சாட்சிய வாழ்வுக்குத் துணிவே துணை!|ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு
03 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 17ஆம் வாரம் - சனி
எரேமியா 26: 11-16, 24
மத்தேயு   14: 1-12 
 

சாட்சிய வாழ்வுக்குத் துணிவே துணை!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், எரேமியா யூதேயாவுக்கு எதிராக வரவுள்ள அழிவு குறித்து எருசலேம் ஆலய வாசலில் கூறிய செய்தியைக் குறித்து,  குருக்களும் போலி இறைவாக்கினரும்   மக்கள் முன் “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, எருசலேமுக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று பொய்யுரைத்தனர்.

ஆனால், எரேமியாவோ துணிவுடன் கடவுள் தனக்குக் கட்டளையிட்டதை மட்டுமே சொன்னார்  என்று துணிவாகத் தன்னைத் தற்காத்துக் கொள்கிறார்.  மக்கள் தங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்தி, கடவுள் பக்கம் திரும்பினால், எருசலேம் மற்றும் யூதேயாவுக்கு   எதிராக முன்னறிவிக்கப்பட்ட தண்டனையிலிருந்து ஆண்டவரால் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளதாக  அறிவுறுத்துகிறார். 

நிறைவாக, எரேமியாவின் உரையை மீண்டும் செவிமடுத்தப் பிறகு,  யூதர்கள் குருக்களையும் பொய் இறைவாக்கினர்களையும் எதிர்த்து,  எரேமியாவுக்கு ஆதரவாகப் பேசினர்.  


நற்செய்தி.

இன்றைய நற்செய்தியின் மையமாக திருமுழுக்கு யோவான் இடம் பெறுகிறார்.  ஏரோது, இயேசுவைப் பற்றி கேள்விப்படுகிறான். அவனுடைய பார்வையில், சமீபத்தில்,  அவன் திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டி கொன்றான் அல்லவா?  அந்த திருமுழுக்கு யோவான்தான் இயேசுவாக உயிர்த்து வந்தள்ளார் என்று  நம்பினான்.

ஆம், ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவுடன் வாழ்ந்து வந்தான். இந்த தகாத உறவை திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் குறைக்கூறி வந்தார்.  இதைப் பொறுக்காத ஏரோதியா திருமுழுக்கு யோவானைக் கொல்ல திட்டமிட்டு, சதி செய்தாள். தன் திட்டம் நிறைவேற தன் மகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினாள். 

அவள், தந்திரமாக, ஏரோதின் பிறந்த நாளில் தன் மகளை சபையில்  நடனம் ஆடி ஏரோதை மகிழ்வித்தாள். ஏரோதுவும் மதிமயங்கி,  நடனமாடுபவள்  எதைக் கேட்டாலும் நிறைவேற்றுவதாக சபையில் வக்குறுதி அளித்தான்..முடிவாக, சூழ்ச்சி அரங்கேறியது. நடனம் ஆடிய பின், அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.  தன் வாக்குறுதியை நிறைவேற்ற சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்;

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நல்ல உள்ளம் கொண்டோர் ஒருபோது அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தீங்கு செய்யமாட்டார்கள். அவர்கள் கடவுள் பக்கம் இருந்து செயல்படுவர். எது வந்தாலும் அநீதிக்குத் தலைவணங்க மாட்டார்கள். 

முதல் வாசகத்தில் எரேமியா குருக்களுக்கும் போலி இறைவாக்கினருக்கும் தலைவணங்கவில்லை. அவ்வாறே, திருமுழுக்கு யோவானும் அரசனானாலும் அஞ்சாமல்,  உண்மையை உரைத்ததற்காக தன் தலையை இழந்தார். 

இந்த ஏரோதுவுக்கு திருமுழுக்கு யோவானைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் தனக்கு எதிராக குரல்கொடுத்த திருமுழுக்கு யோவானை அவன் சிறையில் அடைத்திருந்தான். ஆனால் இறுதியில் அவனது உணர்வுகளாலும் அதிகார ஆசையாலும் ஆட்கொள்ளப்பட்டான்.  யோவானின் தலை துண்டிக்கப்பட்டதைக் குறித்து ஏரோது ஏதோ ஒருவித வருத்தம் அல்லது பயம் அடைந்திருக்க வேண்டும். 

ஆனால், என்ன பயன்?  எத்தனையோ தவறுகளை, பாவச் செயல்களை நாமும் ஏரோதுபோல் செய்கிறோம். சில சமயங்களில் பிறர் சூழ்ச்சிக்கு இரையாகிறோம். எதுவாக இருந்தாலும், இறைவாக்கினர் எரேமியா “இப்பொழுதே உங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனதை மாற்றிக்கொள்வார்” என்று அழைப்பு விடுக்கிறார்.  நிறம் மாறும் பச்சோந்திகளாகவும், ஏரோதியாவைப் போல வில்லியாகவும்  நாம் இருக்கக் கூடாது. நிச்சயமாக .சூதும் வாதும் வேதனை செய்யும். 

இறைவேண்டல். 

ஆண்டவராகிய இயேசுவே, உமது முன்னோடியான திருமுழுக்கு யோவான் சாட்சியம் பகர்வதில் எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார். அவர்போல  நான் வாழ என்னை ஆசீர்வதிப்பீராக.  ஆமென்.


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments

Arokiya Raj.E … (not verified), Aug 02 2024 - 7:38pm
அலங்கார வார்த்தைகளும் ஆடம்பரக் கதைகளுமின்றி, மிக எளிய தமிழில் எல்லோர் மனதிலும் பதியும் வண்ணம் ஆழமான சிந்தனையை தூண்டும் வகையில் பகிர்ந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
நன்றியுடன் வாழ்த்துகிறேன்!
நாளும் உம் பணி சிறக்க வேண்டுகிறேன்!
- இயேசு.ஆரோக்கியராசு. புதுச்சேரி.
ஒருங்கிணைப்பாளர், தமிழ் குழு.
NBCLC. பெங்களூரு. இந்தியா.

Daily Program

Livesteam thumbnail