நம் ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 4ஆம் வாரம் – புதன்
எசாயா 49: 8-15                                                                          
யோவான் 5: 17-30

நம் ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர்!
 
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகமானது, யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தது. கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் எசாயா முழக்கமிடுகிறார்.
இஸ்ரயேலர் தங்களின் கடவுளை மறந்து,  அந்நிய தெய்வங்களை வழிபட்டதன் காரணமாக கடவுள் அவர்களுக்கு அளித்தத் தண்டனையாகப் பாபிலோனியர்களால்  நாடுகடத்தப்பட்டு துன்பறுற்றார்கள். அவ்வேளையில், அங்கு கடவுளை நினைத்துப் புலம்பினார்கள்.
அவர்களின் புலம்பலைக் கேட்ட கடவுள் அவர்கள் மேல்  இரக்கம்கொண்டு அவர்களை அவர்களுடைய சொந்தநாட்டிற்குக் கூட்டிக்கொண்டு வரும் தருணத்தில்,   அவர்கள் கடவுளில் நம்பிக்கை கொள்ளாமல்,  ‘ஆண்டவர் எங்களைக் கைவிட்டுவிட்டார்” என்று சொன்னதால், அவர் அவர்களிடம், “பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என்று அவர்களைத் தேற்றுகிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், ‘என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகின்றேன்” என்று முழங்குகிறார்.  தந்தைக் கடவுளும் இயேசுவும் வேறு வேறு அல்ல, இயேசுவைக் காண்பது தந்தைக் கடவுளைக் காண்பது (யோவா 14:9) போலாகும் என்று இயேசு கூறியதை நினைவுகூர்வது சிறப்பு.  
ஓய்வுநாள்களில் இயேசு நோயுற்றவர்களைக் குணப்படுத்தியதும், அவரது சீடர்கள் வயலில் கோதுமை மணிகளைப் பறித்ததும் பெரிய குற்றமாகக் கருதிய பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், அவர் கடவுளை ‘என் தந்தை’ என்று சொன்னதைக் கேட்டு, அவர்களது கோபத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினர். ஆனால், இன்றோ, இயேசு   தந்தைக் கடவுளுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையைக் குறித்துப் பேசி அவர்களை வாயடைக்கின்றார்.

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளை தம் தந்தையாகவே முன்வைக்கிறது. பதினான்கு வசனங்களில் எட்டு முறை இயேசு கடவுளை "தந்தை" என்று அழைக்கிறார். ஒரு கட்டத்தில் தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார் என்கிறார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை என்று அவருக்கு தந்தை அளித்துள்ள அதிகாரத்தை இயேசு வெளிப்படுத்துகிறார். 

ஆம், இயேசு வழியாக கடவுள் நமக்கான சிறந்ததை விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.  ஒரு தாய் தான் துன்புற்று ஈன்றெடுத்தக் குழந்தையை மறந்தாலும், கடவுள் நம்மை ஒருபோதும் மறக்க மாட்டார் என்று ஏசாயா நமக்கு நினைவூட்டுகிறார். நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் எதிர்மறையாகத் தோன்றினாலும், கடவுள் நம்முடன் இருக்கிறார் என்தையும், நம்மை காத்தருள்வார் என்பதையும்  மறக்கலாகாது.  
‘கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை
நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நான் இருப்பேன்
அஞ்சாதே கலங்காதே’ 
என்ற பாடல் வரிகள் எனக்கு மிகுவும் பிடித்தமானவை. என்னை தேற்றும் வாரத்தைகள் அவை.  கடவுள் நமக்கு எதிர்நோக்கையும் நம்பிக்கையையும்  அளிக்கிறார். நம்மை பகைத்து வெறுப்பவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அரவணைத்து அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார். அவர் நம் தாயைவிட பன்மடங்கு மேலானவர். 

ஆகவே, நாம் நம்பிக்கையுடன் கடவுளின் அன்பினைப் பற்றிக் கொள்வோம். இயேசுவின் வார்த்தைகளான, ‘என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே, சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’  என்பதில் பற்றுறுதி (trust) கொள்வோம். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது வாக்குறுதிகளை மற்றவர்களுக்கு நினைவூட்டி,  அவர்கள் உம்மிடம் முழுமையாகத் திரும்பி உம்மை ஏற்று வாழும் சீடர்களாக விளங்க   உமதருளால் என்னை  நிரப்புவீராக. ஆமென்.  

  

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்

+6 0122285452