மண்ணக வாழ்வை நேர் செய்தால் விண்ணக வாழ்வு கைவசம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 33ஆம் வாரம் - சனி
திருவெளி. 11: 4-12 லூக்கா 20: 27-40
மண்ணக வாழ்வை நேர் செய்தால் விண்ணக வாழ்வு கைவசம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், யோவான் கண்ட மற்றொரு காட்சி விவரிக்கப்படுகிறது. இக்காட்சியின் தொடக்கத்தில் இரு வித மக்கள் குறித்த செய்தியை அறிகிறோம். முதலாவதாக, ஆலயத்திற்கு உள்ளே உள்ளவர்கள் இவர்கள் இறை மக்கள். மற்றொரு பிரிவினர் புறவினத்தார். இவர்கள் ஆலயத்திற்கு வெளியே உள்ளவர்கள்.
தொடக்கத்தில், மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளுமே இரு சாட்சிகள் என்று யோவான் குறிப்பிடுகறார். இது, எனோக்கு எலியா ஆகிய இருவரையும் குறிப்பிடுவதாகப் பொருள் கொள்ளலாம். சில அறிஞர்கள் இவர்கள் பேதுரு மற்றும் பவுல் என்கிறார்கள்.
இன்றை வாசகத்தில் இவர்கள் திருஅவையைப் பிரதிநிதிக்கும் உருவங்கள் எனலாம். இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளுக்கும் திருமுன் இவர்கள் நிற்கிறார்கள் என்பது, பாலஸ்தீனாவில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் சாட்சிய வாழ்வுக்கு உருவகமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதியில் திருஅவையை அழிக்க முற்பட்டுள்ள தீமையை (சாத்தானை) அழித்து இயேசு வெற்றி பெறுவார் எனும் செய்தி இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.
சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாய் அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும்’ என்ற பகுதியைக் கவனமாக வசித்தால், நரகத்திலிருந்து வருகின்ற சாத்தானின் தீய சக்தியாக விளங்கும் அரசு (உரோமை பேரரசு) சோதோம் மற்றும் எகிப்து அரசுகள் போல் அழிக்கப்படும் என்ற செய்தி இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.
நிறைவாக உரோமையர் ஆட்சியில் துன்புறும் திருஅவையின் இறைமக்கள் உயிர்பெற்று எழுவர், அதாவது விடுதலைப்பெறுவர் என்ற கடவுளின் வாக்குறுதியை யோவான் வெளிப்படுத்துகிறார். இப்பகுதியில் ‘எஞ்சி இருப்போர்’ என்பது இறைமக்களைக் குறிக்கிறது, இவர்கள் கடவுளைப் போற்றி புகழ்வார்கள் என்று விவரிக்கப்படுகிறது.
நற்செய்தி.
நற்செய்தியில், சதுசேயர்கள் (இறந்தவர்களின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்ளாத யூதப் பிரிவினர்) மறுமை வாழ்வைப் பற்றிய கேள்விகளால் இயேசுவை சிக்க வைக்க முயலும்போது, இயேசு சதுசேயர்கள், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் சிந்திக்க சவால் விடும் விதத்தில் பதிலளிக்கிறார். நிலை வாழ்வானது மண்ணக வாழ்வைப் போன்றதல்ல அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று இயேசு விவரிக்கிறார்.
திருமணம் மற்றும் திருண சட்டத்தினால் ஏற்படும் பிணைப்புகளுக்கு விண்ணகத்தில் இடமில்லை என்றும், அங்கே, மக்களை ஒன்றிணைக்கும் ஒரு புதிய பிணைப்பு இருக்கும் என்றும், இறந்து உயிர்த்தெழும்போது எவரும் திருமணம் செய்து கொள்வதில்லை; இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே என்று எடுத்துரைக்கிறார்.
எனவே, விண்ணகத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள். அவர்கள் உயிருள்ள கடவுளோடு உறவாடுவார்கள். நிலைவாழ்வு மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்ட யூதர்கள் இயேசுவின் பதிலில் மகிழ்ச்சியடைந்து அவருடைய விளக்கத்தை பாராட்டுகிறார்கள். சதுசேயர்களோ, வாயடைத்துப் போயினர்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களை வாசித்தப்பின், மண்ணக மற்றும் விண்ணக வாழ்வுக் குறித்து இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தேன். முதல் வாசகத்தில் திருஅவையைத் துன்புறுத்துவோருக்கு அழிவு வரும் என்று கூறப்பட்டதைப்போல் தீயவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு என்பது திண்ணம். கடவுளின் நீதித் தீர்ப்பிலிருந்து தப்பிக்க இயலாது.
ஆகவே, திருஅவை மக்களாக விண்ணகம் நமது எதிர்நோக்காக இருந்திட வேண்டும். அங்கே பெண் கொடுப்பதுமில்லை, பெண் எடுப்பதுமில்லை. அனைவரும் ஒரே இனம், ஒரே மக்கள் என்ற நிலையில் மகிழ்ந்திருப்போம். கடவுளின் மக்கள் என்ற வகையில் அங்கே அனைவரும் சகோதர சகோதரிகள். வேறு உறவு வகை அங்கே கிடையாது என்கிறார் ஆண்டவர்.
"இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் மற்றும் எதர்நோக்கும் மறுவுலக வாழ்க்கை" பற்றிய நம்பிக்கை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலியில் நாம நினைவூகூர்கிறோம். சாவான பாவத்தில் நிலைத்திருப்பவர்கள் கடவுளிடமிருந்து நிலையாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் அருள் நிலையில் இறந்தவர்கள் என்றென்றும் கடவுளுடன் வாழ்வார்கள்.
ஒவ்வொரு முறையும் நாம் நம்பிக்கை அறிக்கையை முழங்கும்போது, அதை வாயளவில் வெளிப்படுத்தாமல் நமது கண்களை விண்ணகத்தை நோக்கி, மனதார அறிக்கையிட வேண்டும். முதல் வாசகத்தில் யோவானுக்கு அருளப்பட்ட காட்சியில், தீயனவற்றை ஆண்டவர் அழிப்பார், இறைமக்களுள் நல்லவர்கள் வாழ்வுப் பெறுவர் என்பது திண்ணம். இந்த தூய எதிர்பார்ப்புடன் நாம் எவ்வளவு அதிகமாக நம்பிக்கையோடும் எதிர்நோக்கோடும் வாழ்கிறோமோ, அதுவே மறுவாழ்வுக்கான தயாரிப்பாக அமையும்.
நம்முடைய மண்ணக வாழ்வு, நம்முடைய இறப்போடு முடிந்துவிடுகிற ஒன்று அல்ல, மாறாக அது புதியவுரு எடுக்கிறது என்பதை மனதில் கொண்டு தூய ஆவியாரின் இயக்கத்தில் நல்வாழ்வு வாழ்வோம்.
இறைவேண்டல்.
நிலைவாழ்வை எங்களுக்கு ஏற்பாடு செய்யும் ஆண்டவரே, உமது அழைப்பிற்கேற்ப மண்ணக வாழ்வில் எனதுப் பயணத்தை நான் சீர் செய்யவும், நிலைவாழ்வை எனது எதிர்நோக்காகக் கொள்ளவும் அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி, ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452