காலத்திற்கும் கலாம் தந்த பரிசு!

        இந்தியாவில் ஆண்டுதோறும் மே 11 ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடிவருகிறோம். 1998 ஆம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல்கலாம் தலைமையில், இந்தியாவில் உள்ள போக்ரானில் இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தி முதல் வெற்றி கண்டது. இதனால் உலகின் அணு ஆயுத கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாம் இடத்தினை பிடித்தது. உலகமே நம் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடந்த அந்த சோதனையை நினைவுபடுத்தவும், அறிவியல் தொழில்நுட்பத்தினை வளர்க்கவும், மக்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் 1999 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
        2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களை புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழையின்போது பல உயிர்களைக் காப்பாற்றியதும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கவும், உணவளிக்கவும் உதவியது இந்தத் தொழில்நுட்ப வரவான சமூக வலைதளங்கள்தான். மேலும், சமீப காலங்களில் தமிழகம் கண்டிராத மிகப் பெரிய போராட்டமான இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் திட்டமிடப்பட்டு, தகவல் பரப்பப்பட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பங்கு அளவிடமுடியாது. 
        மனிதனின் வாழ்க்கையை எளிமையாக, விரைவாக, துல்லியமாக நடத்துவதற்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாம், நாம் வாழும் நிஜ உலகில் நேரத்தையும், எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் மாய உலகிற்கு மெல்ல மெல்ல நம்மைநாமே அறியாமல் அடிமையாகி வருகிறோம். எனவே, நம் அனைவராலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இயலாவிட்டாலும், இருக்கும் தொழில்நுட்பங்களை நுட்பத்துடன், அளவுடன், ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியேற்போம்.