பரிசேயக் குணம் களைவோம், வாழ்வு பெறுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 28ஆம் வாரம் –புதன் 
கலா 5: 18-25
லூக்கா 11: 42-46

 
பரிசேயக் குணம் களைவோம், வாழ்வு பெறுவோம்!


முதல் வாசகம்.

 இன்றைய முதல் வாசகத்தில், பவுல் அடிகள் இயேசுவின் சீடர்களாகிய  நாம்  செய்யக் கூடியவை மற்றும்  செய்யக்கூடாதவை பற்றிய பட்டியலை முன்வைக்கிறார்.   அவர்   கலாத்தியாவில் உள்ள இறைமக்கள் சமூகத்திற்கு எழுதிய கடிதத்தில், அவர் திருச்சட்டத்திக்கு ஏற்ப அல்ல, மாறாக தூய ஆவியின் அழைப்புக்கு ஏற்ப வாழ அழைப்புவிடுக்கிறார். 
தூய ஆவியாரால் இயக்கப்படாதவர்கள் ஊனியல்புக்கு அடிமைப்பட்டு வாழ்கிறார்கள் என்றும், சுயநலச் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என்றும் எடுத்துரைக்கிறார்.  தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பனவற்றைக் கொண்டு கிறிஸ்துவில் வாழ்பவர்கள்  திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்ற உறுதியான படிப்பினையை வழங்குகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இறை மகனான இயேசுவின்  துணிச்சலான விமர்சனத்தைக் கேட்கிறோம். இயேசு, பரிசேயர்களையும் திருச்சட்ட அறிஞர்களையும் அவர்களின் நீதியற்றச் செயல்களுக்காகவும்   வெளிவேடத்திற்காகவும் நேர்முகமாக சபிக்கிறார்.  பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்  தாங்கள் சுமக்க இயலாத சுமைகளை வலுவற்ற ஏழைகள் மீதுச் சுமத்தி கொடுமைப்படுத்துவதைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திட்டுகிறார். அவர்களின் இரட்டை வேடத்தையும்  மனிதநேயமற்ற செயல்களையும் மையமாக வைத்துத்  தோலுரிக்கின்றார் இயேசு.

சிந்தனைக்கு.

ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! என்பதை எளிய தமிழில் சொன்னால் ஐயோ! நீங்கள் நாசமாய் போவீர்கள் என்றுதான் பொருள்படும். யாரையும் நாசப்படுத்த வராத இயேசு சிலரை நாசமாகப் போவீர்கள் என்று சபிப்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  உண்மையில் இயேசு அவர்களை இதைவிட 'வெளிவேடக்காரரே, குருட்டு வழிகாட்டிகளே, குருட்டு பரிசேயரே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்ற வார்த்தைகளால்  வாசைப்பாடினார். மேற்காணும் இயேசுவின் சாபச் சொற்களை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். மேலும் இந்தச் சாபத்திற்கு ஆளாபவர்கள் பரிசேயர்களும். மறைநூல் அறிஞர்கள் மட்டுமே. இதற்குக் காரணம் அவர்களின் அகந்தை, இறுமாப்பு மற்றும் இரக்கமற்றச் செயல். இவர்கள் சமூகத்தில் தோன்றிய புல்லுறுவிகள். 
இயேசுவின் வார்த்தைக்கேட்டு மனமாறியிருந்தார் பரிசேயர்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் இந்த சாபம் கிடைத்திருக்காது. இயேசுவின் சாபம் அழிவைக் கொணரும் என்பதை அத்திமரம் பட்டுப்போன கதை உணர்த்துகிறது (மாற்கு 11:20). ஆம், அவர்களுக்கு அழிவு வந்தது. இயேசுவுக்குப் பிறகு ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து,  கி.பி. 70-ல் எருசலேம்  ஆலயம் உரோமையர்களால்  அழிக்கப்பட்டு,  நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்போது யூதர்களுக்கு ஆலயம் கிடையாது.

கிறிஸ்துவுக்கு எதிரான போலித்தனமும், அகம்பாவச் செயல்களும் நமக்கு வாழ்வு அல்ல அழிவைத்தான் விளைவிக்கும் என்பதை நினவில் கொள்ள வேண்டும். பவுல் அடிகள் கூறுவதைப் போல்,  ‘வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்’ (உரோ. 14:8) என்ற எண்ணமும் செயலும் நம்மில் மிளிர்ந்தால் நாம் அவரது அழைப்புக்கு ஏற்ற வாழ்வு  வாழ்வோம். 
இயேசு ஆண்டவர், அவர் தம் படைப்புகளைச் சபிக்க உரிமை கொண்டவர். ஆனால், நம்மை அவ்வாறு அல்ல,  ‘உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ (லூக்கா 6:28) என்றே பணிக்கிறார். அவரது ஆசீரைப்பெற பிறருக்காக வேண்டுதல் செய்து வாழ்வோம்.
பவுல் அடிகள் கூறிதைப்போல், தூய ஆவியின் கனியான   அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பனவற்றைக் கொண்டு கிறிஸ்துவில் வாழ்வோம்.

இறைவேண்டல்.

தீயோரைச் சபித்த ஆண்டவரே, உமது தயவால் நான் பரிசேய குணங்களில் இருந்து வெளிப்பட்டு உமது குரலுக்குச் செவிசாய்க்கும்  சீடராக வாழ எனக்கு அருள்தாரும். ஆமென்.


  

 


ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452