கையிலிருக்கும் பூமி - தியடோர் பாஸ்கரன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review
எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
தியடோர் பாஸ்கரன் அவர்களின் இயற்கை சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இந்த புத்தகம். எண்ணிலடங்கா தகவல்கள். நம் நாட்டில் இவ்வளவு இயற்கை வளங்கள் உள்ளதா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இயற்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் தியடோர் பாஸ்கரன். புத்தகம் பல பிரிவுகளாக உள்ளது ஒரு பெரும் வசதி. ஏனென்றால் வாசகர் எந்த பகுதியிலும் எந்த கட்டுரையையும் வாசிக்க தொடங்கலாம். நான் நேர்கோடாக படிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து முடித்தேன்.
ஏறு தழுவுதல் என்ற கட்டுரையில்" இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த பாரம்பரியம்.நகரங்களில் குளுகுளு அறைக்குள் அமர்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருக்கும் நாம், கால்நடைகளை எவ்வாறு பேண வேண்டும் என்று குடியானவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை" என்கிறார். எவ்வளவு உண்மை. தெருநாய்களும் வெறிநாய்களும் கட்டுரையில் காந்தி எவ்வாறு வெறிநாய்களை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார் என்பதை படிக்கும் பொது ஆச்சிரியமாக இருக்கிறது. பங்களிப்பாளர்கள் பகுதியில் பல தெரியாத ஆளுமைகளைப் பற்றி மிகவும் தெளிவாக அவர்களின் நிறை குறை இரண்டையும் எழுதியுள்ளார். நான் ஸ்டீவ் எர்வினின் ரசிகன். எங்கள் வீட்டில் அனைவரும் அவரது "crocodile hunter" நிகழிச்சியின் ரசிகர்கள். அவரைப் பற்றியும் தியடோர் பாஸ்கரன் எழுதியுள்ளார். இந்த பகுதியில் குமரப்பா, மா.கிருஷ்ணன், ஜிம் கார்பெட், A.O. ஹ்யூம், கே.எம் மேத்யூ, ராமுலஸ் விட்டக்கேர், உல்லாஸ் கரந்த், மசனொபு புகோக்கோ ஆகியோரைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இந்த அனைத்து கட்டுரைகளும் வாசகனை இந்த ஆளுமைகளைத் தேடிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைக் ஏற்படுத்துகிறது.
தமிழில் இந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வரவேண்டும். அறிவியல் மற்றும் வனவிலங்குகளின் பெயர்கள் மீண்டும் தமிழில் பொது வெளியில் மக்களால் பேசப்பட வேண்டும். தியடோர் பாஸ்கரன் அய்யா கூறுவது போல சங்ககாலம் தொட்டே தமிழில் இயற்கை சார்ந்த வாழ்வுமுறையும் மொழியும் இருந்து வருகிறது. ஆனால் நாம்தான் இந்த இரண்டையும் விட்டு விலகி வந்துகொண்டே இருக்கிறோம். இதற்கு ஊடகங்களில் வரும் விலங்குகள் பெயர்களே சாட்சி.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.