பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள்முருகன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review
“தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.
பெருமாள்முருகனின் பத்தாவது நாவல் பூனாச்சி. தலைப்பைப் போல இது ஆடுகளின் கதை. கிழவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி "பனைமரம்" உயரமுள்ள ஒருவனால் கொடுப்போதோடு கதை தொடுங்குகிறது. கிழவனும் கிழவியும் அதற்கு "பூனாச்சி" என்று பெயர் சூட்டுகின்றனர். இந்த நாவல் பூனாச்சியின் பார்வையில் விரிகிறது.
கிழவி பூனாச்சியை மகளாக வளர்கிறாள். பூனாச்சியும் அவர்களில் ஒருவளாக கருதுகிறாள். இக்கதையில் ஆடுகள்தான் அதிகம் பேசுகின்றன. கதை நடக்கும் இடம் அசுரலோகம். பூனாச்சியின் பாசம், பயம் காதல், ஏக்கம், பிரிவு, தாய்மை என்று அனைத்து உணர்ச்சிகளும் இக்கதையில் இடம்பெற்றுள்ளது. அவள் வளர வளர கிழவனும் கிழவியும் பஞ்சத்தில் அடிப்பட்டு உணவுக்கே திண்டாட்டம் வர ஆரம்பிக்கிறது. பூனாச்சி ஏழு குட்டிகள் ஈன்றாள். ஆனால் ஒன்றைக் கூட அவளால் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அதை விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை. ஏழு குட்டிகளின் பிறப்பு ஒரு பெரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
வாயிருப்பது மூடிக்கொள்ள, கையிருப்பது கும்பிடுபோட, காலிருப்பது மண்டியிட, முதுகிருப்பது குனிய, உடலிருப்பது ஒடுங்க.
ஏழை எளியவரைத்தான் அதிகாரிகள் அதிகம் துன்புறுத்துவார்கள் என்பதை மிக அழகாக குட்டிகள் பிறந்த பிறகு நடக்கும் நிகழிச்சிகளால் எடுத்துக்காட்டியுள்ளார். அதுவும் ஊடகங்களின் நடத்தையை இதைவிட யாரும் பகடி செய்ய முடியாது. ஆடுகள் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ விரும்புகிறது. ஆனால் வாழ முடியவில்லை அதேதான் மனிதர்களும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களும் தாங்கள் விருப்பம்போல் வாழ முடியவில்லை. செல்வம் கொண்டுவந்த பூனாச்சி வறட்சியின் காரணத்தால் என்ன ஆனாள் என்பது தான் முடிவு.
மொத்த நாவலுமே பகடி எனலாம். பலவிதமான கதாபாத்திரங்கள் பலரை நினைவு படுத்துகிறது. ஆடுகளுக்கு இணை தேடுவது, கிழவன் கிழவியின் உரையாடல்கள் அதிகாரிகளின் உரையாடல்கள் என அனைத்தும் ஒரு விதமான பகடி. பெருமாள்முருகனின் அதே சுவாரசியமான எழுத்து வாசிப்பை எளிதாக்குகிறது. வாசிக்கலாம்.