நமது அகத் தூய்மையே ஆலயத் தூய்மை!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி
திருவெளி. 10: 8-11                                                                                                              லூக்கா 19: 45-48
  
நமது அகத் தூய்மையே ஆலயத் தூய்மை!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், யோவான் கண்ட மற்றொரு காட்சி விவரிக்கப்படுகிறது.  இதில் விண்ணகத்தில் இருந்து கேட்ட குரலொலியை விவரிக்கிறார். “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்று அந்த குரல் கூறியதாகக் கூறுகிறார். அந்த சுருளேட்டில் அவர் கண்ட செய்தியானது இறைவார்த்தையின் தன்மையை அடிப்படையாகக்  கொண்டது.   “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்” என்று அந்த குரல் அவருக்கு விளக்கியது.
கடவுளின் வாக்கு ஆற்றல் உள்ளது, படைக்கும் திறன்  கொண்டது; உருவாக்கும் தன்மை கொண்டது; அத்துடன் கற்பிப்பதற்கும்; தண்டிப்பதற்கும்; சீராக்குதவற்கும்’; மனிதர் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும்  அது ஏதுவாயுள்ளது. இவ்வாறு இறைவார்த்தையின் தன்மை இந்தப் பகுதியில் யோவானுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இப்பகுதியில்,  “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்”  என்பது உருவகமாகக் கூறப்படுகிறது.    
இறைவார்த்தையைப் படித்து அதன்படி வாழ்வதுதான் ‘அதைத் தின்றுவிடு’ என்பதன் பொருளாகும்,  ஒருவர் நேரிய மனதோடு இறைவார்த்தையின் படி வாழ்ந்தால் அவருக்கு நிச்சயம் பல சவால்கள் வரும். இதையே இயேசு, ‘எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர்’ (மாற்கு 13:13) என்று தம் சீடர்களுக்கு எடுத்துரைத்தார். பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். எனவேதான் ‘வயிற்றில் கசக்கும்’ என யோவானுக்குக் கூறப்பட்டது. 
சுருக்கச் சொன்னால், இறைவார்த்தை கேட்பதற்கும் படிப்பதற்கும்  எளிது. ஆனால், அதன்படி வாழ்வது  கடினம் என்பது உணர்த்தப்படுகிறது. 
 
நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு அவரது  இறுதி நாட்களில், இறுதியாக எருசலேம் நகருக்குள்  நுழைந்து,  கோவிலுக்குச் செல்கிறார்.  லூக்காவின் நற்செய்தியில்  இயேசுவின் வாழ்வில் மையமாக அமைவது எருசலேம்.   எருசலேமில் நகழ்ந்த  அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இருந்துதான்,  திருஅவையின்  பணி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
புனித எருசலேம் ஆலயத்தில்  நடப்பதைக்  கண்டு இயேசு குமுறுகிறார். ஆலயம் வணிக மையமாக மாறிவிட்டது. அவரது  இறுதி நாட்களில் அவர் கோபத்திற்கு ஆளாகிறார், எனவே, ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில், அவர் வணிகர்களையும் பணம் மாற்றுபவர்களையும் துரத்தி,  வெளியேற்றுகிறார். 
அவர்களை நோக்கி, “என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கண்டிக்கிறார்.   இதனால், கொதிப்படைந்த   யூத தலைவர்கள்  அவரது மரணத்திற்கு சதி செய்ய ஆரம்பித்தனர்.

சிந்தனைக்கு.

ஆண்டவராகிய இயேசுவின் சீடர்களாக இருக்க  விரும்பும் நம் அனைவருக்கும்  மகிழ்ச்சிக்கான இடத்தை கடவுள் தயார் செய்து வருகிறார்.   ஆனால் அந்த இடத்தை அடைவது எளிதல்ல என்பதை முதல் வாசகத்தில் யோவானுக்கு அருளப்பட்ட காட்சி மெய்ப்பிக்கிறது.  சீடராக இருப்பது என்பது இறைவாரத்தையில் நம்பிக்கை வைத்து அதன் படி வாழ முற்படுவதாகும். அது எளிதல்ல என்றும், நேரிய மனதோடு இறைவார்த்தையின் படி வாழ்வோருக்கு   நிச்சயம் பல சவால்களும் இடையூறுகளும் ஏற்படுவது  திண்ணம் என்று இன்று உணர்த்தப்படுகிறது.  
நற்செய்தியில், எருசலேம் ஆலய வளாகத்தில், கோயில் வரிப்பணத்தில் பலன் பெற்ற கோயில் குருக்களின் ஒப்புதலுடன், கோயிலை சந்தைப் பொருளாக மாற்றி சுயலாபத்திற்காக இறை வழிபாட்டைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் பலர். அங்கே, பொய்யும் பித்தலாட்டமும், ஏமாற்று வேலையும் தலைவிரித்தாடியதை இயேசு கவனித்தார். பொறுத்துகொள்ளா நிலையில் பொங்கி எழுந்தார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை ஆலய வளாகத்தில் காண்கிறோம். 
இறைவார்அது கள்வரின் குகையாக இருந்தால், த்தை நம்மை கண்டித்துத் திருத்தும் ஆற்றல் கொண்டது. எனவேதான் அது ‘கசக்கும்’ என்று முதல் வாசகத்தில் நமக்கு உணர்த்தப்பட்டது.   சில சமயங்களில் நமது இறைவனிடமிருந்து வரும் தூய நற்செய்தியானது பாவத்தையும் தீமையையும் கடுமையாக தாக்கும் என்பதை ஏற்க வேண்டும். எருசலேம் ஆலயத்தில் இயேசு இந்த உண்மையை வெளிப்படுத்தினார். இன்றைய  உலக வாழ்க்கையில் நமது உள்ளத்தை கொஞ்சும் கொஞ்சமாக கள்வர்களின் குகையாக மாற்றி வருகிறோம். இதை நாம் இன்று உணராவிடில், நாமும் துரத்தப்படுவோம். 
அன்று, எருசலேம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட நெறிகெட்ட வாழ்வைப் பார்த்து குமுறிய ஆண்டவர், இன்று நமது உள்ளம் எனும் ஆலயத்தையும் உற்று நோக்குகிறார்.  அது சாத்தானின் வசிப்பிடமா? அல்லது இறைவன் வாழும் தூய உறைவிடமா? ஆலயத்தின் தூய்மைதனைக் காப்பது நமது கடமை என் உணர்வோம். ‘நெஞ்சிக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி’ என்பதை நினைவில் கொண்டு, உள்ளத் தூய்மைக்கு வழிதேடுவோம். 

இறைவேண்டல்.

என்றும் என்னில் வாழும் ஆண்டவரே, நீர் வாழும் எனது உள்ளமும், நான் உம்மை வழிபடும் ஆலயமும் என்றும் தூய்மையாய் விளங்க எனது பங்கை ஆற்றிட உதவுவீராக. ஆமென்.

 
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                                                  ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                              +6 0122285452