கடவுளை புறக்கணிக்கிறோமா? அல்லது நம்மை ஆள அனுமதிக்கிறோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 1 வெள்ளி (12.01.2023) 
மு.வா: 1 சாமு: 8: 4-7,10-22
ப.பா:திபா 89: 15-16. 17-18
ந.வ: மாற்: 2: 1-12

புறக்கணித்தல் என்பதை நாம் பல சொற்கள் கொண்டு புரிந்துகொள்ளலாம். ஒதுக்கிவைத்தல், கண்டுகொள்ளாது விடுதல், மறுப்பு, பொருட்படுத்தாமை என்ற பிற சொற்களும் ஏறக்குறைய புறக்கணித்தல் என்ற வார்த்தைக்கான பொருளை நமக்குத் தருகின்றன. இவ்வார்த்தைகளைக் கொண்டே புறக்கணித்தல் என்ற செயலின் அர்த்தத்தை மட்டுமல்ல அதனால் ஏற்படக்கூடிய உறவுப்பிரிவு மற்றும் வலியை நம்மால் உணர முடியும் அல்லவா. அதிலும் நன்கு ஆழமான அன்பான உறவு கொண்ட ஒருவரை உதாசீனப்படுத்தி புறக்கணிக்கும் போது அதனால் ஏற்படக்கூடிய மனவருத்தம் அதிகமாக இருக்கும்.ஆனால் அது பறக்கணிக்கப்பட்டவரை விட புறக்கணித்தவருக்கு அதிக இழப்பை பிற்காலத்தில் தரும். இதற்கு எடுத்துக்காட்டாக இஸ்ரயேல் மக்களை நாம் காணலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் சென்று தங்களுக்கு வேற்றினத்தவரைப் போல ஒரு அரசர் வேண்டுமென்று கேட்ட நிகழ்வு தரப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்களுக்குரிய தனிச்சிறப்பே அவர்களோடு கடவுள் செய்துள்ள உடன்படிக்கை. நான் உங்கள் கடவுளாய் இருப்பேன் நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் என்று கடவுள் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களை தனித்துவம் மிக்க மக்களாக மாற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று அவர்களும் மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால் நாளடைவில் வேற்றினத்தினரின் பழக்கவழக்கங்கள் அவர்களை ஈர்க்கத் தொடங்கவே, தங்களுக்காக அரசர் கேட்டார்கள். அதனால் அவர்கள் இதுவரை தாங்கள் கொண்டிருந்த தனித்துவத்தைப் புறக்கணித்தார்கள். கடவுளோடு செய்த உடன்படிக்கையைப் புறக்கணித்தார்கள்.  இதன் மூலம் கடவுள் தங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் மறந்து, மறுத்து கடவுளையே வேண்டாம் என ஒதுக்கினார்கள். இது கடவுளுக்கு எத்தனை வருத்தம் அளிக்கிறது என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை. 

தன் தந்தை தன்னைக் கண்டிக்கிறார். மற்ற தந்தையர்களைப் போல கேட்டதையெல்லாம் வாங்கித்தரவில்லை.  வசதியாக இல்லை. அழகாக இல்லை என எண்ணிக்கொண்டு, அவர் இரவு பகல் பாராமல் உழைத்ததையெல்லாம் மறந்து, நீ எனக்கு அப்பாவே இல்லை என ஒரு பிள்ளை தந்தையைப் புறக்கணித்தால் அந்த தந்தைக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும். அப்படிப்பட்ட தந்தையின் நிலைக்கு கடவுளை ஆளாக்கினர் இஸ்ரயேல் மக்கள்.

நாமும் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் தாம்.  அவர் நமக்கு அளித்துள்ள தனித்துவத்தை நம்முடைய பலவீனங்களால், உலக மாயைகளின் ஈர்ப்பால் பல சமயங்களில் புறக்கணிக்கின்றோம். கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை எண்ணி நன்றி சொல்ல நேரம் ஒதுக்காத போதும், அவருடைய சாயலான நம் பெற்றோரை மதிக்காமல் அவர்களுக்கு கீழ்படியாமல் நடக்கும் போதும், அயலாருக்கு  உதவாத போதும், இறைவேண்டலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெறும் கேளிக்கைகளில் நேரத்தை விரயமாக்கும் போதும், கடவுளுக்குரிய இடத்தை பணம் பதவி  செல்வாக்கு வீண்பெருமைகளுக்கு விட்டுக்கொடுக்கும் போதும் நாம் கடவுளைப் புறக்கணித்து அருளை இழக்கிறோம். அதை உணர்கிறோமா எனச் சிந்திப்போம்.

நாம்  புறக்கணித்தாலும் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்பவர் நம் இறைவன். உலகம் நம்மை முடக்கிப் போட்டாலும் அவருடைய அன்பாலும் மன்னிப்பாலும் நம்மால் மீண்டும் அவருடைய அன்புப் பிள்ளைகளாக மாற இயலும் என்பதை முடக்குவாத முற்றவரின் பாவங்களை மன்னித்து அவரை குணமாக்கிய  இன்றைய நற்செய்திப் பகுதி நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.எனவே நமது பாவ வாழ்வால்  கடவுளைப் பறக்கணிக்காமல் , அவருடைய அன்பிற்கு தலைவணங்கி அவரை நம் அரசராக தலைவராக ஆள அனுமதிப்போம். அவர் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கை படி அவரே எந்நாளும் நம் கடவுளாகட்டும். நாம் எந்நாளும் அவருடைய மக்களாய் இருப்போம்.

 இறைவேண்டல்
அன்பு இறைவா எங்கள் அரசரே! உலக கவர்ச்சிகளால்  ஈர்க்கப்பட்டு உம்மைப் புறக்கணித்த தருணங்களுக்காக மனம் வருந்துகிறோம்.எம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டு உம் அன்பால் எம் உள்ளங்களை எந்நாளும் ஆள எம்மையே உம்மிடம் ஒப்படைக்கும் மக்களாக வாழ வரமருளும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்