இயேசுவின் உயிர்ப்பு நற்செய்தியின் உச்சம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

21 ஏப்ரல் 2025
பாஸ்கா எண்கிழமை - திங்கள்
தி.பணிகள் 2: 14, 22-33
மத்தேயு 28: 8-15
இயேசுவின் உயிர்ப்பு நற்செய்தியின் உச்சம்!
முதல் வாசகம்.
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், தூய ஆவியால் அருள்பொழிவு பெற்றுக்கொண்ட பேதுரு, கூடியிருந்த திரளான மக்களிடம் ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார் என்பதை வல்லமையோடு எடுத்துரைக்கின்றார்.
இயேசு சிலுவையில் கொல்லப்பட்டிருக்கக்கூடாது என்றும் அந்நிகழ்வு கடவுளின் திட்டத்தில் இல்லை என்றும் பலர் நினைத்திருந்த வேளையில், பேதுருவோ அது கடவுளின் திட்டத்தில் மிக முக்கியமான நிகழ்வு, நம்மைக் மீட்கவே இயேசு இறந்தார் என்று முழக்கமிடுகிறார்.
திருச்சட்டம் அறியாத உரோமையர் மூலம் அவர் கொல்லப்பட்டதாக பேதுரு விவரித்ததோடு, கடவுள் அவரை சாவின் பிடியிலிருந்து விடுவித்து உயிர்த்தெழச் செய்தார் என்றும், மரணத்தால் அவரை அதன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை என்றும் சாட்சியம் பகர்கிறார்.
மேலும், தாவீது அரசர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ (திபா 16:8-11) என்று பாடியதை மக்களுக்கு நினைவூட்டுகிறார்.
நிறைவாக, இயேசு உயிர்த்து, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்த வண்ணம் அவர் ஏற்கனவே வாக்களித்தத் தூய ஆவியைப் பெந்தகோஸ்து அன்று பொழிந்தார் என்றும் வெளிப்டையாகவும் துணிவோடும் அறிவிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில் கண்ட அவரது பெண் சீடர்கள், இயேசு உயிர்த்துவிட்ட செய்தியைப் பெருமகிழ்ச்சியோடு அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடிய வேளையில், இயேசு அவர்கள் முன் தோன்றி, வாழ்த்தினார். அந்த பெண் சீடர்களோ, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்று மொழிந்தார் என்று மத்தேயு வரிக்கிறார். இதை அறிய வந்த தலைமைக் குருக்கள், உண்மைக்கு எதிராக பணம் கொடுத்து, பொய் சாட்சிகளை ஏற்படுத்தி, இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டதாகப் புரளியை கிளப்பிவிடுகிறார்கள்.
சிந்தனைக்கு.
ஒளவையார் அவரது உலகநீதி எனும் நூலில், “நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நமக்கு உண்மை தெரிந்திருக்கின்றபோது அதனை மறைத்து பொய்யுரைக்கக் கூடாது என்பது இதன் பொருள். ஆம், உண்மையை பேசும்போது நாம் மற்றவர்களைப் பார்த்து அஞ்சி, தலைகுனிந்து வாழ தேவை இல்லை. உண்மை உரைக்கையில் மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். அதுவே பொய்யுரைத்தால் நமக்கு அவமரியாதை தான் கிடைக்கும்.
இன்றைய நற்செய்தியில் திருத்தூதர் பேதுரு, உண்மையை உரக்க உரைக்கிறார். இயேசு விசாரிக்கப்பட்ட வேளையில், இயேசுவைத் தெரியவே தெரியாது என்று பொய்யுரைத்தவர், இன்று உயிருக்கு அஞ்சாதவராக மெய்யுரைக்கிறார். ஒருவகையில், பேதுரும் ‘பொய்’ எனும் கல்லரையில் இருந்து உயிர்த்தெழுந்தார் என்றே கூற வேண்டும். ‘உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்’ (‘யோவான் 16:13) என்று இயேசு அறிவித்தது மண்ணகத்தில் திருத்தூதர்கள் மத்தயில் நிறைவேறியது.
உண்மைக்குச் சாட்சியமே சீடத்துத்தின் முதன்மை குணம். இன்றைய நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில் கண்ட அவரது பெண் சீடர்கள், இயேசு உயிர்த்துவிட்ட செய்தியைப் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினர். ஆம், நற்செய்தியை நம்மால் நமக்குள் பூட்டி வைக்க இயலாது. நற்செய்தி உலகத்தாரோடு பகிரப்பட வேண்டிந்தொன்று.
ஆம், ஆண்டவரின் உயிர்த்தெழுதல் திருஅவைக்கு உயிர்நாடி. எனவேதான் திருஅவை இந்த வாரம் முழுவதும் (உயிர்த்த ஞாயிறு தொடங்கி அடுத்து வரும் ஞாயிறு வரை), உயிர்ப்பை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறது. இதை நாம் பாஸ்கா எண்கிழமை (எட்டு நாள்கள்) என்று அழைக்கிறோம்.
இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி பொய் சொல்ல தலைமை குருக்கள் காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தார்கள். தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் உடலைச் சீடர்கள் திருடி கொண்டு போய்விட்டார்கள் எனும் புரளி காட்டுத் தீயாகப் பரவியது. அவர்களது சாட்சிம் வெறும் புரளி என்பதை இயேசு இவ்வாரத்தில் அவராகவே வெளிப்படுத்துவதை நாம் அறிய உள்ளோம். நேற்றைய நற்செய்தியில் பேதுரு கல்லறைக்குள் நுழைந்தபோது, இயேசுவின் துணிகள் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருடர்கள் இயேசுவின் உடலை திருடியிருந்தால் துணிகள் சுறுட்டி இன்னொரு இடத்தில் வைக்க அவர்களுக்கு நேரம் இருந்திருக்காது அல்லவா?
மற்றொரு கோணத்தில், இயேசுவின் உயிர்ப்பு ஒரு மறைபொருள். இயேசுவின் உயிர்த்தெழுதலை மானிடர் யாரும் நேரடியாகக் கண்டதில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று எவராலும் விவரிக்க முடியாது. அது கடவுள் ஒருவருக்கு மட்டுமே வெளிச்சம். இந்த மறைபொருளில் நம்பிக்கை கொள்வதில்தான் கிறிஸ்தவமும் நமது சாட்சிய வாழ்வும் அடங்குகிறது.
இறைவேண்டல்,
‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்’ என்றுரைத்த ஆண்டவரே, எனது நம்பிக்கை உமது உயிர்ப்பில் வேரூன்றி இருப்பதில் அகமகிழ்கிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
