பிறருக்கு இயேசுவைக் கொடுக்கிறேனா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் முதல் வாரம் புதன்
I: திப: 3: 1-10
II: திபா :105:1-2, 3-4, 6-7, 8-9
III:லூக்: 24: 13-35
பொருளாதார வசதியிலே பின்தங்கிய இளைஞன் ஒருவன் வேலை தேடி அலைந்து வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஓரிடத்தில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். தானும் தன் வீட்டிலுள்ளவர்களும் சாப்பிட்டு சில நாட்களாகவே ஓரிரு பொட்டலங்கள் வாங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டான். ஆனால் உணவுப் பொட்டலங்களை வழங்கிய மனிதர் அவ்விளைஞனை பார்த்து "நன்றாகத் தானே இருக்கிறாய் வேலை செய்ய வேண்டியதுதானே? " என்று கூறி இரு பொட்டலங்களை அவனிடம் கொடுத்தார். அவ்விளைஞன் வாடிய முகத்தோடு அதைப் பெற்றுக்கொண்டான். அவன் முகம் வாடியதைக் கண்ட அந்நபர் தாம் தவறாகப் பேசியதை எண்ணி வருந்தினார். சில தினங்கள் கழித்து அதே இளைஞன் வேலை தேடி அலைவதைக் கண்டார் அவர். மனமிரங்கியவராய் அவ்விளைஞனை அழைத்தார். அவன் சொல்வதற்கு முன்பே அவனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டவராய் தன் கடையில் சிறிய சம்பளத்திற்கு வேலை கொடுத்தார். பின் அவ்விளைஞனைப் பார்த்து "தம்பி எனக்கு நிறைய சம்பளம் தர முடியாது. ஏதோ என்னால் முடிந்ததைத் தருகிறேன். வியாபாரம் நன்றாக முன்னேறினால் கூட்டித் தருகிறேன் " என்று கூறினார். அவ்விளைஞன் பேச வார்த்தையின்றி முதலாளியை நோக்கி கண்ணீர் மல்க கை எடுத்துக் கும்பிட்டார்.
ஆம். நாம் பிறருக்கு என்ன கொடுக்கிறோம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதும் பயனுள்ளதை கொடுக்கிறோமா என்பதும் தான் முக்கியம்.
நம் ஆண்டவர் இயேசு கொடுப்பதில் வல்லவர். இருப்பதை அனைத்தையும் கொடுப்பதில் அவரை மிஞ்ச யாருமில்லை. அவர் அப்படி என்ன கொடுத்தார்? அனைவருக்கும் அன்பைக் கொடுத்தார்.பாவிகளுக்கு மன்னிப்பைக் கொடுத்தார். தனிமையில் இருப்போர்க்கு ஆறுதலைக் கொடுத்தார். நம்பிக்கை இழந்தோர்க்கு நம்பிக்யையைக்கொடுத்தார். நோயாளிகளுக்கு நலனைக் கொடுத்தார்.பசித்தோருக்கு உணவு இறந்தோருக்கு உயிர் கொடுத்தார். இறுதியில் தன் உடலையும் இரத்தத்தையும் அனைத்திற்கும் மேலாக தன்னுயிரையும் கொடுத்தார். நம்மையும் கொடுக்க அழைக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் தங்களிடம் பிச்சைக் கேட்ட கால் ஊனமுற்றவருக்கு பேதுருவும் யோவானும் " வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறியதாக நாம் வாசிக்கிறோம். அவர்கள் பிறவியிலிருந்து கால் ஊனமுற்று முடங்கிக் கிடந்த மனிதருக்கு புது வாழ்வைக் கொடுத்தார்கள். நம்பிக்கையைக் கொடுத்தார்கள். இயேசுவின் பெயரால் அம்மனிதன் எழுந்து நடந்தான். அங்கே பேதுருவும் யோவானும் பொன்னையும் வெள்ளியையும் விட உயர்ந்த இயேசுவின் அன்பைக் கொடுத்தார்கள். ஒருவேளை அவர்கள் பிச்சையிட்டிருந்தாலும் கூட அம்மனிதன் மகிழ்ந்திருப்பார். அது சில தினங்களே. பிச்சையிட்ட காசு முடிந்த பின் பழைய நிலைதான் இருந்திருக்கும். ஆனால் சீடர்கள் இயேசுவைக் கொடுத்ததால் அவன் வாழ்வே புதிதாக மாறியது. இம்மகிழ்ச்சி வாழ்நாள் முழுமைக்குமானதல்லவா.
நம் ஆண்டவராகிய இயேசு வெறும் புதுமைகள் செய்வதோடு நிறுத்தியிருந்தால் சில காலம் தான் மக்களின் நினைவில் இருந்திருப்பார். அவர் தன்னையே தந்ததால்தான் இன்றும் நிலைத்து நிற்கிறார். எம்மாவுஸ் பயணம் சென்ற சீடர்கள் இயேசுவை முதலில் கண்டுணரவில்லை. அவர் மறைநூலை விளக்கிய போதுஅவர்களின் உள்ளங்கள் பற்றி எரிந்ததே தவிர அவர்தான் இயேசு என உணரவில்லை. ஆனால் அப்பத்தை பிட்டுக் கொடுக்கும் போது இயேசு என்பதை உணர்ந்தார்கள். ஏனெனில் அந்த அப்பத்தை அவர் உடலாக இராஉணவில் தந்தது அவர்கள் நினைவுக்கு வந்தது.கொடுத்தலுக்கு அவ்வளவு வலிமை.
எனவே அன்பு சகோதரமே கொடுப்பவர்களாக நாம் வாழ வேண்டும். பொருட்கள் மட்டும் கொடுப்பவர்களாக அல்ல, அன்பை, ஆறுதலை, மன்னிப்பை, உடனிருப்பை, இரக்கத்தை, இதுபோன்ற நற்செயல்கள் மூலம் இயேசுவைக் கொடுப்பவர்களாக நாம் வாழ வேண்டும். மாற வேண்டும்.இயேசுவை பிறருக்குக் கொடுக்கத் தயாரா?
இறைவேண்டல்
அன்பே இறைவா! அனைத்தையும் எமக்காகக் கொடுத்த இயேசுவே! உம்மை பிறருக்குக் கொடுப்பவர்களாக நாங்கள் வாழ அருள்புரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்