ஆற்றலில் மிகப்பெரியது மனிதனின் மன ஆற்றல் | joseph stalin


சோவியத் ரஷ்யாவின் தலைமை அமைச்சராகவும். கம்யூனிச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, ரஷ்ய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்.

 

இவரது காலம் 1879-1953. இவர் ஓர் ஏழைத் தொழி லாளியின் மகனாகப் பிறந்தார். படிப்படியாக வளர்ந்து மாபெரும் மனிதராக உயர்ந்தவர்.ஓர் சர்வாதிகாரி என்று கூறும் அளவிற்கு அதிகாரம் பெற்று விளங்கினார். இவரது முழுப்பெயர் 'ஜோசப் விசரியானவிச் ஸ்டாலின்' என்பதாகும்.

 

இவர் ரஷ்யாவில், ஜார்ஜியா குடியரசில், காரி என்ற ஊரில் 1879ஆம் ஆண்டு - டிசம்பர் மாதம் இருபத்து ஓராம் நாள் பிறந்தார். இவர் தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. தாய் சலவைத் தொழிலாளி. இவர் குடும்பம் ஏழ்மைமிக்க ஒரு குடும்பம்.

 

குழந்தைப்பருவத்தில் இடதுகையில் ஏற்பட்ட ஒரு புண் காரணமாக, இவரின் ஒரு கை வளர்ச்சியில்லாத ஊனமாகவே இருந்தது. இவரது பெற்றோர் இவரை பாதிரியார் ஆக்கவே எண்ணினர்.

 

'ஆற்றலில் மிகப்பெரியது மனிதனின் மன ஆற்றல்" என்று கூறிய ஸ்டாலின், மன ஆற்றல் மிக்க மனிதராக இவர் இருந்தார்.

 

ஸ்டாலினை பாதிரியார் ஆக்கிட நினைத்த இவரது பெற்றோர் 1893இல் ஒரு சமயப்பள்ளியில் சேர்த்தனர். அங்கே பொதுவுடைமைக் கட்சியுடன் தொடர்பு கொண்டு, புரட்சி நடவடிக்கையிலும் ஈடுபட்டார். அதனால் இவர் அப்பள்ளியில் இருந்து 1898இல் விலக்கப்பட்டார்.

 

அதன்பிறகு இவர் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் (Russian Social Democratic Worker's Party) சேர்ந்தார்.

 

அக்கட்சி, அப்பொழுது ரஷ்யாவில் நடைபெற்ற ஜார் (Tsar) மன்னரின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டுவந்தது. இவரும் இம்முயற்சியில் பங்கு கொண்டார். இதனால் இவர் கைது செய்யப் பட்டார். நாடு கடத்தவும் பட்டார். ஒவ்வொரு முறையும் இவர் தந்திரமாக தப்பிவிடும் துணிவாளராகத் திகழ்ந்தார்.

 

இதே சமயத்தில் லெனின், ருஷ்யாவில் ஒரு பொதுவுடைமைக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 1905இல் ஸ்டாலின் லெனினை சந்தித்து தொடர்புகொண்டார். இவரது திறன் லெனினை மிகவும் கவர்ந்தது. இவர் லெனினின் சீடர் ஆனார். லெனினின் மிக நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். இக்காலத்தில் தான் ஸ்டாலின் திருமணம் நடைபெற்றது.

 

1917இல் லெனின் தலைமையில் ருஷ்யப்புரட்சி வெடித்தது. அதில் வென்று, லெனின் பொதுவுடைமை அரசை ஏற்படுத்தினார். அப்போது ஸ்டாலின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்தார். லெனின் இவரை ருஷ்யாவுக்கு வரவழைத்தார். தனது அமைச்சரவையிலும் ஸ்டாலினுக்கு இடம் அளித்தார். அதோடு 1922இல் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஸ்டாலின் தேர்வு செய்யப் பட்டார். இதுவே ருஷ்யாவில் செல்வாக்கு மிக்க பதவி யாகும். இப்பதவி மூலம் ஸ்டாலின் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

 

லெனின் 1924இல் மரணம் அடைந்தார். இந்த சமயத் தில் ஸ்டாலின் அப்பதவிக்கு விரும்பினார். அதேசமயம் லியான் புராட்ஸ்க்கி என்பவரின் போட்டியையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இப்போட்டியில் ஸ்டாலின் தான் ஜெயித்தார். 1929இல் புராட்ஸ்க்கி நாடு கடத்தப் பட்டார். அது முதல் ருஷ்யாவின் எல்லா அதிகாரமும் ஸ்டாலின் வசமாகியது.

 

ஸ்டாலின் ரஷ்யாவை ஓர் தொழில் வளமிக்க நாடாக்க விரும்பினார். இதற்காக பலவித திட்டம் தீட்டினார். அயராது உழைத்தார். எனினும் இவர் கொள்கைக்கு எதிர்ப்பும் எழவே செய்தது.

 

எதிர்ப்புகளை இவர் ஒடுக்கினார். 1930 முதல் 1924 முடிய கடும் அடக்குமுறையை மேற்கொண்டு, இவர் தனது எதிர்ப்பாளர்களை அடக்கினார். தம்மிடம் பற்றுகொண்டவர்களை தனக்கு துணையாக வைத்துச் கொண்டார்.

 

இந்த சமயத்தில் ஜெர்மனியில் ஹிட்லர் மாபெரும் செல்வாக்கு பெற்றார். ஹிட்லர் ருஷ்யாவைத் தாக்கச் கூடும் என ஸ்டாலின் நினைத்தார். ஹிட்லருக்கு எதிராக ஓர் ஐரோப்பிய கூட்டணியை உருவாக்க நினைத்தார். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே 1939இல் ஹிட்லருடன் இவர் ஒரு நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் 1941இல் இரண்டாம் உலகப்போரில் இந்த ஒப்பந்தம் மீறப் பட்டது. ஜெர்மனி ருஷ்யா மீது படையெடுத்தது. இவருக்கு ஆதரவாக பிரிட்டன், அமெரிக்கா கூட்டு சேர்ந்ததால் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது.

 

இரண்டாம் உலகப்போர் 1945இல் முடிவுற்றது. ஜெர்மனியை பங்குபோடும் முயற்சியில் இவருக்கு கருத்து உடன்பாடு இல்லை. இதேசமயம் இவருக்கு  நோயும் ஏற்பட்டது. அரசியல் பணிகளை குறைத்துக் கொண்டு எழுத்துப்பணியில் ஈடுபட்டார்.

 

1953 - மார்ச் 5இல் மூளையில் இரத்தக் குழாய் வெடித்ததால் மரணம் அடைந்தார்.

 

ருஷ்ய நவீன கால வரலாற்றினை மாற்றி எழுதிய வரலாற்று நாயகர்கள் லெனின் - அடுத்து ஸ்டாலின் என்று நாம் துணிந்து கூறலாம்.

 

Add new comment

13 + 6 =