என் தாய்க்குப் பிறந்த நாள் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

வழியிலே ஒரு பூக்கடை. அக்கடை முன் தன் காரை நிறுத்தி, கடைக்குள் சென்று முகவரியைக் கொடுத்து, பணமும் கொடுத்து, முதியோர் இல்லத்தில் தமது 75 - வது பிறந்த நாள் கொண்டாடும் தனது தாய்க்கு மலர்க்கொத்தை அனுப்பச் சொல்லிவிட்டு, வெளியே வந்தான் பிரபு. சாலையின் ஓரத்தில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருந்தாள். அருகில் சென்று விசாரித்தபோது அச்சிறுமி சொன்னாள், 'என் அம்மாவுக்கு ஒரு பூ வாங்கவேண்டும், ஒரு பூவின் விலை 2 ரூபாய் சொல்கிறார்கள். ஆனால், என்னிடம் ஒரு ரூபாய்தான் இருக்கிறது" என்று.

அச்சிறுமியின் கையைப் பிடித்துக் கடையினுள் அழைத்துச்சென்ற பிரபு, ஒரு பூவை வாங்கிக் கொடுத்ததுடன், அவளை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறினார். அவளும் காரில் ஏறிக்கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பகுதியைச் சொல்லி, அங்குக் காரை விடச் சொன்னாள். சிறுமி சொன்ன இடத்தைப் பார்த்ததுமே ஒரு நிமிடம் திகைத்துப்போனான் பிரபு. ஆம்! அது ஒரு மயானம். அங்குச் சென்று, புதிதாகத் தோன்றியிருந்த ஒரு கல்லறையில் அந்தப் பூவை வைத்தாள் அச்சிறுமி. கல்லறை மண் இன்னும் காய்ந்திருக்கவில்லை. நிச்சயமாக இந்தப் பெண்ணின் அம்மா இறந்து இரண்டு அல்லது, மூன்று நாள்கள்தான் ஆகியிருக்க வேண்டும். அந்தச் சிறுமியின் தாய்ப்பாசத்தைக் கண்டதும் பிரபுவின் கண்கள் கலங்கின.

நேராக அந்தப் பூக்கடைக்குச் சென்று, தான் அனுப்பச் சொன்ன மலர்க்கொத்தை அனுப்பவேண்டாம் எனக் கூறிவிட்டு, மலர்க்கொத்து ஒன்றைக் கையில் வாங்கிக்கொண்டு, 250 மைல் தூரத்தில் உள்ள தன் தாயைப் பார்க்கக் காரை ஓட்டினார் பிரபு.

அருகில் இருக்கும்போதே அள்ளிக்கொள்.
தொலைந்து போனபின் தேடாதே.

அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு...!

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image