அஞ்சம் தவிர்ப்போருக்கு அமைதி அருளப்படும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

02 ஜூலை 2024 
பொதுக்காலம் 13 ஆம் வாரம் - செவ்வாய்
ஆமோஸ் 3: 1-8; 4: 11-12
2 திமொத்தேயு
மத்தேயு  8: 23-27
 

அஞ்சம் தவிர்ப்போருக்கு  அமைதி அருளப்படும்!
  
 
முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினர் வட நாடான இஸ்ரேலுக்கு எதிராக இறைவாக்குரைக்கிறார். இவர் தெற்கு நாடான யூதேயாவைச் சேர்ந்தவர். ஆனால், கடவுள் இவரை அழைத்து  வட நாடானா இஸ்ரயேலுக்கு இறைவாக்குரைக்க அனுப்புகிறார்.

இஸ்ரயேலின் அண்டை நாடுகளின் நடத்தைக்காக அவர்களைக் கண்டித்த பிறகு,  கடவுள் எவ்வாறு தாம் தேர்ந்துகொண்ட  மக்களுக்கு என்று  கானான் நாட்டை வழங்கினார் என்றும்  அதில்  குடியேறியதும்  மக்களும் குறிப்பாக அவர்களின் தலைவர்களும், அரசர்களும், குருக்களும்  கடவுளிடமிருந்து விலகிச் சென்றதையும் விவரிக்கிறார். 

கடவுள் அவர்களுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையை மதிக்காமல், அதனைப் புறக்கணித்து விலகிச் சென்றதால்   இஸ்ரயேல்  வீழ்ச்சியுறும்  என்றும், எல்லா மக்களும்  நாடு கடத்தப்படுவர் என்றும் எச்சரிக்கிறார். சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்தது போல வட நாடான இஸ்ரயேலின் அழிவைக் கடவுள்  அனுமதிக்கிறார் என்றும் வட நாட்டினருக்கு  எடுத்துரைக்கினார்.


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுடன் படகில் ஏறி கலிலேயா கடலின் குறுக்கே புறப்பட்டார்.  நீண்ட மறையுரை மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றால் சோர்வடைந்த இயேசு, புயல் படகைத் தாக்கினாலும், படகில் அயர்ந்து  தூங்கிக்கொண்டிருந்தார்.  உயிருக்குப் பயந்த  சீடர்கள் அவரை எழுப்புகிறார்கள். எழுந்த இயேசு, தனது சீடர்களின் நம்பிக்கையின்மைக்காக   “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கூறி  காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. 

இயற்கையும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்ததைக் கண்ட மக்கள் வியப்பில் மூழ்கினர்.


சிந்தனைக்கு.


நற்செய்தியில் படகு தள்ளாடுகிறது, மூழ்கிவிடக்கூடும் என்று சீடர்கள் அஞ்சினார்கள். இந்த நிகழ்வில், சீடர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்கள் நம்பிக்கை வைத்து இயேசுவை எழுப்பாமல் இருந்திருக்க வேண்டுமா? அல்லது உயிருக்கு அஞ்சி அவரை எழுப்பியது சரியா? சில சமயங்களில் நாம் அனைவரும் அதிகமாக அஞ்சுகிறோம். பயம், பயம் எதற்கெடுத்தாலும் பயம். ஏனெனில் ஆண்டவரில் நமது நம்பிக்கை முழுமையானது அல்ல. முழுமையை நோக்கி நாளுக்கு நாள் பயணிக்கிறோம். எனவே, சோதனைகளில் தள்ளாடுகிறோம். 

படகை நமது குடும்பத்திற்கு ஒப்பிடலாம். துன்பத்திற்கு அடுத்து துன்பம், ஒன்றன் பின் ஒன்றாக வரும்போது நாம் இலகுவாக சோர்வடைகிறோம், அஞ்சுகிறோம். எதுவும் எதிர்பாராதது நிகழ்ந்திடுமோ என்று நிலைக்குலைந்து போகிறோம். நிலைமை மோசமடையும் தருவாயில், சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களைக் கடிந்துகொண்டாலும் கைவிடவில்லை. 

இதைதான் பேதுரு ஒருமுறை ‘சீமோன் பேதுரு  “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ (யோவான் 6:68) என்று அறிக்கையிட்டார், இயேசுவில் சரண்டைந்தார். 

“ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்”  என சீடர்கள் கதறியது,  பய உணர்ச்சியின்  வார்த்தைகளாகத் தோன்றினாலும்,  நம்பிக்கையற்ற  சீடர்களை அவர் திட்டினார் என்றால் அது அவர்கள் மேல் அவர் கொண்ட உரிமையின் வெளிப்பாடு. ஆனால், அவர்களைக் கைவிடவில்லை. இயேசுவை நம்பினோர் ஒருபோது கைவிடப்படார்.

மேற்கண்ட படகு நிகழ்வில், இயேசு தங்களோடு இருக்கிறார் என்பதை தொடக்கத்தில் சீடர்கள் ஊணர்ந்திடவில்லை. இதுதான் மிகவும் வியப்பாக உள்ளது.  நாமும் பல நேரங்களில் அவர்கைளப் போல்தான் இருக்கின்றோம்.  ‘உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாமல்,  தினசரி ராசி பலன் தேடுவதிலும், நாள் நட்சத்திரம் மற்றும்  நல்ல நேரம் பார்ப்பதிலும்  நேரத்தைச் செலவிடுகிறோம். ஞாயிற்றுக்கிழமையானால், ஆண்டவரைத் தேடி ஆலயம் போகிறோம். 

முதல் வாசகத்தில், கடவுளுடனான  உடன்படிக்கைக்கு உண்மையாக இருக்கும்படி இஸ்ரயேலரை  ஆமோஸ் எச்சரித்தார். நமது நம்பிக்கையின்மையால் நாமும் இன்று எச்சரிக்கப்படுகிறோம். 

துன்பமும் துயரமும் நிரந்தரம் அல்ல. அவை ஒருநாள் கடந்துபோகும். இயேசு அவற்றைக் களைந்து அமைதி நல்குவார். காற்றுக்கு அஞ்சி அலறியடித்துக் கூச்சலிட்ட சீடர்கள் அதே அமைதியைப் படகில் அனுபவித்தார்கள். இயேசு நம்மில் வாழ்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எந்தத் துன்பமும் ஒரு பிரச்சனையாகத்  தெரியாது. இயேசு நமக்குக் கடவுளாக வந்தவர் என்பதைவிட அவர் நமக்கு வாழ்வளிக்க வந்தாராவார்.


இறைவேண்டல்.


வாழ்வை அளிக்கும் வல்லவரான ஆண்டவரே, அவ்வப்போது என் வாழ்வில் எழுகின்ற கொந்தளிப்பைப் போக்கி எனக்கு மன அமைதியை அளித்தருள்வீராக. ஆமென். 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452