ஆர்ப்பாட்டத்தில் அல்ல, அமைதியிலும் நற்சீடராகலாம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் 4-ம் வாரம்–திங்கள்
மலாக்கி 3:1-4; 4: 5-6
லூக்கா 1: 57-66
ஆர்ப்பாட்டத்தில் அல்ல, அமைதியிலும் நற்சீடராகலாம்!
முதல் வாசகம்
மலாக்கி இறைவாக்கினர் பாபிலனியர்களால் உடைக்கப்பட்ட எருசலேம் ஆலயம் மீண்டும் இரண்டாம் முறை கட்டப்பட்டப் பிந்தையக் காலத்தில் இறைவாக்குரைத்தார். அக்காலத்தில், யூதேயா குருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர். அவர்கள் ஆண்டவருக்குச் சேர வேண்டிய காணிக்கையை முறைப்படிச் செலுத்தவில்லை. அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரைத் தொடர்ந்து அவமதித்தனர்.
எனவே, ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்ற செய்தியை மலாக்கி வழங்குகின்றார்.
மலாக்கி இறைவாக்கினர் மெசியாவின் வருகைக்கு முன்னர், 'தூதர்' ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார் என்னும் செய்தியைத் தருகிறார். இவர், 'உடன்படிக்கையின் தூதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். மலாக்கி முன்மொழியும் இத்தூதர் திருமுழுக்கு யோவான் என நமக்கு அறிவிக்கப்பட்டது.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பற்றிய விபரத்தை அறிகிறோம். இவ்வாசகத்தில், லூக்கா மூன்று நிகழ்வுகளைப் பதிவுச் செய்துள்ளார். முதலாவதாக, எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்கின்றார். இரண்டாவதாக, எலிசபெத்து முதிர்ந்த வயதிலும் தாயானது கண்டு உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மூன்றாவதாக, குழந்தைக்குப் பெயரிடப்படுகிறது.
யூதர்கள வழிமரபில், குழந்தைக்குப் பெயரிடும் உரிமை தந்தைக்கே உரியது. ஆனாலும், எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்த உற்றார் உறவினர், குழந்தைக்கு செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே சூட்ட முனைந்தார்கள். ஆனால், மத்தேயு நற்செய்தியைக் கவனத்தில் கொண்டால், யோசேப்புக்குக் கனவில் தோன்றி வானதூதர், 'அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்!' என்று கூறினார் அல்லவா? (மத் 1:20-21).
எனவே, எலிசபெத்து இடைமறித்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். செக்கரியாவும், எழுதுபலகை ஒன்றில், “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதவே, அத்தருணத்தில் அவருடைய நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். ஆகவே, அனைவருக்கும் யோவான் எனும் அக்குழந்தை ஓர் ஆச்சரியக் குழுந்தையாகத் தோன்றியது. இவ்வாசகத்தில், ‘அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது' என லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
ஆண்டவரின் வருக்கையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த திருவருகைக் காலம் ஒரு முடிவை எய்தவுள்ளது. இன்றைய வாசகங்களை மனதில் கொண்டு தியானிக்கும் வேளையில், ஆண்டவராகிய இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பிறந்த அவருடைய உறவினரான திருமுழுக்கு யோவான் வளர்ந்து, முதிர்ச்சியடைந்து, தனது பணியை நிறைவேற்றும் காலத்தில் மெசியாவின் வருகையை அறிவிக்கும் ஓர் இறைவாக்கினராக தோன்றுகின்றார்.
யோவான், மெசியா அருகாமையில் இருக்கிறார், ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கிறார் என்று அறிவிப்பது மட்டுமல்லாமல், கடவுளின் அருள்பொழிவு செய்யப்பட்டவரை (கிறிஸ்து) சந்திக்க எப்படி தயார்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் மக்களுக்கு எடுத்திரைக்கிறார்.
மக்கள், தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, பாவத்திலிருந்து விலகி, தங்கள் இதயங்களை கடவுளிடம் திருப்ப வேண்டும் என்கிறார். இயேசுவின் வழியை ஆயத்தம் செய்தவர் இவரே. உண்மைக்குச் சான்றாகத் தம் உயிரையும் தியாகம் செய்தவரும் இவரே. நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தார் என்று அறிகிறோம். எனவேதான் அவர் உண்மையை எடுத்துரைக்கத் தயங்கவில்லை. எடுத்துக்காட்டாக, பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? (மத் 3:7-8) என்றார். ஒழுங்குத் தவறி தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்த ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டினார்.
மனமாற்றம் இல்லாமல் ‘கிறிஸ்மஸ்’ இல்லை. மனமாற்றம் இல்லை என்றால் இயேசு பிறந்தது ஒரு கதையாகவே ஆண்டுதோறும் தோன்றி மறையும். வானதூதர் சொன்னதை அமைதியாக சிந்திக்க செகரியாவுக்கு ஒன்பது மாதங்கள் தேவை என்பதை கடவுள் அறிந்திருப்பது போல் தோன்றுகிறது. மனைவியின் அற்புதமான கர்ப்பத்தைப் பற்றி சிந்திக்க அவருக்கு ஒன்பது மாதங்கள் தேவைப்பட்டன. அந்த ஒன்பது மாதங்கள் அவர் அமைதியாக, ஒரு கூட்டுப் புழுவைப்போல் தன்னில் முழு மாற்றத்தை அனுபவித்தார்.
நம்மிலும் இத்தகைய மாற்றத்திற்கு நாம் இடமளிக்க வேண்டும். வாய்ப்பேச்சு வீரர்களாக இருப்பதில் ஒரு பயனுமில்லை. அமைதியில் கடவுளின் திருவுளம் நிறைவேற நம்மால் இயன்றதை செய்ய முற்பட்டால் போதும். நாமும் ஒரு செக்கரியாவாக மாறலாம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, செகரியாவைப் போல, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உமது ஆற்றலும் மாட்சியும் உலகில் வெளிப்பட, உமது நம்பிக்கையின் கருவியாக என்னைப் பயன்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 012 228 5452