திருமணப் புனிதம் காக்கப்படட்டும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 5ஆம் வாரம் –வியாழன்

தொ.நூ. 2: 18-25
மாற்கு   7: 24-30
 

 திருமணப் புனிதம் காக்கப்படட்டும்!

முதல் வாசகம்.

நேற்று உலகப்  படைப்பின் சிகரமாக கடவுள் மனிதனைப் படைத்ததை அறிந்தோம். இன்றைய வாசகப் பகுதியில், மனிதனின் படைப்பில் ஒரு திருப்பத்தைப் பார்க்கிறோம். முதலில் கடவுள் படைத்த  உயிருள்ள ஒவ்வொன்றையும் மனிதன் முன் கொண்டு வரவே, அவன் அவற்றுக்கு என்ன பெயரிட்டானோ அதுவே அவற்றின் பெயராக ஏற்கப்பட்டது.  பின்னர்  மனிதன் அதாவது  ஆதாம், தனித்திருப்பதை கடவுள் அறிகிறார்.  அப்படி ஆண் தனித்திருப்பது நல்லதன்று என்று கண்ட கடவுள் அவனுக்கு ஏற்றத் துணையை, அவனுடைய விலா எலும்பிலிருந்து படைத்தாக இந்த யாவே மரபினர் தெரிவிக்கின்றனர். 
விலா எலும்பை எடுத்துப்  பெண்ணை படைக்கும் முன், ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறார். இப்போது, கடவுள் அந்த பெண்ணை ஆதாமிடம் அழைத்து வர, அவன் அவளை முதன்முறையாகப் பார்க்கிறான்.  உடனே, ‘`இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்’ என்ற உலகின் முதல் காதல் பாட்டைப் பாடுகிறான். கடவுளோ, ‘கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்’ என்று முதல் திருமணத்தைக் கடவுள் ஆசீர்வதித்தார் என்று தொடர்ந்து இந்த யாவே மரபினர் கூறுகின்றனர்..

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில்,  இயேசு தீர் என்றுழைக்கப்பட்ட புறவினத்தார் வாழும் பகுதிக்குள் போகிறார்.  அங்கே, புறவினத்துப் பெண் ஒருத்தி தீய ஆவி பிடித்த தன் மகளுக்கு நலம் பெற இயேசுவிடம் மன்றாடுகிறாள்.  இயேசுவோ, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதன்று' என்கிறார். அவளோ சற்றும் சோர்ந்துபோகாமல்,  'ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே!' என்று கெஞ்சுகிறாள். 
அவள் இவ்வாறு கெஞ்சியது இயேசுவை மனமுருகச் செய்தது.  ஒரு புறவினத்தாளான அவளது நம்பிக்கையில் இயேசு ஆழ்ந்துபோய், ``நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று'' என்றார்.

சிந்தனைக்கு. 

இன்றைய இரு வாசகங்களும் நம்பிக்கை மற்றும் உறவு ஆகிய இரண்டையும் ஏற்று வாழும் வாழ்வை நமக்கு நினைவூட்டுகின்றன. முதல் வாசக்தில், ஆதாமும் ஏவாளும் தங்கள் வாழ்க்கையைக் கடவுளுடன் நம்பிக்கை மற்றும்  உறவுடன் தொடங்குகிறார்கள். அவர்கள் அவர்களாக கணவன் மனைவியாக இணையவில்லை. இணைத்தவர் கடவுள். இவ்வாறு, குடும்பத்தை ஏற்படுத்தியவர் கடவுள். அனைத்தும் அவரது ஆசீரால்தான் தொடங்கப்பட்டன. எலும்பில் தசை இருந்தால்தான் எலும்புக்கு அழகு. தசை எலும்போடு ஒட்டி இருந்தால்தான் தசைக்க உறுதி. இதை உணர்ந்தவனாக ஆதாம்  ‘இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்’ என்றான்.
இருவரின் இந்த உடன்பாட்டை நாம் ஆழந்து உணர வேண்டும். திருமணம் ஆசைக்குச் செய்வதல்ல. அது ஆண்டவரின் ஆசியில் நிகழ்வது. 
இந்த திருமண உடன்பாட்டை இன்றைய நற்செய்தியோடு எப்படி இணைப்பது என்று சிந்தித்த வேளையில், இயேசு தன்னை நம்பினோரை கைவிடார் எனும் கருத்து தோன்றியது. நற்செய்தியில் இயேசு ஒரு புறவினத்தாள் என்று ஒதுக்கிவிடாமல் உதவுவார் என்ற நம்பிக்கை அந்த பெண்ணில் இருந்தது. இயேசு உதவினார். 
அவ்வாறே, கணவன் மனைவி இருவரும் இறுதி காலம் வரை அவர்களை இணைத்த ஆண்டவரில் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது திருமணம் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவருக்குமடையே ஏற்படும் பந்தம் அல்ல. அங்கே ஆண்டவரும் இணைகிறார். ஆண்டவர் இல்லாத திருமணம் ஓர் அருளடையாளம் ஆகாது. 
திருமணத்தின் முக்கியமான பண்பு தம்பதியரின் இணைபிரியா அன்பு; பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள். இதுவே கத்தோலிக்கத் திருமணத்தின் பண்பு. 
ஆகவே, திருமண வாக்குறுதியான, ‘இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்’ என்று இறைவனுக்கும் சமூகத்திற்கும் முன்பான அளித்த இந்த வாக்குறுதியைக் காப்பாற்றும் தம்பதியரே பின்னர் ஒரு குட்டி திருஅவையை உருவாக்குகிறார்கள். பல குடும்பங்கள் சேர்ந்ததே திருஅவை. குடுபம்பங்களின் தரம் குறைந்தால் திருஅவையிலும் பாதிப்பு ஏற்படும் என்பது வெள்ளிடைமலை. 

இறைவேண்டல்.
இரப்போருக்கு இரங்கும் ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்ட உறவுக்காக ஏங்கும் எனது மன்றாட்டுக்கு செவிசாய்ப்பீராக.  ஆமென்.

 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452