நிழலாய் இருப்பவரே
உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் - திருப்பாடல்கள் 91:1. ஆண்டவர் நமக்கு நிழலாயிருக்கிறார். உன்னதரின் நிழல் உலகம் தராத அமைதியை நமக்கு தரும். "தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார்." என்று இறைவாக்கினர் ஏசாயா கூறுகிறார்.
இயேசுவின் காயங்களுக்குள் நாம் மறைந்துகொள்ளுவது நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பு. அவருடைய நிழல் நமக்கு அடைக்கலமாயிருக்கிறது. பூமியிலே கட்டிடங்கள், மரங்கள் போன்றவை நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. இவை மழையிலிருந்தும், வெயிலிலிருந்தும் மாத்திரமே நம்மை பாதுகாக்கின்றன. ஆனால் நிரந்தர நிழலும் பாதுகாப்பும் தருபவர் நம் ஆண்டவர் ஒருவரே.
போராட்டங்களிலிருந்தும், தீய ஆவிகளின் வல்லமைகளிலிருந்தும், பொல்லாத மனிதரின் சீறல்களிலிருந்தும், கொள்ளை நோய்களிருந்தும் நமக்கு நிழலும், பாதுகாப்பும் வேண்டுமென்றால் நாம் இயேசுவின் நிழலை நோக்கித்தான் ஓடவேண்டும். அவருடைய காயங்களில் தான் நம்மை மறைத்து கொள்ள வேண்டும்.
ஜெபம்: ஆண்டவரே எங்களை காத்தருளும். எங்களுடைய வலப்பக்கத்தில் எங்களுக்கு நிழலாய் இரும். பகலில் கதிரவன் எம்மை தாக்காது, இரவில் நிலாவும் எம்மை தீண்டாதுபாதுகாத்தருளும்.ஆண்டவரே எல்லாத் தீமையினின்றும் எங்களை காத்தருளும். எங்கள் அவர் உயிரைக் காப்பாற்றும். நாங்கள் வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்ட வரே எங்களை காத்தருளும். ஆமென்.