவ்வெருவரையும் அன்புடன் நடத்துவதற்கான ஆற்றல், ஞானம், புரிதல் மற்றும் பொறுமை ஆகியவற்றை என்னில் பொழிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452