முழு அர்ப்பணிப்பே இயேசுவின் சீடத்துவம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
12 நவம்பர் 2024 பொதுக்காலம் 32ஆம் வாரம் – செவ்வாய்
தீத்து 2: 1-8, 11-14
லூக்கா 17: 7-10
முழு அர்ப்பணிப்பே இயேசுவின் சீடத்துவம்!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், பவுல் அடிகள் தீத்து அவர்தம் சமூகத்திற்குக் கற்பிக்க வேண்டிய சில பண்புகளைப் பட்டியலிடுகிறார். முதிர்ந்த ஆண்கள் மிதமான, கண்ணியமான, சுயக்கட்டுப்பாடு, நம்பிக்கை, அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய நல்லொழுக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது இயேசு கற்பித்து ஊழியம் செய்த அன்பான அதிகாரத்தை முதிர்ந்த ஆண்கள் பிரதிபலிக்க வேண்டும் எஃனகிறார்.
சபையிலுள்ள முதிர்ந்த பெண்களோ, கிசு கிசுப்பதைத் தவிர்த்து, தூய நடத்தை உடையவர்களாய், மதுபானத்திற்கு அடிமையாகாமல், பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் இளம் பெண்களுக்கு பயிற்றுவிப்பவர்களாகவும், தங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, வயதில் முதிர்ந்த பெண்கள் இல்லத்தின் இதயமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தீத்து எடுத்துரைக்க வேண்டும் என்கிறார்.
மேலும், மனைவிமார்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி, கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருக்கும் படியும், சமூகத்தின் இளம் உறுப்பினர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குப் போதிக்க தீத்துவைக் கேட்டுக்கொள்கிறார்.
தொடர்ந்து, இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூற வேண்டும் என்றும், இளைஞர்கள் நற்செயல்களைச் செய்வதற்கு தீத்து ஒரு முன்மாதிரியாய் இருக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தீத்துவைப் பணிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்குக் கடவுளுடனான உறவில் அவர்களின் பங்கைப் பற்றி சிந்திக்கும்படி அறிவுறுத்துகிறார். அவர்கள் தலைவருடைய பணியாள்கள் எப்படி தலைவர் விட்ட பணிகளைப் பணிந்து செய்கிறார்களோ அப்படியே சீடர்களும் அவரவர் பணியைச் செய்து முடிக்க வேண்டும் என்கிறார்.
ஒரு பணியாளர் வயல்வெளியில் வேலை செய்து நெடுநேரம் உழைத்தப் பிறகு, எஜமானின் வீட்டிற்குள் வந்து எஜமானிடம் உணவளிக்கக் கோருவதில்லை என்பதை இயேசு அவர்களிடம் சுட்டிக்காட்டுகிறார். மாறாக, எஜமானருக்கு உணவு தயாரித்து வழங்குவதன் மூலம் பணியாள் பணிபுரியும் ஒரு நபராகவே இருப்பார் எற்கிறார்.
சிந்தனைக்கு.
நற்செந்தியில் இயேசு விவரிக்கும் உவமையில், நாம் கடவுளின் பணியாளர்கள் எனும் படிப்பினை மேலோங்கி நிற்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்காகக் காத்திருக்கவேண்டும். பணியாளர், நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, அத்தோடு அவரது பணி முடிந்துவிட்டது என்று தன் வீட்டிற்குப் போகவில்லை. தன்னுடைய தலைவர் உணவருந்தும் போது, உடனிருந்து பணிவிடை செய்வதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். அதுவரைக்கும் அந்த பணியாளரும் உண்ணாமல் காத்திருக்கிறார். இதுபோன்றுதான் நாம் ஒவ்வொருவரும், இறைப்பணியில் நாம் ஏற்கும் பணிகளைக் கடவுளுக்குப் பணிந்து நிறைவு செய்ய வேண்டும்.
பவுல் அடிகள் சிறந்த இறைபணியாளர். ஆண்டவரின் அழைப்ப ஏற்றவர், அவரது உயிர் போகும்வரை ஏற்ற பணியை நிறைவுச் செய்தவர். எனவேதான், “நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால் தக்க காலத்தில் அறுவடை செய்வோம். ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கைக் கொண்டோரின் குடும்பத்திற்கு நன்மை செய்ய முன்வருவோம்” (கலா 6:9-10) என்று அறிவுறுத்தினார்.
நமக்கு கடவுள் ஒருவரே முதலாளி. நாம் அனைவரும் அவரது பணியாளர்கள். நம்முடைய கடவுளுக்கான பணி என்று வரும்போது, அவர் கொடுக்கும் பணியைச் செய்து முடிக்க உண்மை உழைப்பும் மனோபலமும் தேவை.
கடவுள் எப்படிப்பட்ட தலைவர் (முதலாளி) என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறும்போதுதான் நம்மை அவருடைய ஊழியர்கள் எனும் தந்துதவத்தைப் பரிந்துக்கொள்ளாமல் போகிறோம். கபிரியேல் தூதர் மரியாவுக்கு மெசியாவின் பிறப்புச் செய்தியை அறிவித்தப்போது, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று தன்னை ஓர் அடிமைபட்ட பணியாளராக மரியா அர்ப்பணித்துக்கொண்டார், ஏற்ற பணியைப் பல இடர்களுக்கு இடையில் முழுமையாக நிறைவேற்றினார். அவர் அவருக்கான கடவுளின அழைப்பைப் பிரிந்துகொண்டார்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் குறிப்பிட்டதைப் போல் ஒவ்வொரு வயதினரும் அவரவர் பருவத்தில், இயேசு கற்பித்து ஊழியம் செய்த அன்பான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இறைப்பணியில் ஈடுபட வேண்டும். மேலும், குடும்பத்தில், கணவன் தவைவர் என்றால், மனைவி குடும்பதின் இதயமகத் திகழ வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்காமல், அவரது பணியேற்றீர். நானும் அவ்வாறு, கைமாறு கருதாமல் ஏற்ற பணியை முழுமையாக நிறைவேற்றும் ஆற்றலை எனக்குத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452