ஒரு தாயின் அசாதாரண ரூபம்! | Interview with Mrs. Deepa Devi

Mrs. Deepa Devi - The Super Mom

அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் தீபா தேவி.
நான் ஒரு சிறப்பு கல்வி ஆசிரியர்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு மற்றுமொரு தகுதியும் இருக்கிறது.
நான் ஒரு சிறப்பு குழந்தைக்கு தாயும் கூட.

என்னுடைய வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

 

குடும்பம் உடன்பிறந்தோர் திருமணம் இவை ஒரு பெண்ணுக்கு மிகவும் சிறந்தது, உங்களுக்கு இவை எப்படி இருந்தன?

என் வாழ்க்கை எப்படி தொடங்கியது என்றால் 2003இல் எனக்கு திருமணம் ஆனது. அது வரை படிப்பு படிப்புக்கு அடுத்து வேலை என்று என் வாழ்வு இருந்தது. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று மகள்கள். அதில் நான் இரண்டாவது மகள் அதனால் வீட்டில் எனக்கு அதிகப்படியான செல்லம். இது மட்டும் தான் என் வாழ்க்கை எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று மகள்கள் நான் இரண்டாவது மகள் அதனால் எனக்கு அதிகப்படியான செல்லம் வீட்டில் இருந்தது என் தாய் என்னை கஷ்டங்கள் என்றால் என்ன என்பதை தெரியாமலேயே வளர்த்தவர். நான் எதை கேட்கின்றேனோ,  கேட்கின்றேன் என்பதைவிட எதை நினைகின்றேனோ அது எனக்கு கிடைக்கும். 

நான் படித்து முடித்தேன். படித்து முடித்த பின்பு ஒரு தனியார் மருத்துவமனையில் கணினி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் வேலையில் சேர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் போதே எனக்கு திருமணம் நிச்சயமானது. நிச்சயம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே நான் வீட்டில் இருந்தேன். எனக்கு அதற்குள் திருமணம் நடந்து விட்டது. அதுவரை நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு தான் இருந்தேன். எனக்கு வீட்டு கஷ்டம் என்ன என்பது தெரியாமலேயே அதுவரை வளர்ந்தேன். எங்கள் தாயார் வீடும் நடுத்தர குடும்பம். ஆனாலும்கூட கஷ்டம் என்பது என்ன என்பதையே எங்களுக்கு தெரியாமல் எங்கள் பெற்றோர் எங்களை வளர்த்தனர். நன்றாக படிக்க வைத்தார்கள், எல்லா விஷயமும் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்கேற்ப அப்பொழுதே எங்களுக்கு கணினி, தட்டச்சு என எல்லாவற்றையும் நாங்கள் ஒரு குறையுமின்றி அறிந்திருக்க செய்தார்கள். கல்வியில் நாங்கள் சிறந்த நிற்க வேண்டும், தன் பிள்ளை தன் சொந்தக் காலில் எவரையும் சார்ந்து இருக்காது நிற்க வேண்டும் என்று தீர்க்கமான முடிவு கொண்டு எங்களை கல்வியில் உற்சாகப்படுத்தினார்கள். மேலும் ஒரு நல்ல குடும்பத்தில் எங்களை திருமணம் செய்தும் கொடுத்தார்கள்.

என் கணவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். என் பெற்றோரின் வீடு சென்னையில் இருக்கின்றது. ஆனால் என்னை திருமணம் செய்து கொடுத்த வீடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பதினால் என்னால் அங்கிருந்து சென்னைக்கு பணிக்கு சென்று வர மிகவும் சிரமமாக இருந்தது. என் கணவரும் என்னை இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வேலைக்கு சென்று வர வேண்டாம் வீட்டிலேயே வீட்டுப் பொறுப்புகளை பார்த்துக்கொள் என்று ஏற்க வைத்தார்.

 

திருமணத்திற்கு பின்பு உங்கள் முதல் குழந்தைக்காக கருவுற்றிருக்கீர்கள் என்றவுடன் உங்களின் உணர்வு என்னவாக இருந்தது? உங்கள் கணவர் எந்தளவிற்கு உறுதுணையாக இருந்தார்?

நான் பணியிலிருந்து நின்ற உடனேயே என் முதல் குழந்தை கருவானது. அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த நேரத்தில் என்னை மிகவும் அதிக கவனத்தோடு பார்த்துக் கொண்டார்கள். ஆனால் என்னால் சரியாக உணவருந்த முடியாமலும் அடிக்கடி வாந்தியும் வந்து கொண்டிருந்தது. நான் கடைசியாக பிரசவ இடத்திற்கு சென்ற போதும் கூட வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். இதனால் என்னால் சரியாக உணவு அருந்த முடியவில்லை காலங்கள் கடந்தன நானும் வயிற்றில் குழந்தையோடு தாய் வீட்டுக்கு வழக்கமாய் செல்வதைப்போல சென்றேன். பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றேன் அப்பொழுது அங்கு ஸ்கேன் செய்து பார்த்தது எனக்கு பனிக்குடம் உடைந்து விட்டது என்றார்கள். அதனால் எனக்கு மகப்பேறு நடக்கும் என்று சொன்னார்கள். என்னை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தும் விட்டார்கள். அன்று காலையில் மருத்துவமனையில் சேர்ந்து அன்றைய நாள் முழுவதும் நீர் சென்று கொண்டே இருந்தது பிரசவம் நடக்க வில்லை.

மறுநாள் காலையில் எனக்கு மூச்சு திணற ஆரம்பித்து விட்டது. உடனே பயந்து விட்டு அவசர சிகிச்சை பிரிவில் என்னை சேர்த்து எனக்கு அறுவை சிகிச்சை செய்து முறையாக குழந்தை பிறப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்த பொழுது கையையும் காலையும் பிடித்து எடுத்திருக்கிறார்கள். என் கணவரை அழைத்து,  குழந்தையை வெளியே எடுக்கின்ற பொழுது கையில் டக் என்று ஒரு ஒலி கேட்டது, எனவே கை உடைந்து இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என நினைக்கிறோம் என்றார்கள். எனவே அந்தக் குழந்தையை ஒரு ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்றார்கள். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலேயே எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது, வலது கை உடைந்து இருப்பதை கண்டுபிடித்தார்கள். உடனடியாக இது சிசுவின் கை என்பதால் அந்த கைக்கு வெறும் பஞ்சு மட்டுமே சுற்றி அனுப்பி வைத்துவிட்டார்கள் இதை நீங்களாக தொடக்கூடாது குழந்தையாக அது அசைத்தாள் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஒரு பத்து நாட்கள் கழித்து மீண்டும் அழைத்து சென்ற பொழுது அந்த பஞ்சு சுற்றிய கட்டை எடுத்து விட்டு, குழந்தைக்கு இது சரியாக இருக்கும், நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், குழந்தை இயக்கினால் விட்டுவிடுங்கள், நீங்களே அதை அசைக்க, இயக்க முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

எனக்கு சற்று பயமாக இருந்தது. மீண்டுமாக இந்தக் குழந்தையே கையை தூக்கி ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து விட்டேன். எனவே என் குழந்தையே கையை தூக்கினாள், அவன் கூட தூக்க விடாதவாறு பார்த்துக் கொண்டேன். சரி அவன் இடது கையிலேயே அதிகமாக பழகட்டும் என்று அதிகப்படியான பயிற்சிகளை இடது கைக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு பத்து மாதம் வரை என் குழந்தை நன்றாகவே இருந்தது.

 

mom_n_son

உங்களுடைய முதல் மகன் ஒரு சிறப்பு குழந்தை என்று எப்பொழுது தெரிந்தது? தெரிந்தவுடன் அந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாண்டீர்கள்?

அவனுடைய வளர்ச்சியில் எந்த குறைபாடும் இல்லை. பத்து மாதங்கள் கழித்து திடீரென மிரள்வதைப்போன்று  அதற்குப் பின்பு சாதாரணமானதாக இருப்பான். மீண்டும் திடீரென மிரண்டு விடுவான் மீண்டும் சாதாரணமாக மாறிவிடுவான். இப்படியாக அடிக்கடி நடந்துகொண்டிருந்தது.

எனக்கு முதல் குழந்தை என்பதால் அவ்வளவாக என்ன செய்யவேண்டும் என்றும் தெரியவில்லை. என் கணவனின் தாயார் குழந்தைகளை இதுபோன்று சாமி மிரட்டுவது உண்டு என்று கூறினார். அதுவும் தூக்கத்தில் நடக்கும் அதனால் இது சாதாரணமானதுதான் என்று கூறினார். எனவே நானும் அதை சரி என்று விட்டுவிட்டேன்.

அந்த நேரத்தில் என் கணவரை வேலையின் இடத்திலே நாய் ஒன்று கடித்து விட்டது. அந்த நாய் கடிக்கு ஊசி போட போன இடத்திலே என் குழந்தையும் எடுத்து சென்றிருந்தேன். அந்த நேரத்தில் என் தங்கை என்னிடம் குழந்தைக்கு எவ்வாறு இருப்பதையும் மருத்துவரிடம் கூறலாமே என்று ஆலோசனை சொன்னதில் நான் கேட்ட பொழுது, அப்பொழுது மருத்துவர் இது ஒருவகையான வலிப்பு எனவே நீங்கள் காலம் தாழ்த்தாது உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதுவரை என் தாய் கூட குழந்தைகள் நல மருத்துவமனை என்றால் என்னவென்று தெரியாது. எங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்! நாங்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஓடினோம். தனியார் மருத்துவமனையில் கூட பார்த்தோம். அந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எனக்கு வழி கூட தெரியவில்லை. குழந்தையை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது அவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற இன்னும் பிற சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

எல்லா தகவல்களையும் பார்த்துவிட்டு ஒரு மாதம் வரை மாத்திரைகளை கொடுத்து பார்த்துக்கொண்டே இருந்தோம். அவர்களும் இந்த வகையான வலிப்பை சிறிது சிறிதாகத் தான் நிறுத்த முடியும். ஒரே முறையில் நிறுத்துவது இயலாது என்று கூறி மருந்துகளை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் சென்றபொழுது வலிப்பு வரவில்லை என்ற பட்சத்தில் இதே மாத்திரைகளை தொடர்வோம் என்று எங்களை தொடரவும் சொன்னார்கள். எனக்கோ குழந்தையை பரிசோதிக்காமல் அதே மாத்திரைகளை தொடர்ந்து கொடுப்பதில் அவ்வளவாக உடன்பாடு இல்லை. எனவே நான் தனியார் மருத்துவமனையில் என் குழந்தையை காண்பிக்க சென்றேன் அதற்கு பின்பு இந்த வலிப்புநோய் அவனுக்கு ஏற்படவில்லை என்றாலும் எட்டு வருடங்கள் வரை ஈஸி என சில பிற  ஆய்வுகளை செலுத்தி அவனை கண்ணும் கருத்துமாக கண்காணித்துக் கொண்டே வந்தேன். அதற்குப் பின்புதான் மருத்துவரே இனி மாத்திரைகள் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைத்தார். இன்றுவரை அப்பேர்ப்பட்ட வலிப்புநோய் என் மகனுக்கு வரவில்லை. நானும் எந்த மருந்துகளும் கொடுப்பதில்லை.

இந்த சிறப்பு குழந்தையின் வளர்ச்சியில் மருத்துவதைத் தாண்டி உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருந்தது?

இது ஒரு புறம் சென்று கொண்டே இருந்த நேரத்தில் அவனுடைய வளர்ச்சியை நான் கவனிக்க நேர்ந்தது. இந்த வலிப்பு வந்ததினால் என் மகனுக்கு அவனுடைய வளர்ச்சியிலே தாமதம் ஏற்பட்டது. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி குறைவுபட்டது. என் மகன் எழுந்து நிற்க ஆரம்பித்தான் ஆனால் நடை பயில முற்படவில்லை. அதற்குப் பின்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள், என் மகனுக்கு இதுபோன்ற செய்முறை இயக்கங்களை தரவேண்டும் என்று கூறினார்கள். எனக்கு இந்த சிறப்பு குழந்தைகளை பற்றி தெரியாது. அவர்களுடைய உலகத்தைப் பற்றியும் தெரியாது. எனக்கோ மனதளவில் இன்னும் ஆறு மாதங்கள் சென்றால் என் மகன் சரியாகி விடுவான், வளர்ச்சி வந்துவிடும் என்று ஒரு சாதாரண தாய்க்கே உண்டான அந்த எதிர்பார்ப்போடு என் மகனை இங்குமங்குமாக, அவனுக்கு உண்டான செய்முறை இயக்கங்களுக்கு அழைத்துச் செல்வதும் வருவதுமாக இருந்தேன். ஒரு தாயின் மனநிலையில் நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். நான் என் தாயார் வீட்டில் இருந்து கொண்டு தான் இப்பேர்பட்ட மருத்துவ உதவிகளை என் மகனுக்கு வழங்கிக் கொண்டிருந்தேன்.

நான் என் தாயார் வீட்டிற்கு அருகில் இருந்த அந்த மருத்துவமனைக்கு என் குழந்தையை கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது அதே மருத்துவமனையில் சிறப்பு பள்ளி இருந்ததனால் அங்கேயே என் மகனையும் சேர்த்து பயிற்சியையும் செய்முறை இயக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டேகால் வயதிலிருந்து என் மகனை நான் அங்கு அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.

என் கணவரும் கூட நீ அங்கேயே இரு, குழந்தைக்கு சரி ஆனால் அது மிகவும் சரியானதாக இருக்கும், பரவாயில்லை, என்று முழுமூச்சில் ஒத்துழைப்போடு இருந்தார். இதற்குப் பின்புதான் இந்த சிறப்பு குழந்தைகள் என்ற ஒன்று இருக்கின்றது. இவர்களுடைய உலகம் முற்றிலும் வேறு. இதில் பல பிரிவுகளில் குறைபாடு இருக்கின்ற குழந்தைகள் இருக்கிறார்கள் என்று இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற ஒரு பள்ளியும் பயிற்சியும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே போதுமானதாக இருக்காது. இதுபோன்று செய்முறை இயக்கங்களும் தொழில்முறை இயக்கங்களும் தேவைப்படும் என்பதை நான் அறிந்து கொண்டேன். பின்பு வாழ்நாள் முழுவதும் தாயார் வீட்டிலேயே நான் இருக்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டு என் கணவர் வீட்டுக்கு வந்துவிட்டு அதற்கு பின்பு அங்கிருந்து போய் வரக்கூடிய தூரத்தில் இருந்த மிகப் பெரிய மருத்துவமனைக்கு என் மகனை மாற்றி மருத்துவ உதவிகளையும் சிறப்பு கல்வியையும் இயன்முறை செய்முறை இயக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தேன். இதற்கு மத்தியிலும் நான் இன்னும் பிற பள்ளிகளுக்கு என் மகனை அழைத்துச் செல்வேன். காலையில் பொழுது விடிய,  வேண்டிய உணவை சமைத்து எடுத்துக் கொண்டு தண்ணீர் மற்றும் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு, என் மகனை அழைத்துக் கொண்டு இவ்வாறாக ஒவ்வொரு மருத்துவராக சுற்றிவிட்டு நான் மாலையில் வருகின்ற பொழுது, என் மகனுக்காக நான் ஓடுகிறேன், ஓடுகிறேன் என்ற ஒரு மனத் திருப்தி மட்டுமே இருந்தது. நான் சென்னையில் மையப் பகுதியில் தாண்டிய பகுதிகளுக்கும் ஒரே நாளில் சென்று பல்வேறு இடங்களில் பல்வேறு மருத்துவர்களை பார்த்து மீண்டும் சென்னையை தாண்டி இருக்கின்ற என்னுடைய கணவர் வீட்டுக்கு என்று கிட்டத்தட்ட ஒரு நாளிலேயே 50 60 கிலோ மீட்டர்களை என் மகனோடு  எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சென்று வந்து கொண்டிருந்தேன்.  என் மகன் குணமானால் போதும் என்ற அந்தத் தாயின் மனதோடு.

ஏன் இவ்வாறு நிறைய மருத்துவமனைகளுக்கு பள்ளிகளுக்கு சென்று வந்தேன் என்றால் இவ்வாறாக என் மகனுக்கு சிறப்பான தகவல்களை மருத்துவ உதவிகளை  அவனுக்கு கொடுத்தால் விரைவாக குணமாகிவிடும் என்று அந்த தாய் மனதோடு ஓடிக்கொண்டிருந்தேன். என் குழந்தையை நான் கொண்டு வரவேண்டும் என்று இருந்தேன். 


இதற்கு பின்பு நீங்கள் வேலைக்கு செல்ல விரும்பினீர்களா? உங்கள் கணவர் சம்மதித்தாரா?

இதற்கு மத்தியில் எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது. நான் அந்த வேலையில் ஆறு மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில் என் மகனை என் தாயார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து நான் ஏன் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் மகனுக்கு என்று ஒரு சிறப்பு கல்வி ஆசிரியரை நியமித்து நான் முன்பு எப்படி பயிற்சியை கொடுக்க வேண்டும் என்று இருந்தேனோ அந்த பயிற்சியை தொடர்ந்து என் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் என் மகனுக்காக பொருளாதார உதவிகளுக்காக நான் வேலைக்கு செல்வதும் என் கணவர் வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எண்ணத்தை கருத்தில் கொண்டு நானும் என் கணவரும் தொடர்ந்து வேலையையும் வீட்டையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

வெள்ளிக்கிழமை மாலை என் குழந்தையை அழைத்துக்கொண்டு என் கணவர் வீட்டுக்கு வந்துவிடுவேன். வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் என் குழந்தை என்னோடு இருப்பான். திங்கள் காலையில் மீண்டும் அவனைக் கொண்டுபோய் என் அம்மா வீட்டில் விட்டுவிட்டு நான் வேலைக்கு போவேன். இவ்வாறாக நாட்கள் சென்றன.

 ஆனால் நான் என் குழந்தையுடன்  இருந்து கற்றுக் கொடுப்பதனால் ஏற்பட்ட வளர்ச்சி, நான் இல்லாத பொழுது வேறு ஒருவரின் வழியாக அது ஏற்படவில்லை. அந்த இலக்கை எட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் என் பிள்ளை முன்னேற்றம் அடைவதைவிட  பின்னோக்கி செல்ல ஆரம்பித்தான். எனவே என் கணவர் நாம் சம்பாதிப்பதே நம் மகனுக்காகத்தான். அவனுக்கு நம் சம்பாதித்தால் எந்த பயனும் இல்லை மாறாக நம்முடன் இருந்தால் பயன் இருக்கிறது என்கின்ற பொழுது, நாம் ஏன் வேலைக்கு சென்று கொண்டிருக்க வேண்டும் நீ வேலையை விட்டுவிட்டு குழந்தையோடு இரு, அது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்று கூறினார். நானும் இது சரி என்று உணர்ந்து கொண்டேன். எனவே அரசாங்க வேலையை விட்டுவிட்டு என் பிள்ளைக்காக நான் ஒரு தாயாக தொடர வேண்டுமென்று முழுநேரமும் என் பிள்ளைக்காகவே செலவிட முற்பட்டேன்.

family_dinner

சிறப்பு குழந்தையின் தாயக இருந்த நீங்கள் சிறப்பு கல்வி ஆசிரியையாக உருவெடுத்தது எப்படி?

 என் கணவர் என்னிடம் சொல்லியது என்னவென்றால், என் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கின்ற அந்த கல்வியை நான் கற்றுக் கொண்டு என் பிள்ளைக்கு கற்றுக் கொடுக்கலாம் என்று. அந்த கல்வியை நீ பயிற்சி எடுத்துக் கொள் என்ற என் கணவருடைய அந்த ஒரு சொல்லால் இன்று நான் அந்த கல்வியை கற்றுக் கொண்டு ஒரு சிறப்பு ஆசிரியையாக என் குழந்தையை நன்கு புரிந்துகொண்ட ஒரு தாயாக இருக்கிறேன்.  என் கணவருக்கு நன்றி.

நான் இன்றைக்கு இந்த அளவுக்கு பேசுகிறேன். ஒரு ஆசிரியையாக இருக்கிறேன் என்றால் அதற்கு என் கணவரே முழு காரணம். அவர் மட்டும் அன்று இப்பேர்ப்பட்ட ஒரு யோசனையை வழங்கவில்லை என்றால் நான் இன்றுகூட என் மகனை இங்குமங்குமாக அழைத்துக் கொண்டு இருக்கின்ற ஒரு தாயாக இருந்து இருப்பேன். அவனுடைய முன்னேற்றத்தில் பங்கேற்ற ஒரு தாயாக நான் இருக்க மாட்டேன். இந்த ஒரு சிறப்பு சிந்தனையை எனக்கு வழங்கிய என் கணவருக்கு மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க உங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள்? 

நடுத்தர குடும்பம் ஆகிய எங்களுக்கு பணம் தேவையாக தான் இருந்தது. ஆனால் அது என் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவவில்லை என்கின்ற பொழுது அதை வேண்டாம் என்று விடுகின்ற அளவிற்கு மனம் தயாரானது. உடனே நான் இளங்கலை சிறப்பு கல்வியை படிக்க தொடங்கினேன்.

 

உங்கள் உற்றார் உறவினர்கள் உங்கள் குழந்தையை எவ்வாறு பார்க்கிறார்கள்? எப்படி பழகுகிறார்கள்?

நான் எனக்கு குழந்தை பிறந்த அந்த நேரத்திலே நான் இருந்தது ஒரு கிராமத்தில், அவர்கள் எல்லோருமே என் பிள்ளையை தனித்துப் பார்க்க, வேறுபடுத்தி பார்க்க துவங்கிவிட்டார்கள். எங்கள் உறவினர்கள் மத்தியிலும் கூட அந்த வேறுபாடு இருந்தது. என் கணவரின் குடும்பத்தார் இதை ஒரு சாபம் என்றும் பாவம் என்றும் பார்த்தார்கள். என் குழந்தையை பரிதாபமாகப் பார்ப்பார்கள்.

அதற்கு மாறாக என் தாயார் வீட்டு சொந்தங்கள். எல்லா குடும்ப நிகழ்வுகளுக்கு என் மகனோடு வரவேண்டும் என்று அழைத்து, அந்த இடத்திலே என் மகனுக்கு முக்கிய கவனிப்பையும் கொடுப்பவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். 

நான் என் குழந்தைக்கு முதலிலேயே கல்வியைத் தர வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன், பயிற்சிகளையும் கொடுக்க ஆரம்பித்தேன். பின்பு நான் எனக்குள்ளேயே சிந்தித்தது என்னவென்றால், கல்வியை கற்றுக் கொண்டு என் மகன் என்ன செய்ய வேண்டும் என்பதை விட முதலிலேயே அவன் சுயசார்பு இருப்பவனாக இருக்கவேண்டும். எனவே அவனுடைய அன்றாட வேலைகளை செய்து கொள்ள பழக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்குண்டான பயிற்சியும் கொடுக்கத் தொடங்கினேன்.

bros

உங்கள் இரண்டாவது மகன் பிறந்தது எப்போது? நீங்கள் கருவுற்றிருந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

இதே நேரத்தில் எனது இரண்டாவது மகனும் கருத்தரித்தான். அந்த நேரத்தில் எனக்கு மற்றுமொரு பயமும் வந்துவிட்டது. முதல் குழந்தைதான் இவ்வாறாக இருக்கின்றது அடுத்த குழந்தையும் எவ்வாறு இருக்குமோ என்ற பயத்தில் இருந்தேன். அப்பொழுது என் தாயார் எந்த தவறான எண்ணங்களுக்கும் உன் மனதில் இல்லாத அளவிற்கு பார்த்துக்கொள். குழந்தை நன்றாகவே பிறக்கும் என்றார். இறைவனின் அருளால் எனது இரண்டாவது குழந்தை நலமாக இருக்கிறான்.  அவனது பெயர் ஹரிஷ். தற்போது அவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

 

அண்ணன் தம்பிக்கு இடையே உள்ள உறவு எப்படியானது?

எனது இரண்டாவது மகன் எங்களது மூத்த மகனை நாங்கள் எப்படி பார்த்துக் கொள்வோமோ அதைவிட ஒருபடி அதிகமாகவே கவனத்தோடு பார்த்துக் கொள்கின்றான். அவனை அண்ணா என்றுதான் அழைப்பார். அவனுக்கு  தேவையானதை வாங்கித் தருவான். நாங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை வருகின்ற பொழுது. அவனை நம்பி என்னுடைய மூத்த மகனை ஒப்படைத்து செல்லக்கூடிய அளவுக்கு மிகவும் பொறுப்புடன் கவனத்துடன் தன் சகோதரனை பார்த்துக் கொள்கின்றான். இப்பொழுது நான் அவனுக்கு சொல்லிச்சொல்லி வளர்த்துக் கொண்டிருக்கிறேன். பிற்காலத்தில் அண்ணனை பார்த்துக் கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பு அவனிடம் வரும் என்று. எங்கள் வீட்டில் இருவருக்கும் சம உரிமை தான் கொடுக்கப்படுகிறது. இதில் சொல்லப்போனால் என் இரண்டாவது மகனை விட  மூத்த மகனுக்கு தான் உரிமைகள் சற்று அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. 

 

activity

உங்கள் மூத்த மகன் நீங்கள் சொல்லிக்கொடுப்பதை தாண்டி ஏதேனும் செயலில் உங்களை வியப்பில் ஆழ்த்தியதுண்டா?

என்னுடைய மூத்த மகன் சிறுவயதில் இருந்த பொழுது வீட்டில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று எழுந்து ஓடினார். எங்கு ஓடுகிறான் என்று பார்க்கின்ற பொழுது ஒரு குழந்தை மிதிவண்டியை இயக்கிக் கொண்டிருந்தது. அதை நோக்கி ஓடி இருக்கின்றான். அந்த மிதிவண்டி இவனை ஈர்த்திருக்கிறது. இவன் ஓடிச்சென்றதை பார்த்துவிட்டு அந்த சைக்கிளை ஓட்டி வந்த குழந்தை போட்டுவிட்டு அலறிக்கொண்டே ஓடிவிட்டான். நாங்கள் எல்லோருமே வீட்டில் அருகில் இருப்பவர்கள் கூட இந்த குழந்தை ஏன் ஓடியது என்ற ஆர்வத்தில் அறிந்துகொள்ள போன பொழுது இவன் அந்த மிதிவண்டியை சென்று தொட்டான். இவனுக்கு மிதிவண்டி மீது ஏதோ ஒரு ஆர்வம் இருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே நான் என் குழந்தைக்கு மிதிவண்டியை வாங்கி தர ஆசைப்பட்டேன். ஆனால் என் குழந்தைக்கு பலமும் சரியான இயக்கமும்  இல்லாததால் மிதி வண்டியை ஓட்டுவது மிகவும் சிரமமானதாக இருக்கும். எனவே நான் மிதிவண்டிக்கு மேலும் இரண்டு பக்கவாட்டில் தாங்குகின்ற அளவுக்கு சக்கரங்கள் பொருத்திய வண்டிக்கு முயற்சி செய்தோம். இதுபோன்று பக்கவாட்டு சக்கரங்கள் இருக்கின்ற வண்டியிலேயே என் மகனுக்கு நான் பயிற்சியை கொடுத்துக் கொண்டிருந்தேன். இதேபோன்று இதிலேயே ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படி என்கின்ற எண்ணமும் என் மனதில் வந்து கொண்டுதான் இருந்தது என் மகனுக்கு இன்னும் அதிகமாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தேன். 

என் குழந்தைக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும் இவனுடைய உயரத்தின் காரணமாக குழந்தைகளுக்கு உண்டான அந்த மிதி வண்டியை ஓட்டுவது சிரமமாகவே இருந்தது இதை என் கணவரிடம் சொன்னேன் அவரும் இந்த நேரத்திலே அதை இன்னும் சரியாக பயன்படுத்திக் கொண்டு என் மகனுக்கு பெரிய சைக்கிளில் இரண்டு புறமும் தாங்குகின்ற சக்கரங்களை பொருத்த அவற்றை வாங்கிக் கொண்டு வந்து அவற்றை பற்றவைத்து இணைப்பை உண்டாக்கி என் மகனுக்கு அவன் உயரத்திற்கு ஏற்ற அந்த மிதிவண்டி ஓட்டுகின்ற அளவுக்கு செய்து கொடுத்தார். என் கணவருடைய பங்கேற்பு மிகவும் பெரியது.

இவ்வாறாக எப்பொழுதுமே பக்கவாட்டில் சக்கரங்கள் இருக்கின்ற மிதிவண்டியை மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றான் என்று நானும் யோசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு வாரமாக தன்னுடைய சிறிய வாகனத்தை அவளுடைய தம்பி பக்கவாட்டு சக்கரங்கள் இல்லாமல் ஓட்டுவதை கவனித்துக்கொண்டே இருந்தார் பின்பு அந்த சைக்கிளை எடுத்து கால்களாலேயே தட்டிக்கொண்டு இருந்தான் கால்களால் தட்டிக் கொண்டு சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். எல்லோரும் சொன்னார்கள் ஏன் அவன் வெறுமனே சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றான் என்று.  நான் சொன்னேன், இல்லை, அவன் ஏதோ ஒன்றை செய்ய முயற்சிக்கிறான் அவன் செய்யட்டும் விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். பத்து நாட்கள் இவ்வாறாகவே கால்களால் சைக்கிளை தள்ளிக்கொண்டு தட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். பதினோராவது நாள் அந்த மிதிவண்டியை கால்களால் இயக்க ஆரம்பித்தான். அதை பார்த்த பொழுது என் மனம் பூரித்து அந்த மகிழ்ச்சியில் என் கண்களில் நீர் வந்து விட்டது. இப்பொழுது கூட அந்த மகிழ்ச்சியில் என் கண்கள் குளமாகி நிற்கின்றன என்பதை பதிவிட ஆசைப்படுகிறேன். அதாவது என் மகன் பக்கவாட்டு சக்கரங்கள் இல்லாமல் ஒரு மிதிவண்டியை அவனுடைய வலது பக்க கையும் காலும் முழுமையாக செயல்படாத சூழ்நிலையில் கூட வண்டியை இயக்குகின்றதை பார்க்கின்ற பொழுது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதனால் கண்ணீரும் வந்தது.

எனவே இதில் நான் இன்னொன்றையும் கற்றுக் கொண்டேன் என் மகனுக்கு கூர்ந்து கவனிக்கிற, புதியவற்றை கற்றுக்கொண்டு கற்றுக் கொள்கின்ற செயல்திறனும் இருக்கின்றது என்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே என் மகனை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தினால் இன்னும் பலவற்றை கற்றுக் கொள்வான் என்பதை நான் அறிந்து கொண்டேன். அவனுடைய வேலையை, அவன் நினைத்ததை அவன் செய்து கொள்கின்ற அளவுக்கு அவனை உற்சாகப் படுத்தி தயார்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்குண்டான பயிற்சியும் கொடுத்தேன் இன்று என் மகன் அந்த சிறிய மிதிவண்டியில் இரண்டு பக்க சக்கரங்கள் இல்லாமலேயே சிறப்பாக சைக்கிளை இயக்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

screenshot_70

ஒரு சிறப்பு குழந்தை உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது?

என் மகனை வைத்துக்கொண்டு என்னுடைய 13 வருட கனவு பலித்தது. என் மகனை வைத்துக்கொண்டு நான் ஒரு யூடியூப் சேனலை கூட தொடங்கினேன். நிரை ஆல்ரவுண்டர் என்பது அதனுடைய பெயர். https://www.youtube.com/watch?v=ja2LlhWgfBc 
இன்னொரு செய்தியையும் நான் இங்கே பதிவிட ஆசைப்படுகின்றேன். நாம் நினைக்கலாம் இந்த குழந்தைகளுக்கு இது முடியாது அது முடியாது என்று. அல்ல இவர்கள் மாற்றுத்திறனாளிகள். இவர்களால் எதுவும் சாத்தியமே. ஆனால் அதை நாம் புரிந்து கொள்வதில் தான் தாமதம் ஏற்படுகிறது. என்னுடைய இந்த மகன் இல்லை என்றால் சிறப்பு கல்வி என்கின்ற ஒரு தளம் இருக்கிறது என்பதையே நான் அறிந்து இருக்க மாட்டேன். அதனாலோ என்னவோ கடவுள் எனக்கு இப்பேர்ப்பட்ட ஒரு குழந்தையை கொடுத்து அந்த உலகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

நான் நிறைய பேரிடம் சென்று என் குழந்தையின் பொருட்டு என் கஷ்டத்தை சொல்லி அழுத காலம் போய் இன்று நான் என் குழந்தையை 10 பேருக்கு முன் உதாரணமாகக் காட்டி அவர்கள் போற்றப்படுகின்ற இடத்திலே இருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் முதலில் என் கணவர். இரண்டாவது என் மகன். பின்பு என்னுடைய இளைய மகன். இவர்கள் மூவருமே காரணம். என்னுடைய கணவரும் இளைய மகனும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் முதல் காரணம் என்னுடைய மூத்த மகன் மட்டுமே. அவன் இல்லையேல் இப்பேர்பட்ட உலகத்தை நான் அறிந்து இருக்கவே மாட்டேன்.

family_function

உங்கள் மகனை வேறுபடுத்தி பார்த்த சொந்தபந்தங்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

முன்பெல்லாம் என் கணவர் என்னுடைய மூத்த மகனை அவருடைய சொந்தங்கள் மத்தியில்  அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலே யோசிப்பார்.தன் மகனை தன்முன்னே எதாவது சொல்லிவிடுவார்களோ என்ற தயக்கத்தில்தான்.  ஆனால் இப்பொழுது இளைய மகன் வேண்டும் என்றால் வீட்டில் இருக்கட்டும். ஆனால் மூத்த மகன் இல்லாமல் எந்த உறவினர் வீட்டுக்கு நிகழ்வுக்கும் செல்லமாட்டேன் என்று சொல்கின்ற அளவுக்கு வந்துவிட்டார். ஏனென்றால் என்னுடைய மூத்த மகன் இப்பொழுது அவனுக்கு உண்டான வேலையை அவனே பார்த்துக் கொள்கின்றான். யாரையும் சார்ந்து அவன் இருக்கவில்லை. அதே போன்று யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. அவன் தனது தேவையை வெளிப்படுத்துகின்ற பொழுது சற்று குரலை உயர்த்தி கத்துவதை போன்று தோன்றலாம். ஆனால் அவனை சரியாக புரிந்து கொண்டவர்களுக்கு அவன் தனது தேவையை வெளிப்படுகிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும். இது இயல்பு இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை. அவன் சரியாக அவனுக்கு உண்டான தேவையை சொல்லுகின்றான். அதை கவனித்து நிறைவேற்றுவதில் நாம்தான் தவறி விடுகின்றோம்.

 

அவர் படிக்கின்ற சிறப்பு பள்ளியில் அவரது செயல்பாடுகள் எப்படி உள்ளது?

எனவே இப்பொழுது நான் என் மூத்த மகனின் திறமையை வெளிப்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்கின்றேன். என் வீட்டில் நிறைவு என்றால் அவனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த பொருள் எங்கே இருக்க வேண்டுமோ அதை அங்கே கச்சிதமாக வைத்து வீட்டை பராமரிப்பதில் முக்கியப் பங்கு என்  மூத்த மகனுக்கு இருக்கின்றது. அதேபோன்று என் பள்ளியிலும் கூட பள்ளியை நடத்துகின்ற தந்தையர்கள் கூட நிறைவு என்றால் அது நிரஞ்சன் என்று கூறுவார்கள். அவ்வளவு சரியாக எடுத்த பொருளை எடுத்த இடத்திலே எப்படி இருந்ததோ அப்படியே பத்திரமாக வைக்கின்ற பக்குவமும் பயிற்சியும் இவர் பெற்றிருக்கின்றார். அருட்தந்தையர்கள் இந்த பொருளை இங்கே வைக்க வேண்டும் என்று சொன்னால் நிரஞ்சன் அதை சிறப்பாக செய்து விடுவான். அதில் வேற்று சிந்தனையே இல்லை. அதே போன்று இந்த பொருள் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அதை சரியாக சென்று காட்டுகின்ற அளவுக்கு இவன் தேர்ச்சி பெற்று இருக்கின்றான்.

family_movie

இதுபோன்ற சிறப்பு குழந்தை இருக்கக்கூடிய பெற்றோர்களுக்கு பொதுமக்களுக்கு உங்களின் அறிவுரை என்னவாக இருக்கும்?

நாம் நினைக்கின்றோம் இதுபோன்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும் என்று ஆனால் இவர்கள் எவ்வளவோ சாதிக்க முடியும் இவர்கள் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும் கூட. கடவுள் இதற்கான வழியை எனக்கு தருவார் என நம்புகிறேன். இந்த ஒரு பகிர்வு நிறைய பேருக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

 

 

எழுத்து: அருட்பணி. பிரகாஷ் SdC