இயேசு எனக்கு யார்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 6 வியாழன்
மு.வா: தொநூ: 9: 1-13
ப.பா: திபா: 102: 15-17. 18,20,19. 28,22,21
ந.வா: மாற்: 8: 27-33
இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் பல முறை சிந்தித்திருக்கிறோம். தியானித்திருக்கிறோம். அவ்வாறு பல முறை தியானித்திருந்தாலும் நம் வாழ்வில் இயேசு நமக்கு யாராக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்ததுண்டா? உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம்மால் "என் வாழ்வில் இயேசு யார் ? என்ற கேள்விக்கு பதில் கண்டறிவது சாத்தியமில்லாதது தான். ஏனெனில் இயேசுவுக்கான இடத்தைதான் உலகம் நிரப்பிவிடுகிறதே.
இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு தம் சீடர்களிடம் தன்னைப்பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என விசாரிக்கிறார். சீடர்களும் மக்கள் கூறிய கருத்துக்களைப் பகிர்கிறார்கள். பின்னர் சீடர்களின் கருத்தைப் புரிந்து கொள்ள அவர்களை நோக்கி தன்னைப்பற்றி என்ன கூறுகிறார்கள் எனக் கேட்க பேதுரு,"நீர் மெசியா " என்று உரைத்தார்.
ஆண்டாண்டு காலமாக இஸ்ரயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர் என்கிறது மீட்பு வரலாறு. மெசியாவின் முன்னோடியாக பல நீதித் தலைவர்களும் இறைவாக்கினர்களும் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தினர் .இந்நிலையில் மெசியாவின் வருகையின் போது நடைபெறும் அறிகுறிகள் அனைத்தையும் மேல்தட்டு யூதர்கள் அறிந்திருந்தார்கள். நிச்சயமாக மக்களிடம் கற்பித்தும் இருப்பார்கள். இத்தகைய அறிகுறிகள் எல்லாம் இயேசுவால் நிறைவேறத் தொடங்கின. ஆயினும் யூதர்கள் பலரால் அதை உட்கிரகித்து இயேசுதான் மெசியா என்பதைக் கண்டுணர முடியவில்லை. மேல்தட்டு யூதர்களுக்கு இயேசுவின் மேல் பொறாமை. கீழ்தட்டு யூதர்கள், எளிய மக்களுக்கு ஏதோ அதிசயம் நடக்கிறது, உணவு கிடைக்கிறது என்ற ஆச்சரியம்.
இவவற்றின் மத்தியில்தான் பேதுரு இயேசுவை அடையாளம் காண்கிறார்.காரணம் அவர் இயேசுவை ஆர்வத்தோடும் அன்போடும் பின்பற்றினார்.
நாமும் இயேசுவை பல சமயங்களில் தாயாக தந்தையாக நண்பனாக ஏன் எல்லாமுமாக கருதுகிறோம். அவையெல்லாம் பல சமயங்களில் மேலோட்டமாகவே இருந்து விடுகின்றன. ஆகவே இயேசு நம் வாழ்வில் இடமற்று போய்விடுகிறார். இயேசுவின் இடத்தை பணம், பொருள்,பதவி,மோகம், ஆசை போன்றவை எடுத்துவிடுகின்றன. பேதுரு இயேசுவை மெசியாவாக அதாவது அடிமைத்தனத்திலிருந்து மீட்பவராக உணர்ந்தார். நாமும் இயேசுவை உலக அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்பவராக உணர்ந்து கொண்டால், அவர் நமக்கு எல்லாமுமாய் இருப்பார்.எனவே அவரை ஆர்வத்தோடும் அன்போடும் அணுகிச் செல்வோம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே உம்மை எம் மீட்பராக அடையாளம் கண்டுகொண்டு உம்மிடமே வர வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்