எனது செயல்பாடுகள் யாருக்குச் சான்று பகர்கின்றன? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -நான்காம் வாரம் வியாழன் 
I: விப: 32: 7-14
II: திபா: 106: 19-20, 21-22, 23
III: யோவா: 5: 31-47

ஒரு நாள் சாலையிலே பெரிய கூட்டம். மக்கள் அலைமோதிக்கொண்டு சென்றனர். ஊடக நண்பர்கள் கேமராக்களுடன் தயாராக இருந்தனர். அதற்கான காரணம் பணக்காரரும், ஊரிலே பெரிய மனிதர் என்று பெயரெடுத்த மனிதர் ஒருவர் அவருடைய பிறந்த நாளன்று ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களும் நிதி உதவிகளும்  வழங்குகிறார் என்பதே. அந்நிகழ்ச்சிக்கு பலரை அவரே ஏற்பாடு செய்து அவரைப் பற்றி பெருமையாக பேசும்படி தயாரித்திருந்தார். அத்தோடு அவர் செய்கின்ற உதவியானது ஊடகங்களில் வருமளவுக்கு ஏற்பாடுகளும் செய்திருந்தார். உதவி பெற்று சென்ற மக்களும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டே சென்றனர்.

இன்றைய உலகில் நடைபெறுவது இவைதான். பல சமயங்களில் மனிதர்கள்  தாங்கள் செய்கின்ற காரியங்கள் பெரிதாய் பேசப்பட அவர்களே சான்றுகளை முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து கொள்கின்றனர். அச்சான்றுகளெல்லாம் உண்மையாக இருப்பதில்லை. நம்முடைய அரசியல்வாதிகளெல்லாம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். உண்மையாகவே நாம் செய்கின்ற நற்காரியங்கள் தூய்மையான உள்நோக்கம் கொண்டு பிறர் நலத்தை மட்டுமே அடிப்படைக் காரணமாகக் கொண்டிருந்தால், அதை அனுபவித்தவர்கள் தாங்களாகவே அச்செயல்களுக்கும் அதைச் செய்தவர்களுக்கும் காலமெல்லாம் சான்று பகர்வார்கள்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இத்தகைய மனநிலையைத் தான் கொண்டிருந்தார். அவர் செய்த எல்லா நற்காரியங்களும் பிறர்நலனைக் கருத்தில் கொண்டதாகவும் அதைவிட மேலாக தந்தையின் அன்பை வெளிப்படுத்துவதாகவுமே இருந்தது. எனவே தான் என் செயல்களே எனக்குச் சான்றுகள் எனக் கூறுகிறார் அவர். அவருடைய சில அருஞ்செயல்களில் அவரைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என இயேசு கண்டிப்பாய்க் கட்டளையிட்டதையும் நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.

நாம் நன்மை புரிவதற்கு சான்றுகள் தேவையில்லை. அச்செயல்களே நமது நன்மைத் தனத்திற்குச் சான்றாக அமையும். நமது நன்மைத்தனம் என்பதைவிட நமக்குள் வாழும் இறைவனுக்குச் சான்று பகரும். அன்பு அவற்றில் வெளிப்பட்டால் நாம் இவ்வுலகை விட்டுச் சென்றாலும் நம் செயல்கள் நமக்காக இவ்வுலகில் சான்று பகர்ந்து கொண்டே இருக்கும். எனவே சாட்சிகள் தேடி நாம் செல்லும் மனநிலையைக் கைவிடுவோம். தூய பிறர்நல நோக்கோடு, இயேசு தன் செயல்களால் தந்தைக்குச் சான்று பகர்ந்ததைப் போல நாமும் நமது செயல்களால் மூவொரு இறைவனுக்குச் சான்று பகர்வோம்.

இறைவேண்டல்
நன்மையின் உறைவிடமே இறைவா! எங்களின் நற்செயல்களால் எங்களுக்கெனச் சான்றுகள் தேடாமல், உமக்குச் சான்று பகர வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Daily Program

Livesteam thumbnail