செல்லும் இடமெல்லாம் நன்மை செய்தால் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
துன்பங்கள் வழியாகவே பிறரின் துன்பங்களை உணர முடியும்.
சுபாஷினி மிஸ்திரி அவர்களுக்குத் தற்போது 70 வயதுக்குமேல் ஆகிறது. சுபாஷினிக்கு 23 வயதானபோது இவர் தனது கணவர் சந்திரா ஒருநாள் வயிற்று வலியால் துடிக்க, சுபாஷினி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அது ஓர் அரசு மருத்துவமனை என்றாலும், அங்கிருந்தவர்கள் இவரிடம் பணம் எதிர்பார்த்தார்கள். சுபாஷினியிடம் பணம் இல்லாததால் அவரது கணவரை யாரும் கவனிக்கவில்லை. அவர் வலியால் துடிதுடித்து இறந்துபோனார்.
அந்நேரத்தில் சுபாஷினி அவர்களின் மனதில் ஒரு முடிவு உருவானது. ஒருவர் ஏழை என்ற ஒரே காரணத்திற்காக, அவர் தமது அன்பு உறவின் மரணத்தைக் காணக்கூடாது என்பதே அம்முடிவு. தான் எப்படியும் ஒரு மருத்துவமனையை எழுப்பி, அங்கு ஏழைகளுக்கு இலவசமாக உதவிகள் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அவரது முடிவைக் கேட்ட பலரும் அவரை எள்ளி நகையாடினர். வீதியில் காய்கறி விற்கும் சுபாஷினி ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் அவரால் ஒரு மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியாது எனச் சொல்லி வந்தனர்.
சுபாஷினி இந்த முடிவு எடுத்தபின் இருபது ஆண்டுகள் செங்கல் சூளையில் அயராது உழைத்தார். தன் மகன் அஜய் மிஸ்திரியை மருத்துவம் படிக்க வைத்தார். இவ்விருவரின் தளராத முயற்சியால் 1992ஆம் ஆண்டு ஓர் ஏக்கர் நிலத்தை வாங்கி, அவ்விடத்தில், மருத்துவமனை ஒன்றைக் கட்டி எழுப்பினார். இன்றும் கொல்கத்தாவில் ஹான்சுபுகுரில் உயர்ந்து நிற்கிறது இந்த மனிதாபிமான மருத்துவமனை.
கட்டடம் என்ற அளவிலோ, மருத்துவ வசதிகள் என்ற அளவிலோ அம்மருத்துவமனை பிரமாண்டமாக உயரவில்லை. ஆனால், வறியோரின் மனதில் 'மனிதாபிமான மருத்துவமனை' ஒரு கோயிலாக உயர்ந்து நிற்கிறது.
நலமானதை மக்களுக்கு அளிக்கப் பரந்த பார்வையுடன் உழைக்கிறவர்கள் நானிலம் போற்ற வாழ்வார்கள்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
